–
குழந்தை மெல்ல தலை முதலில் வெளிவரப் பார்த்து நின்ற மருத்துவச்சி ஆச்சரியத்தைச் சொல்லும் குரல் எழுப்பினாள். எத்தனை தடவை பிரசவிக்கப் பண்ணினாலும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு அது ஆனந்தகரமும் ஆச்சரியமும் தான் என்று அவள் பார்வை சொன்னது.
குழந்தை தலைமேல் கை வெச்சுக்கிட்டிருக்கு. பாருங்க மருமகனே. அதை அங்கே இருந்து இடுப்புக்கு கொண்டு வரணும் என்றபடி சிசுவின் கையைத் தலையில் இருந்து அகற்ற மருத்துவச்சி தன் கையை அதன் அருகே கொண்டு போ0னாள். பிஞ்சு விரல்கள் உடனே அவள் கைவிரலைப் பற்றிக்கொண்டு விட்டன.
சுகப் பிரசவம். மிங்கு களைப்பில் மூடிக் கொள்ளும் கண்களை சிரமத்தோடு திறந்து பார்க்க அவளுக்கு முன் வைத்தியர் குழந்தையை ஸ்பர்ஸித்து ஆண் குழந்தை என்று அறிவிக்கிறார். சின்ன அரிந்தம் பிறந்துட்டான் என்று ஆனந்தமாக அறிவிக்கிறார். மிங்குவின் கண்கள் அசதியில் மூடியுள்ளன.
மருத்துவச்சி ராஜம்மா தன் விரலை சிசுவின் விரல் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள பூவை கையில் இருந்து எடுப்பது போல் விலக்கப் பார்க்கிறாள். சின்ன அரிந்தம் கையை விடுவேனா என்று முரண்டு பண்ணி அழுகிறான்.
மருமகனே தொப்புள் கொடியை எடுத்துடறீங்களா? நான் தான் எடுப்பேன். உங்க மகன் எழுந்திருக்க விடமாட்டேன்னு கையைப் பிடிச்சுட்டிருக்கானே.
அவள் கேட்கும் போதே மருத்துவப் பெட்டியில் இருந்து சுத்தம் செய்து வைத்திருந்த கத்தரியை எடுக்கிறார் வைத்தியர். லாகவமாக தொப்புள் கொடியை வெட்டி அகற்றி தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்.
குழந்தை விரல்களை விடுவிக்க அவற்றை இதமாகத் தடவுகிறாள் ராஜம்மா. ஒரு வினாடி சும்மா இருந்து மருத்துவச்சியின் விரல்களை அணைத்துப் பிடித்தபடியே அவை துவள்கின்றன.
நல்லபடிக்கு கொடி வெட்டிட்டீங்க மருமகனே, பாருங்க, என்ன செஞ்சாலும் உங்க மகன் என் கையை விட மாட்டேன்கிறானே என்ன பண்ணலாம்?
மருத்துவச்சி விசாரிக்கிறாள். வைத்தியர் மனதில் பல தீர்வுகள் எழுந்து வருகின்றன.
கைக்கு மேலே புறங்கையிலே ஒரு சொட்டு பாலை வைக்கலாம் என்கிறார் வைத்தியர். மிங்குவின் மார்பகத்தில் கை வைக்கிறார். உள்ளங்கையில் சில துளிகள் தாய்ப்பால். இதை வைக்கலாம் என்கிறார் வைத்தியர்.
இல்லே மருமகனே, தாய்ப்பால் பிறந்ததும் குடிக்கத்தான் முதல்லே தரணும். அதை புறங்கையிலே வைக்கறது பாலுக்குச் செய்யற அவமரியாதை என்று ஒரு ஓரமாக கையை விடுவித்துக் கொள்ளாமல் கட்டிலில் மலர்த்திய சிசுவின் அருகே உட்கார்கிறாள் மருத்துவச்சி.
மிங்குவை எழுப்பி பிள்ளைக்கு பால் தரச் சொல்லலாமே. வைத்தியர் கேட்கிறார்.
தூங்கறா பாவம். இதோ அவளா எழுந்துடுவா பொறுங்க மருமகனே. பூ விரல் என் கிழட்டு விரலைப் பிடிச்சு கன்னிப்போயிடப் போகுது. பாவம். நல்ல பிள்ளை இல்லியோ. பாட்டி கையை விடுடா தங்கம்.
வேறே என்ன பண்ணலாம் சொல்லுங்க ராஜம்மா அக்கா
சித்தெறும்பு கடிச்சதுலேயும் பத்திலே ஒரு பங்கு தான் சுள்ளுனு இருக்கணும். சின்னஞ்சிறுசு விரல் பொறுத்துக்கற மாதிரி லேசானதிலும் லேசானதா இருக்கணும்.
மருத்துவச்சி சொல்ல, சிக்கிமுக்கி கல்லிலே உரசி ஒரு சின்ன தீப்பொறி உண்டு பண்ணட்டா என்று கேட்கிறார் வைத்தியர்.
மங்களகரமான குழந்தை பிறப்பு நடந்திருக்கு. இனிப்பு கொடுத்து கொண்டாட வேண்டிய தருணம். தீப்பொறி எல்லாம் சூரிய அம்சம். இந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றது இல்லே. இதை அடுத்த வீட்டு நாராயணி அம்மாள் சொல்கிறாள்.
குழந்தை பிறந்தது தெரிந்து தெருவே வைத்தியர் வீட்டில் குழுமியிருக்கிறது.
Pic Pregnancy in art
Ack en.wikipedia.org