யட்சன் வந்த 1940 – ராமோஜியம் தொடக்கம் – பகுதிகள்

யட்சன் வந்த மதறாஸ் 1940

நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் ”இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார்” என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் லாலலா என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ”ராமோஜி, ஓ ராமோஜி! சற்று கவனி”.

”எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத?”, என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த நாவல் பழத்தைப் பொறுக்கியபடி.

“எல்லாம் செய்யலாம், நான் உதவி செய்யறேன், எழுது”, என்றான் யட்சன். நாவல் பழத்தின் இனிப்பு வாயில் கரைந்து துவர்ப்பு நாக்கில் படிய மென்றபடி சரி என்றேன்.

எங்கள் வம்சத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு ராமோஜி வருவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இருபது வருஷத்திலும் தம்பதி யாராவது தடுக்கிப் படுக்கையில் ஜோடியாக விழுந்து ஒரு ராமோஜி பிறக்காமல் இருந்ததில்லை. சிரமமில்லாமல் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு ராமோஜிக்கும் ஏதாவது விசேஷமாகப் பெயரோடு வரும். நான் பொடி ராமோஜி.

அநேகமாக எல்லா ராமோஜிக்கும் தகப்பன் பெயர் பத்துஜி என்ற பத்மநாபராவ் ஆக இருப்பதும் வாடிக்கை. பொடி ராமோஜி ராவான என்னுடைய ஆசைப் பெண்டாட்டி ரத்னா பாய். அவள் ராத்திரி ஒன்பதரை மணிக்குத் தொடங்கி ஏகதேசம் நடுராத்திரி வரை என் அருகிலிருந்து சல்லாபமாக வார்த்தை சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாது தான். பேசி, விளையாடி முடித்துக் களைத்து, நாலு இலவம்பஞ்சுத் தலகாணியும் பஞ்சு மெத்தையுமான ரெட்டைக் கட்டில் படுக்கையில் உறங்கப் போவோம்.

அவள் சுகமாக நித்திரை போக மூக்கு அடைப்பு இடைஞ்சல் செய்தது. அது நிவர்த்தியாக, ரத்னாவின் தீர்க்கமான எள்ளுப்பூ நாசியில் உறிஞ்சிட நான் ஜார்ஜ் டவுனில் பட்டணம் பொடி வாங்கி வந்ததை யாரோ விஷமக்காரன் அகடவிகடமான கதையாக எழுதப்போய் ஊரோடு பெரிய ஜனக்கூட்டம் ராமோஜி கதையை முழுசாகக் கேட்கிறது என்பதை யட்சன் சொல்லாமலேயே அறிவேன். எழுத எழுத ஊற்று மாதிரி இது ஊறி வரலாம்.

இருநூறு வருஷத்தில் பத்து ராமோஜிகளாவது பிறந்து சுவாசித்திருக்கலாம. அடுத்த ராமோஜிகள் வந்து கொண்டிருக்கலாம். எல்லோருடைய ராமோஜி கதைகளும் ஒன்றாக, இது என் ராமோஜியம்.

நான் கேட்டது, பார்த்தது, கேட்டவர்களும் பார்த்தவர்களும் சொல்லக் கேட்டது என்று கலந்து வரும் இந்த ராமோஜியம். சரித்திரப் புத்தகம் மாதிரி காலம் 1859, 1894, 1921, 1935 என்று வரிசையாகக் கடந்து போகும் வருஷங்களாக -நம்பர் போட்டு வராது. முன்னே பின்னே வர சாத்தியமுண்டு. கூறியது கூறலும் ஏற்படலாம்.

இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நடந்ததும் நடக்காததும் எதெல்லாம் என என்னிடம் கேட்டால் எதுவும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு ராமோஜி உண்டு.

நான் என் முப்பதாம் வயதில் இதை எழுதுகிறேன். இப்போது நடப்பது உலகமகா யுத்தக் காலம். இரண்டாவது உலகமகா யுத்தம் இது.

“இதற்கப்புறம் நகரும் கதையை உத்தேசித்தால் சொல்லலாம் தானே”, யட்சன் கேட்டான்.

“எதிர்காலம் ரொம்ப வேண்டாமே, அது தெரிந்தால் என்ன சுவாரசியம்”, என்றேன்.

எழுதும்போது அது இறந்த காலமாகியிருக்கும் என்றபடி நாவல் மரம் விட்டுப் பறந்தான் யட்சன்.

பெருமாள் செட்டி கடையில் காகிதம், நோட்டுப் புத்தகம் வாங்கினேன். கட்டைப் பேனா ரெண்டும் மசிக்கூடும், நீல மசிப்பொடியும் ப்ராட்வே சுப்பராயுலு நாயக்கர் கடையில் வாங்கினேன். ராமாமிர்தம் சீவல் கடையில் ஒரு பெரிய கிளாஸ் ரோஸ்மில்க் குடித்து சிரம பரிகாரம் செய்து கொண்டேன்.

லட்சுமண ஆசாரியாரிடம், முன்னே வைத்து சம்மணம் கொட்டி இருந்து எழுத ஒரு கணக்கப்பிள்ளை மேஜை பண்ணித் தரச் சொன்னேன். தேக்கில் வேணுமா, தேவதாரு மரமா, பல மரம் கலந்து வேணுமா என்று ஆசாரியார் கேட்க, என்னத்தை சொல்ல? மேஜைக்குள் காகிதம் வைக்க, பாதுகாப்பாகப் பணம் பூட்டி வைக்க, மசிப்புட்டி, விசிறி வைக்க என்றெல்லாம் ஏற்படுத்தி முன்னும் பின்னும் நகரும் தடுப்பு வேண்டியிருக்குமா என்றும் அவர் விசாரித்தார். கணக்கப்பிள்ளை மேஜையில் இத்தனை சூட்சுமம் இருக்குமென்று தெரியாமல் போனதே.

ரத்னா பாயிடம் கேட்டபோது எழுத மட்டுமான மேஜை போதும் என்று சொல்லிவிட்டாள். மேலும் தேக்கு செலவு பிடிக்கும் என்றாள். பொடி டப்பா அடைத்து சூரத்தில் இருந்து வந்த ஏழெட்டு லேசான மரப் பெட்டிகள் வீட்டு சேந்தியில் உண்டு. அதை எல்லாம் உபயோகித்து லேசான, அழகான கணக்குப்பிள்ளை மேஜை ஒன்றில்லை, ரெண்டு செய்யலாம் என்றாள் அவள்.

பார்க்க அத்தனை நேர்த்தியாக இருக்காதே, இருந்து கொண்டு எழுத சௌகரியப் படாதே, பொடி வாடை அடிக்குமே என்றேன். ரத்னா பாய் கேட்டாள் –

‘வாடை அடித்தால் என்ன போச்சு? நேர்த்தியாக இல்லை என்றால் தான் என்ன போச்சு? கணக்கப்பிள்ளை ஆள் அழகாக இருக்கிறாரா என்று பார்த்தா செட்டிமார் கடையில் கணக்கெழுத வேலைக்கு வைக்கிறார்கள்? மேஜை நேர்த்திக்கு யார் சர்ட்டிபிகேட் தரணும்? சௌகர்யப்பட என்ன இருக்கு? மேஜைமேல் குப்புறப் படுத்து யாரும் தூங்கப் போறதில்லே. முன்னால் உட்கார்ந்து காகிதம் வைத்து எழுத இடம் இருந்தால் போதும். அதுக்கு எதுக்கு தேவைக்கு அதிகமா செலவு செய்யணும்?”

அதுவும் சரிதான் என்று பட, லட்சுமண ஆசாரியாரிடம் சொன்னேன். முன்கூலி ஐந்து ரூபாயும் தந்தேன். பொடி அடைத்து வந்த காலி மரப்பெட்டிகளும் ஏழெட்டு நீண்ட ஆணிகளும் அவருடைய வாள்பட்டறைக்கு எடுத்துப் போகப்பட்டன. கொடுத்து ஒரு மாதம் நடையாய் நடந்து ஒரு வழியாக மேஜை வந்தது. மேஜைகள் வந்தன.

சும்மா சொல்லக் கூடாது. சவுகரியமான மேஜை தான். ரத்னா பாய் பட்டணம் பொடியோடு உட்கார்ந்து நூறு பக்க நோட்டில் முதல் பக்கம் முழுக்க ஸ்ரீராமஜெயமும் மற்ற ஸ்லோகங்களும் எழுதி ஆரம்பித்துத்தர, அடுத்த பக்கத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன