New Novel ‘1975’ – தேவகோட்டையில் புரட்சி வணக்கம் கெட்ட வார்த்தை, கெட்ட செயலுக்குத் தொடக்கமோ என்னமோ

Excerpt from my novel ‘1975’, being written :

“ஸ்வீப்பரம்மா போய் சூடா ரெண்டு டீ மாயளகு கடையிலே வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே ஒரு பாக்கெட் பிஸ்கட்டும். சார்ஜஸ் போட்டுத் தரேன்னு சொல்லுங்க”. ஸ்வீப்பரம்மா விளக்குமாறைத் தூக்கியபடி ஒரு வினாடி நின்றார். “இன்னொரு டீ சாருக்கு. நேத்து புதுசா வந்திருக்கார்” என்று அவருடைய புரிந்து கொள்வதற்காகச் சொன்னார் பழநி. “அவரையும் தெரியும்,, அவங்க அப்பனையும் தெரியும், எனக்கு தம்பி முறைதான் இவங்கப்பன். இவனுக்குப் பொறந்து ரெண்டு மாசம் வரை வெதைக்கொட்டை ஏறிப்போய் இழுத்து வச்சு மருத்துவம் செஞ்சது யாரு? எங்க ஆம்பளையாளு. எங்க வீட்டுக்கு வந்தா இந்தப் பயலுக்கும் உனக்கும் டீ போட்டுத் தருவேன. ஆனா, யாருக்கும் டீ வாங்க இப்போ போகமாட்டேன். ஆபீஸை யார் பெருக்க? நீ பண்ணுவியா? இல்லே ஜெயலச்சுமி செய்வாளா?”

பழநி ஒரு அசட்டுச் சிரிப்போடு என்னிடம், ‘ஜெயலட்சும் என் பொண்ஜாதிங்க. கிழவி ஒரு மார்க்கமா பதில் சொல்லுது. கண்டுக்காதீங்க” என்றார். பழநியே சீக்கிரம் ரிடையர் ஆக வேண்டிய நபர். சௌந்தரம்மாளை கிழவி என்று அவர் அழைக்க சிறப்பு தைரியம் தேவைப்படும். நான் ஒன்றும் சொல்லவில்லை.

நான் என் மேஜையைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். சாவி துளையில் போய் திரும்பவும் மாட்டேன், வெளியே வரவும் மாட்டேன் என்று மக்கர் பண்ணிக் கொண்டிருந்தது. இந்த ஊருக்கு வராமல் மதறாஸில் இருந்து பக்கத்தில் மதுரை, காளையார்கோவில், புலியடிதம்மம் என்று மாற்றல் வாங்கிப் போயிருந்திருக்க வேண்டும். யாரும் பழங்கதை, உறவு முறை என்று நினைவு வைத்துக்கொண்டு போடா பயலே என்று தலையில் தட்டிவிட்டுப் போயிருக்க மாட்டார்கள். ஊர் முழுக்க, பேங்க் முழுக்க நம்ம சனம் என்பது ஒரு விதத்தில் நிம்மதி தரும் என்றாலும், அந்தரங்கம் என்று ஒன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. விதைக்கொட்டை முதற்கொண்டு வெளியே தெரிகிற மாதிரி தோணுதல். அந்தரங்கம் கிடக்கட்டும், எனக்கு என்று ஒதுக்கிய மேஜையைக் கூடத் திறந்து என்னுடையது என்று எதையும் வைக்க முடியவில்லை. நாற்காலி வேறே ஆடுகிறது.

யாரோ உள்ளே வந்தார்கள். வேட்டியை கிட்டத்தட்ட உள்ளாடை தெரிய மடித்துக் கட்டிக் கொண்டு கரளை கரளையாகக் கையும், முறுக்கு மீசையுமாக விழித்துப் பார்த்தபடி வந்தவர் ஒருத்தர் கவுண்டருக்கு அந்தப் பக்கம் வாசலில் இருந்து மறுகோடி வரை மெல்ல நடந்தார். திரும்பவும் அதேபடி நடந்தபோது என்னை முறைத்து, பழநியையும் துச்சமாகப் பார்த்தார். மூன்றாம் முறை மறுகோடிக்கு ஏதோ சடங்கு சம்பிரதாயம் போல நடந்தவரை வழிமறித்து ஸ்வீப்பரம்மா “என்ன வேணும்?” என்று ஃபேனை சுவிட்ச் ஆஃப் செய்தபடி விசாரித்தார்.

“லோன் தருவீங்களா?” க்ரீச் என்று தகர சிலேட்டில் சாக்பீஸ் எழுதினது போல கீச்சிட்டார் வந்த பிரமுகர். “இன்னிக்கு இல்லே” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார் பழநி. வந்தவர் என்னை ஒரு வினாடி பார்க்க, நான் மேஜையை வெற்றிகரமாகத் திறந்தபடி இல்லை என்று தலையாட்டினேன்.

“ஏன் வெள்ளையும் செள்ளையுமா உடுத்திக்கிட்டு சும்மாத்தானே உக்காந்திருக்கீங்க? குடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவீங்க?”, சமூக அக்கறையோடு பேங்குக்காரர்களை நாக்கைப் பிடுங்குவது போல் கேட்ட திருப்தியில் மெல்ல நடந்து போனார் அவர்.

“நீங்க அரண்மனை வாசலுக்குப் போய் பந்தல், மைக் எல்லாம் செக் பண்ணிட்டு வந்துடுங்க. நான் கவுண்டர் ஓப்பன் பண்ணிட்டு வந்துடறேன்”, அக்கவுண்டண்ட் கையில் இடுக்கிய பையோடு நுழைந்தபடி இன்னொரு மெசஞ்சர் ரத்தினத்திடம் கெஞ்சுகிற தொனியில் சொல்லி அனுப்பினார். அக்கவுண்டண்ட் என்பவர் இரண்டாம் நிலை அதிகாரி என்றாலும், மெட்றாஸ் போன்ற நகரங்களில் அவர்களுக்கு பெரிய அதிகாரம் ஏதும் கிடைக்காது என்று பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறேன். சின்ன ஊரான இங்கே அவருடைய கொடி சற்று அதிகமாகவே பறக்கும் என்று தோன்றியது. மேனேஜர் இல்லாவிட்டாலும் கிளையை முன்னால் கொண்டு செலுத்த சகல அதிகாரமும் உள்ளவர் அவர்.

“என்ன சார் வேலை எல்லாம் கத்துக்கிட்டீங்களா?” என்னைத் தான் கேட்டார். நேற்று வந்து நுழைந்து இன்றைக்கு சகலகலா வல்லவனாக ஆகியிருக்க முடியாது என்று அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்புறம், நான் புதுக்கருக்கு அழியாமல் இங்கே வரவில்லை. மதராஸில் ஒரு வருடத்துக்கு மேலாக குப்பை கொட்டிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அதுவும் இதைப் போல பத்து மடங்கு பெரிய கிளையில் டன் கணக்காக அதைக் கொட்டி அள்ளிவிட்டு வந்தவனாக்கும். இதை எல்லாம் கணக்காக ஆனால் மரியாதையோடு சொல்வது எப்படி என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஜெபர்சன் கையில் குடையோடு வந்து சேர்ந்தார்.

“புரட்சி வணக்கம் தோழர்” என்று குடையில்லாத கையில் முஷ்டி மடக்கி முன்னால் நீட்டினார். நானும் புடலங்காய் வாங்கிப் போகிற மாதிரி முட்டி மடக்கி புரட்சி வணக்கத்தை முனகினேன். அக்கவுண்டண்ட் பார்வை இதை எதையும் அவர் ரசிக்கவில்லை என்று காட்டியது. தேவகோட்டையில் புரட்சி வணக்கம் கெட்ட வார்த்தை, கெட்ட செயலுக்குத் தொடக்கமோ என்னமோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன