சாகரா பெருநகருக்கு ஐந்து கல் தொலைவில் கெலடி நகரம். நகர வெளிப்பரப்பில் சாரட் வந்து நின்றபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. நகரில் புதியதாக வருகிற பயணிகள், வர்த்தகத்தின் பொருட்டு வந்தவர்கள், சுவாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் என்று பலரையும் ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து தகுதியான நபர் என்று தட்டுப்பட்டாலே உள்ளே போக அனுமதி இலச்சினை வழங்குவதை சீராகச் செய்து கொண்டிருந்தார்கள் அதற்கான ஊழியர்கள்.
நேமிநாதன் தான் வியாபரத்திற்காக, அதுவும் பவளமும் முத்தும் வாங்க ஜெருஸொப்பாவில் இருந்து வருவதாகச் சொன்னபோது புன்முறுவலோடு அந்த அதிகாரி, ”ஜெருஸொப்பா மிளகுராணியின் அபிமான புத்திரன் நேமிநாதர் வாழ்க வாழ்க” என்று வாழ்த்தினான்.
ஆக, கன்னத்தில் மரு வைத்துக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறுவேடம் பூண்டு உள்ளே போய், வெளியேறலாம் என்பதெல்லாம் சூரவீரதீரக் கதைகளிலும் கதைப் பாட்டுகளிலும் வேண்டுமானல் நடக்கும். நேமிநாதனாக உள்ளே வந்ததால் சந்திக்க வேண்டியவர் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய கெலடி மாநில அரசபிரான் லட்சம் ஸ்ரீ வெங்கடப்ப நாயக்கர் அவர்களை என்று பதிய வேண்டிப் போனது.
தனி இலச்சனை நேமிநாதனுக்குத் தரப்பட்டதோடு அவனை அரண்மனைக்கு வழிநடத்த இரு குதிரை வீரர்களும் சாரட்டுக்கு முன்னும் பின்னுமாக வர அனுப்பப் பட்டார்கள்.
அவர்களில் மூப்பனாக முகம் தோன்றும் குதிரைவீரன் நேமிநாதனிடம் ”ஐயா ராமேஸ்வர, வீரபத்ர ஆலயங்கள் ஒரு நிமிடம் தரிசித்து அரண்மனை போகலாமா? நீங்கள் வந்த காரியம் ஜெயமாகும்” என்று வினயமாக வினவினான். வந்த காரியம் அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருக்காதென்றே நேமிநாதன் நம்பினான்.
“நல்ல காரியம் நினைவு படுத்தினீர், ஒரு வினாடி என்ன ஒரு மணி நேரம் கூட வழிபட வேணும்தான். அரசர் எனக்காகக் காத்திருக்கக் கூடாது. அரைமணி நேரத்தில் ஆண்டவனை உள்வாங்குவோம் வாரும்” என கோவில் வளாகத்துக்குப் போனது அந்தச் சிறிய ஊர்வலம்.
சாரட்டை கவனத்தை ஈர்க்காத ஆலமரத்தரைக்குப் பின்னால் நிறுத்தி, தலையில் உத்தரீயத்தை தலைப்பாகையாகக் கட்டி கழுத்தில் பெரிய உருத்திராட்ச மாலையை பெட்டியில் இருந்து எடுத்து அணிந்து, முகத்தைத் தூய குளிர்நீரால் கழுவி, வீபுதியைத் தண்ணீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும் தோளிலும் மார்பிலும் தரித்துச் சைவனாகக் கோவில் வலம்வந்து வணங்கப் புறப்பட்டான் நேமிநாதன்.
நூறு வருடம் முன்னால் என்றால் சமணர்கள் சைவக் கோவிலில் வணங்குவது அரிதானது. அனல் வாதம், புனல் வாதம் என்று மோதி வென்று தோற்று, வென்றோர், கழுவேற்றக்கூட செய்தார்கள் தோற்றோரை என்று நேமிநாதன் கேட்டிருக்கிறான்.
அந்த மதவிரோதக் காலத்தை எதற்காகத் திரும்பக் கொண்டுவர வேண்டும்? கார்டல் நிதிக்குழுமம் சொன்னால் சமண பசதியில் மீனை விட்டெறிந்து கோகர்ணத்து ஆலயத்தில் நரகல் சட்டியை வீசி சமண சைவ விரோதத்தைக் கொண்டு வர இந்த மண்ணில் எவ்வளவு, எப்போது முடியும் என்று நேமிநாதனுக்குப் புரியவில்லை.
அவன் மிளகு அரசன் ஆக, நூறு தலை உருளணும் என்றால் அது வேண்டாம்.
நேமிநாதன் சட்டென்று அதிர்ந்து தன் சிந்தனை தன்னை அறியாமல் நல்ல வழியில் போவதெப்படி எனப் பரபரப்பாக நோக்க, அவனோடு ஒட்டி நடந்து வலத்திலொருத்தரும், இடத்திலொருத்தருமாக, இடுப்பில் கைத்தறித் துண்டு மட்டும் அணிந்த கருத்த இருவர் மெல்ல வருவது தெரிந்தது.
இல்லை இவர்கள் நடக்கிற வர்க்கமில்லை மிதக்கும் வடிவங்கள். உடல் இருந்து உயிர் உள்ளே பிணைந்திருந்து நகமும் சதையும் ரத்தமும் கொழுப்பும் மயிரும் நவ துவாரமுமாக சுவாசித்து உலவி வந்து உயிர் உடலை விட்டு நீங்கி ஆவி ரூபமாக இன்னும் உலவுகிறவர்கள்.
நேமிநாதன் அவர்களை மனதில் வணங்கி, ”கோவில் போகிறேன், நீங்கள் தொல்லைப்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என் பாட்டன் பூட்டன் வகையறா நல்லாவிகளே” என்று அன்போடு கோரினான்.
”ராஜகுமாரரே, நீங்கள் கோவில் போய் தரிசித்து வாரும். நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று அவர்கள் சாரட்டில் ஏறும் போது அடுத்து நின்ற குதிரைகள் இவர்களை இனம் கண்டு நடுங்கி சேணம் குலுங்கி நின்றன. கோவிலில் சங்காபிஷேகம் நடக்கிறதாக உள்ளே அவசரமாகப் போய்க் கொண்டிருந்த சிவாசாரியர் ஒருவர் நேமிநாதனிடம் தெரிவித்தபடி நடந்தார்.
நேமிநாதன் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி எடுத்துக்கொண்டு உள்ளே போக, மணிகள் நல்ல சகுனம் என்று சொல்லி ஒரே நேரத்தில் முழங்கின.
ராமேஸ்வரன் சந்நிதிக் குருக்கள் நேமிநாதன் சொன்னபடி ஜெர்ஸுப்பா என்ற பெயரில் அர்ச்சனை செய்விக்க முனைந்தார். வாசலில் இருந்து தன் நாவைச் செலுத்திக் குரல் உண்டாக்கியது யாரென்று நேமிநாதன் அறிவான்.
pic medieval war
ack wikipedia.org