An Italian traveller meets with a barefooted Indian Queen – மிளகு பெருநாவலில் இருந்து

குதிரைகள் தண்ணீர் அருந்தவும் நாங்கள் சற்றே இளைப்பாறவும் சாலை ஓரத் தோப்பில் சாரட்கள் நிற்கின்றன. நேரம் என்ன என்று கேட்பதற்கு முன் பகல் ஒரு மணி ஆகப் போகிறது. உள்ளாலில் இருந்து ஒண்ணரைக்கல் வெளியே இருக்கிறோம் என்று பாதுகாப்பு வீரர் மரியாதையோடு சொல்லி நிற்கிறார் – எதாவது வேணுமா அம்மா?

வேணும் என்று சொல்ல வாயெடுக்கிறேன். வேணாம். அவர்கள் அத்தனை ஆண்களும் தோப்பின் மரங்களுக்குப் பின்னாலும் கொஞ்ச தூரம் நடந்து பழைய ஆளில்லாத கட்டடங்களின் ஒரமாகவும் குத்தவைத்து சிறுநீர் கழிப்பதைப் பார்த்து முகம் திருப்பிக் கொள்கிறேன்.

உள்ளால் மகாராணி உட்கார்ந்து நீர்பிரிய முடியாது. பெண்களுக்கே உரிய சுகவீனம். பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். வேறு வழி? தாகம் எடுத்தாலும் தண்ணீர் பருகுவதை ஒத்தி வைக்கிறேன். அரசு மாளிகை போய்ச் சேர்ந்துதான் தண்ணீரும், மோருமெல்லாம். அற்பசங்கை முடித்துத்தான் எல்லாம்.

இதோ வந்தாகி விட்டது. இன்னும் கால் கல் தொலைவுதான். சாரட்டை நிறுத்தி நடக்கத் தொடங்குகிறேன். கூடவே பாதுகாப்பு அதிகாரிகளும், ஆட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வருகிறார்கள். தலையில் பருத்தித் துணியால் முக்காடு போட்டுக் கொள்கிறேன். மார்பு மூடி தலையும் மூடும் நீள்துணி இது. காலில் செருப்பின்றி  வேகமாக நடக்கிறேன்.   என் கூட்டம் வேகமாக பின் தொடர்கிறது.

சாலை ஓரத்தில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் எதிர்ப்படுகிறான். கூடவே அவன் அமர்த்திக்கொண்டு வந்த துவிபாஷி.

நான் பியத்ரோ தெல்லா வல்லே. வெனிஸ் நகரில் இருந்து வருகிறேன்.

அவன் சொல்வது, துவிபாஷி மூலம் உடனே மொழிபெயர்ப்பாகிறது.

வெனிஸ்ஸில் இருந்து தனியாகவா வருகிறீர்கள்? கடவுள் உண்டம்மா என்னோடு என்கிறான் அவன். இளைஞன் தான்.

இதென்ன மொழி நீங்கள் பேசுவது? இத்தாலி அம்மா.

எங்கெல்லாம் இந்துஸ்தானத்தில் போயிருக்கிறீர்கள்? கண்ட்ஹர், லக்னௌ, தில்லி, மத்துரா அவன் அடுக்கிப் போகிறான். எனக்கு மாளிகைக்குள் போகும் அவசரம். அவனைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.

இத்தனை பெரிய நகரங்களுக்குப் போய்விட்டு இந்தப் பொட்டல்காட்டுக்கு என்ன காண வந்தீர்கள் என்று நடந்தபடி கேட்கிறேன். அரசியாக இருந்து  காலில் காலணி கூட இல்லாமல் நடந்து வருகிறீர்களே அந்த உலக ஆச்சரியமான நிகழ்வைக் காணத்தான் வந்தேன் என்கிறான்.

பார்த்தாயிற்று தானே, செல்லலாமா? நான் இன்னும் சில அடிகள் நடந்து மாளிகையில் நுழையும் முன் அவனுக்கு இன்றும் நாளையும் தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யவும் அரச மாளிகை அலுவலர்களிடம் முணுமுணுக்கிறேன்.

நன்றி சொல்லும் அவனிடம் நான் கழிப்பறைக்கு நடக்கும் முன் சொல்கிறேன் – இது என் பிறந்த மண். காலணி இட்டு இதைப் பிரிய மாட்டேன். முடிந்தால் உருண்டு கொண்டே வருவேன் எங்கும். என் மண் என் மக்கள்.

அவன் கரவொலி செய்தது பின்னால் கேட்கிறது. கூட வந்த மற்றவர்களும்.

அரசி என்றால் நாளைக்கு வரலாற்றில் இடம் பெற இதெல்லாம் சொல்லவும் செய்யவும் வேண்டித்தான் இருக்கிறது.

படம் – இத்தாலிய ஓவியத்தின் அடிப்படையில் வரையப்பட்ட ராணி அப்பக்காவும் இத்தாலியப் பயணியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன