ராமோஜியம் நாவலை எழுதியபோது – 1

ராமோஜியம் நாவலுக்கும் அதற்கு முந்திய 1975 நாவலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. 1975 எமர்ஜென்சி காலகட்டத்தில் நிகழ்வது. எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலை காலகட்டத்தைப் பற்றியதல்ல அது.

அதேபோல் ராமோஜியம் நாவலின் பெரும்பகுதி 1940-களில் நிகழ்வது. 1940-களின் முக்கிய நிகழ்வான சுதந்திரப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குக் களன் அமைத்துத் தரும். காந்திஜியும், கஸ்தூர்பாவும், சக்கரை செட்டியாரும், சர்ச்சிலும், வேவல் துரையும், சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் துரையும், கலாசார மைல்கற்களான சபாபதி சினிமாவும், ஆல் இந்தியா ரேடியோவில் அரியக்குடி கச்சேரியும், கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால் தட்டுப்படும் எட்டு வயது ஸ்ரீரங்கம் ரங்கராஜனும், மோகமுள் யமுனாவும், பாபுவும், ராஜமும் வந்து போவதும் 1930-40களின் சமகாலத் தன்மையை ஏற்படுத்தவும் செறிவாக்கவும்தான்.

நாவலில் சில அத்தியாயங்கள் 17-ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜியைத் தொடர்ந்து ராஜாராம் போன்ஸ்லே மராத்திய அரசைக் கட்டி நிறுத்தக் கடுமையான பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்த காலம். மிகச் சிறந்த மராட்டா கடற்படைத் தலைவன் கனோஜி ஆங்க்ரே சிறப்படைந்திருந்த காலமும் அதுதான்.

18-ம் நூற்றாண்டில் நாவலின் ஒரு நீண்ட அத்தியாயமாக புதுச்சேரி நிகழ்வுகள் வரும். ராமநாடகம் எழுதி அருணாசலக் கவிராயர் பிரஞ்ச் கவர்னர் தியூப்ளெயுடைய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்திப்பது அந்த அத்தியாயத்தில். ஆனந்தரங்கம் பிள்ளையின் பிறந்த, மறைந்த தேதிகள் வரலாற்றின் மூலம் தெரிய வருகின்றன. ஆனால் அருணாசலக் கவிராயர் குறித்த செய்திகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்களில் அவர் இறைவனடி சேர்ந்திருக்கிறார். 1740-களில் இரண்டு பேரும் இருந்திருப்பதால் நாவலில் அந்தக் காலகட்டத்தில் ராமநாடகம் புதுவையில் இரண்டாம் அரங்கேற்றம் (முதலில் திருவரங்கத்தில் அரங்கேறியது) காண்கிறது.

இந்த அத்தியாயத்திற்கான மொழி ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு மொழியை அடிப்படியாக வைத்து நான் கதைக்காகப் புனைந்து கொண்டது. எனக்குப் பிடித்தமான பிரயோகங்கள் இதில் அடக்கம் – அனுப்பிவித்துக்கொண்டு வந்தேன். இருந்து கொண்டு சொன்னார் …

ஈடுபாட்டோடு எழுதும்போது, கதை தன்னைத்தானே வளர்த்துப் போகும் என்று சொன்னால் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள் சிலர். அவர்கள் படிக்க வேண்டாம் இனி வருவதை.

இறுதி அத்தியாயத்தில் ரத்னா ராமோஜியை கும்பகோணத்துக்கு, அவர்கள் இருவருக்கும் மனதால் நெருக்கமான சக்ரபாணிப் பெருமாள் கோவிலுக்கு, அங்கே ஒரு குறிப்பிட்ட பிரகாரத் தூண் பக்கம் (அந்தத் தூணோரம் தான் அவர்கள் சந்தித்ததெல்லாம்) அழைத்துப் போய் மனம் விட்டுப் பேசி, மன்னித்து, மன அழுத்தம் தீரக் பிரகாரத் தூணைக் கட்டிப் பிடித்து அழுவாள்.

நான் எழுத உத்தேசித்திருந்தது –

———————–
நான் தூணைப் பிடித்தபடி சக்தியெல்லாம் இழந்த பேடியாக நின்றேன்.

”சொல்லுங்க ராவ்ஜி .. இனிமேல், இந்த நிமிடத்தில் இருந்து நான் என் ரத்னாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன்… ரத்னாவுக்கு மனசாலே கூட துரோகம் நினைக்க மாட்டேன்.. என் மகள் மேல் சத்தியம்..”

நான் அதேபடி சொல்லத் தொடங்க, என் மனைவி பிரகாரத் தூணை அணைத்துப் பிடித்தபடி அடக்க முடியாமல் அழுதாள்.
————–
இதுவும் எழுதி, தன் போக்கில் கதை வளர்ந்தது இப்படி –

—————————–
பிரகாரம் சுற்றி வந்த வடக்கத்திய கோஷ்டி ஒன்று கொஞ்சம் தொலைவும் அண்மையுமாக நின்று பார்த்தது. அந்தக் குடும்பத்தில் ரத்னா வயதுப் பெண் ஒருத்தி இன்னொரு தூணைக் கட்டிப் பிடித்து அழத் தொடங்கினாள்.

———————-

பெரும்பாலான சடங்கு சம்பிரதாயங்கள் இப்படிப் போலச் செய்வதாகத்தான் உருவாக்கப் படுகின்றன!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன