நான் நேமிநாதன்.
காற்றில் அலைக்கழிக்கப்பட்டு துடுப்புகள் தவறி விழுந்து கடலோடிய படகு போல் நாற்பது வயதிலும் இலக்கு இன்றிச் சுற்றிச் சுற்றி வருகிறேன். அலைகள் என்னைச் சுற்றிச் சீறிச் சினந்து எழும்பிப் படகைக் கவிழ்த்து என்னையும் நீர்ப்பெருக்கில் அடித்துப் போகவைக்க ஆடிவருகின்றன. நேமிநாதன் துரோகி என்று அவை ஏசலைக் குரலுயர்த்தி ஒரே குரலில் பாடுகின்றன. காதுகளைப் பொத்திக்கொள்ள வைக்கும் இரைச்சல். திட்டு. வசவு. துரோகி என்கின்றன அவை என்னைத் திரும்பத் திரும்ப.
சென்னபைரதேவி மகாராணியின் மகன் என்ற பெருமையும் சங்கடமும் எனக்கு வாய்த்தன என்று இந்த ஒரு வருடமாகத்தான் தெரிந்து கொண்டேன். வளர்ப்பு மகன் என்ற உறவை யாராவது என் காதுபடச் சொன்னால், சத்தம் இன்றி உதடுகளை அசைத்து உச்சரித்தாலும் எனக்கு உட்செவியில் கேட்டு அருவருப்பு ஏற்படுகிறது.
வளர்ப்பு நாய், வளர்ப்புப் பூனை போல் வளர்ப்பு மகன் என்பது ஐந்தறிவு கொண்ட ஒரு பிராணியாக என்னைக் காட்டுகிறது. நேராநேரத்துக்கு சோறு போட்டு, தண்ணீர் கொடுத்து, உடுக்க உடை கொடுத்து, குளிக்க வென்னீர் விளம்பி வைக்க, குளித்துவிட வேலைக்காரர்களை நியமித்து, கழுத்தில் ஒரு சங்கிலியையும் போட்டுக் கட்டி வைத்தால் தான் வளர முடியும் போல் இருக்கிறது.
அம்மா அம்மா என்று எஜமானியம்மாளின் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் விசுவாசமும் பிரியமுமாக மனதில் வாலாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாயே, எப்போது விலகி ஓடி வந்தாய் என்று என்னைத் தெரிந்தவர்கள் மட்டுமின்றி தெரியாதவர்களும் கேட்கிறார்கள். ஏதோ அந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலை வைத்து என்னைப் பார்த்து கோபிப்பதா, பரிதாபப்படுவதா அல்லது வெறுத்து எச்சில் உமிழ்வதா என்று தீர்மானத்துக்கு வர அது அத்தியாவசியமான தகவல் என்ற நிச்சயம் செய்துகொண்டு. சொல்கிறேன். அதைக் கேட்டு இத்தனை அற்பமான காரணத்துக்காகவா வளர்த்த அன்னை மேல் வன்மம் வளர்த்துக் கொண்டு வழிப் பிரிவு ஏற்படுத்திக் கொண்டாய் என்று சிரித்தாலும் எனக்குச் சம்மதமே.
எல்லாம் என் வளர்ப்பு தாயார் மிளகு மகாராணியின் அறுபதாம் பிறந்தநாளன்று தொடங்கியது. அந்தப் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாட நானும் ரஞ்சனாவும் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே திட்டமிடத் தொடங்கி விட்டோம்.
பாக்குமரப் பட்டையிலும் வாழைப் பட்டையிலும் குடுவை செய்து அதில் அதுவும் இதுவுமாக உணவைத் தனித்தனியாக வைத்து மேலே அதே பட்டையை வளைத்து மூடி பிறந்தநாள் விருந்தை ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் ஏழைப்பட்ட அத்தனை பேருக்கும் விநியோகித்தேன். மிகப் பெரிய வரவேற்பு அதற்கு இருந்தது.
ஹொன்னாவரில் விருந்து விநியோகிக்கும்போது ஒரு தெரு விடாமல் நான் என் சாரட்டில் போய் நின்று ஏதாவது குறைபாடு இருக்கிறதா, மக்கள் எப்படி இதை எதிர்கொண்டு பாராட்டுகிறார்கள் என்று கவனித்தேன்.
எல்லா இடத்திலும் பாராட்டு தான். இவ்வளவு புலவுச் சோறா? அதுவும் நெய் பெய்து, கூடவே இனிப்பும் வைத்து என்றுதான் உண்ண முடியாமல் வயிறு நிறைந்து வாழ்த்திய வாழ்த்தொலிதான் எங்கும்.
அந்த வார்த்தைகள் எல்லாம் மிளகுராணியம்மா தீர்க்காயுசா இருக்கட்டும் என்று மட்டும் வாழ்த்தின. நேமிநாதனா? யாரவன்?