சிவகங்கை வரலாற்றுக் குழப்பங்கள்

 

தகவல் பழசாக ஆக ஆக, ஏகத்துக்குத் தண்ணி விளம்பிக் கதை விட சாத்தியக் கூறுகள் நிறைய. தலபுராணம், மதாச்சாரியார் சரித்திரம் என்றால் கேட்கவே வேணாம். டிவியில் மிட்நைட் மசாலாக்கள் அரங்கேறிய பிறகு அலம்பி விடுகிறதுபோல் வெங்கடேசப் பெருமாளுக்கு பட்டாச்சாரியார் குளித்து விடுவதைக் காட்டித் தொடர்ந்து கனிவான பார்வையோடு பிரசங்கம் செய்கிற பெரிய, சின்ன வயசு மகான்கள் உதிர்க்கிற தகவல் எல்லாம் ஆபீஸ் போகிற அவசரத்திலும் கர்ம சிரத்தையாகக் கேட்கப் படும். ஆபீஸ் லஞ்ச் ஹவர் அரட்டையில் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தபடி எடுத்துச் சொல்லப்படும். இதெல்லாம் அச்சுப் போட்டு வந்தால் நம்பகத்தன்மை இன்னும் அதிகரித்து விடும்.ஒரு மதத் தலைவர் காட்டில் தவம் செய்யும்போது பாம்பு உருவெடுத்து வந்து தொல்லை கொடுத்த பிரம்மராட்சசனை வதம் செய்தார் என்று கிட்டத்தட்ட பத்து புத்தகத்தில் தமிழிலும் இங்கிலீஷிலும் படித்தாச்சு. அவர் பதிமூணாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். அப்போ பிரம்மராட்சசன் எங்கே இருந்தான்? அது கில்ஜி வம்சம் தில்லியில் ஆண்டிருந்த காலமாச்சே. மாலிக் காபூர் மதுரை மேல் படையெடுத்து பாண்டிய வம்சத்தின் கடைக் கொழுந்தான வீரபாண்டியனைத் தோற்கடித்த நேரம் இல்லையா அது? அப்போது இருந்த முதல் முகலாயச் சக்ரவர்த்தினி ரசியா சுல்தானா பற்றி வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதை ரசியாமல் இருக்க முடியாது. ஆனால் பிரம்ம ராட்சசன் அந்தக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

உண்மையையும் புனைவையும் வேறுபடுத்தி வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ள நிறையப் பொறுமையும், எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படும் தன்மையும் ரொம்ப ஒத்தாசை செய்யும். நான் தலபுராண ஆராய்ச்சியைச் சொல்லவில்லை, எங்க சிவகங்கைச் சீமையின் வரலாற்றைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கேன்.

இத்தனைக்கும் சிவகங்கைக்கு கிட்டத்தட்ட முன்னூறு வருட சரித்திரமே உண்டு. சிவகங்கைச் சீமை இராமநாதபுரம் ஜமீனிலிருந்து ஐந்தில் ரெண்டு பங்காக சௌமிய ஆண்டு தை மாதம் 13-ம் தேதி (27.1.1730) பிறப்பெடுத்தது என்பது ஆவண வழியாக உறுதிப் படுத்தப்படும் செய்தி. முதல் அரசர் சசிவர்ணத் தேவர் 1750 வரை ஆண்டதும், அவருக்கு அப்புறம் அவர் மகன் பெரிய உடையத் தேவர் என்ற முத்துவடுகநாதர் ஆட்சிக்கு வந்ததும் அதேபடி நம்பகத் தகவல். முத்துவடுகரை தளபதி பான் ஜோர் தலைமையில் கும்பினிப் படைகள் 1772 காளையார் கோவில் போரில் கொன்று விட்டு வெற்றி பெற, முத்துவடுகர் மனைவி வேலு நாச்சியார் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆளுகைக்குட்பட்ட திண்டுக்கல் விருப்பாட்சியில் கிட்டத்தட்ட எட்டு வருடம் தங்கி இருந்ததும் மேற்படி ரகமே.

முத்துவடுகருக்கும் ராணி வேலு நாச்சிக்கும் மெய்க்காப்பாளர்களாக அரண்மனை உத்தியோகத்தில் சேர்ந்த பெரிய மருதுவும் சின்ன மருதுவும் இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கள் வீரதீரப் பிரதாபங்களால் படைத் தலைமை, பிரதானி பதவிகளுக்கு உயர்ந்ததில் இருந்து தகவல் பெருக்கம் ஆரம்பிக்கிறது. என்ன மாதிரி தகவலூட்டு என்று புரிய சிவகங்கையின் இனக்குழு பின்புலத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். இனக்குழு கூட இல்லை. இன உபகுழுக்கள்.

சசிவர்ணத் தேவர், முத்துவடுகர் ஆகியோர் ஒரு உபகுழு. மருது பாண்டியர்கள் இன்னொரு உபகுழு. சிவகங்கை வரலாற்றில் லேட் எண்ட்ரி கொடுத்து பின்னால் இருந்து செயல்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் மூன்றாம் உபகுழு.

வேலுநாச்சி முதல் அணிக்கும், மருது பாண்டியர்கள் ரெண்டாம் அணிக்குமான காவியத் தலைவர்கள். புதுக்கோட்டை தொண்டைமான் வெளிப்படையாகக் கும்பினியார் பக்கம் சாய்ந்து மற்ற பாளையக்காரர்கள், சிற்றரசர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாலோ என்னமோ அவரைப் பற்றி அடக்கி வாசித்து, அவருக்கு உறவுக்காரரும் பட்டமங்கலம் சிற்றரசருமான வைத்திலிங்கத் தொண்டைமான் மூன்றாம் அணிக்குக் காவிய நாயகன்.

1780-ல் ஹைதர் அலி உதவியோடு கும்பினியாரிடம் இருந்து சிவகங்கையைத் திரும்பக் கைப்பற்றி 1789-வரை வேலு நாச்சியார் சீரும் சிறப்புமாக ஆண்டார். அவருக்கு மருது சகோதரர்கள் பிரதானிகளாக இருந்து அவர் கட்டளையை ஏற்று நல்லாட்சி செழிக்க உதவினார்கள். 1789-ல் சின்ன மருது பேராசை காரணமாக வேலு நாச்சியாரிடம் இருந்து ஆட்சியைப் பிடுங்கி ஒரு டம்மி அரசரை உருவாக்கி அவரை ஆட்டுவித்து மருது சகோதரர்கள் சிவகங்கையில் சர்வாதிகாரம் செய்தார்கள் – இது நாச்சியார் அணியின் தகவலூட்டு. மருது சகோதரர்கள் ஒரு அல்பமான பிரச்சனையைப் பெரிது பண்ணி, புதுக்கோட்டை தொண்டைமானோடு குத்துவேன் வெட்டுவேன் என்று போர் புரியப் போனார்கள் என்பது மூன்றாம் அணிக்கு ஆதரவாக இவர்கள் அளிக்கும் உபரித் தகவல்.

1780-ல் வேலு நாச்சியார் ஆட்சிக்கு வந்ததென்னமோ மெய்தான். அப்போது அவர் பெரிய மருதுவை மறுமணம் செய்து கொண்டார். ஆகவே மருதிருவர் சிவகங்கை மன்னர்களானார்கள். ஆனால், 1789-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வேலு நாச்சியார் ரகசியமாக கும்பினியாரோடும் ஆற்காடு நவாபோடும் ஒப்பந்தம் செய்து கொண்டு மருது பாண்டியர்களை விரட்டி விட்டு ஆட்சியை நயவஞ்சகமாகத் தக்க வைத்துக் கொண்டார். மருதுக்கள் பிறகு அவரை அப்புறப்படுத்தி விட்டு அவருடைய மருமகனை அரசனாக்கினார்கள். அவர் டம்மி எல்லாம் இல்லை. அந்த அரசருக்குத் துணையாகக் காளையார்கோவிலில் கும்பினிப் படைகளை எதிர்த்துப் போரிட்டார்கள். வீரமரணமும் அடைந்தார்கள் அந்த விடுதலை வீரர்கள் – இது மருது சகோதரர்கள் இன உபகுழு எழுதும், சொல்லும் வரலாறு.

வைத்தியலிங்கத் தொண்டைமான் வேலு நாச்சியாருக்கு சகல விதத்திலும் உதவிச் செய்து மருது பாண்டியர்களின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் நாச்சியாருடைய ஆட்சி தொடரவும் பாடுபட்டார். கும்பினியோடு ரகசிய உடன்பாடு செய்து கொண்ட மருது சகோதரர்கள் நாச்சியாரை அகற்றி விட்டு ஆண்டு வந்தபோது, ராணி தனக்கு வாரிசாகப் பிரகடனம் செய்திருந்த கௌரி வல்லபத் தேவரைச் சிறையில் அடைத்துக் கொல்லத் திட்டமிட்டனர். தொண்டைமான் தான் அவரைக் காப்பாற்றினார். கும்பினியாருக்கு கப்பம் கட்டுகிற பணப் பிரச்சனை காரணமாக மருது சகோதரர்கள் வெள்ளையருக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களால் கொல்லப்பட்டு இறந்து போனார்கள் – தொண்டைமான் அணி தரும் வரலாறு இது.

இதில் எது உண்மை, எது வரை உண்மை?

பாரத நாடு நம் நாடு, பிரிட்டீஷ்காரர்கள் இந்தப் பரந்த நாட்டைத் தந்திரமாக கைவசப்படுத்தி ஆள்கிறவர்கள். அவர்களிடம் இருந்து போராடி நாட்டு விடுதலை பெற வேண்டும். இப்படியான ‘தேச பக்தி’ எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் தான் தென்னிந்தியாவில் தோன்றிய சிந்தனை. அதற்கு முன்னால் நாடு என்றால் நூறு சதுர மைல் பரப்பளவில் இருக்கிற ஒரு சின்ன நகரம், சுற்றி பத்து இருபது கிராமம் இவைதான். சிவகங்கை நாடும் புதுக்கோட்டை நாடும் இப்படியானவை.

கும்பினி என்று இல்லை, பக்கத்து ஊர் நாட்டாமையோடு (அண்டை நாட்டு அரசன்) கூட உப்புப் பெறாத விஷயத்துக்காக போர் நடந்தது சகஜம். நூறு பேர் கைகலப்பு எல்லாம் போர், யுத்தம் ஆனது பிற்கால வரலாறுகளுக்குப் பொது.

நிலைமை தமக்கு சாதகமாக இருந்தபோது எல்லோரும் வெள்ளைக்காரனுக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். வரி வசூல் நடத்தி பேஷ்குஷ் என்ற பாரசீகப் பெயரில் வருடம் தவறாமல் ஒப்படைத்து ராஜ விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காசு விஷயமாகத் தர்க்கம் ஏற்பட, அல்லது வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியால் நெருக்கடி உண்டாகும்போது சிங்கமெனச் சீறி வெள்ளையனே வெளியேறு என்று முழங்கி உயிரையும் விட்டிருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து எல்லா வரலாற்று இழைகளும் சிக்கும் சிடுக்குமாகிப் போகின்றன. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பகுதி சிவகங்கை என்பதை எல்லோரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அரச பதவி கூட ரெண்டாம் பட்சம். ஜமீந்தார் என்று பட்டம் கொடுத்தாலே போதுமானது. ஊரில் சக்கரவர்த்தி என்று கூப்பிடச் சொல்லி விடலாம். ஆனால் நிர்வாகம் செய்யும் உரிமை இருக்கே, அது முக்கியம்.

உரிமையை நிலைநாட்ட சிவகங்கை தெப்பக்குளக் கரையில் கூடிப் பேசி முடிவு செய்யாமல் லண்டன் தேம்ஸ் நதி தீர கோர்ட்டுகளில் வக்கீல் வைத்து வாதாடி இருக்கிறார்கள் (இது ஒரு குழுவின் வரலாற்றாசிரியர் வாக்கு). மானியத்துக்காக மேன்மை மிகுந்த மூணாம் ஜார்ஜ், நாலாம் ஜார்ஜ், நாலாம் வில்லியம், விக்டோரியா மகாராணி என்று தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக மனுப்போட்டிருக்கிறார்கள்.

வீரம், தாராள மனப்பான்மை, காதல், காமம், நேர்மை, போட்டி, சாந்தம், பொறாமை, புத்திசாலித்தனம், நயவஞ்சகம், யோசித்து செயல்படுதல், உணர்ச்சிவசப் படுவது, பெருந்தன்மை, சந்தர்ப்பவாதம் இப்படி மரபணுவில் சகலமானதும் கலந்த சாதாரண மனிதர்களே இங்கே எல்லோரும், முன்னோரும்.

இதை நினைக்காமல் அணிகளின் கூச்சலும் சண்டையும் எதற்குத் தொடர வேணும்? நஷ்டம் யாருக்கு? வரலாற்று சின்னங்கள் வேற்று அணிக்கு சாதகமானவை என்பதால் அவை பராமரிப்பின்றி சிதைந்து போயின. வரலாற்று ஆவணங்களுக்கும் அதே நிலைமை. மருதுபாண்டியர் கட்டி வைத்த திருஞான முருகன் கோவில் இதற்கு ஒரு சான்று (புகைப்படம்). மாற்று அணி வட்டாரத்தில் இருந்ததால் ஏற்பட்ட சோகமான நிகழ்வு. இப்போது நிலைமை சீராகி இந்தக் கோவில் புதுப்பிக்கப்படுவதாகத் தகவல். இதில் இனக்குழு மனப்பான்மை எதுவும் இல்லை என்பதால் நம்பி வரவேற்கிறேன். சிவகங்கை வரலாறும் அப்படியே புதுப்பிக்கப்படட்டும். கொண்டாட வேண்டியதைக் கொண்டாடுவோம் முதலில்.
(யுகமாயினி அக்டோபர் 2010)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன