தமிழ்க் குறுநாவலும் Breakfast at Tiffany-யும்

என் குறுநாவல் தொகுப்பு இரா.முருகன் குறுநாவல்கள் – வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒன்பது குறுநாவல்களின் தொகுப்பு என் அன்புக்குரிய பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேற்று மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1990-களில் எழுதிய முதல் குறுநாவல்கள் விஷம், விஷ்ணுபுரம் தேர்தல் முதல் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் எழுதிய பசுவன் வரை இத்தொகுப்பில் உண்டு. முன்னுரை இங்கே
===================================================================================================================

முன்னுரை இரா.முருகன்
குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே குறுநாவல் எழுதிய எல்லோருமே அப்படித்தான் என்று சொல்லலாம்.

1990-களில் தமிழ் இலக்கியச் சூழல் இன்றைக்கு இருப்பதை விடச் சற்றே மாறுபட்டு இருந்தது. எப்போதும் போல் கவிதை நிறைய உண்டு. கணிசமாகச் சிறுகதைகளும் வந்து கொண்டிருந்தன. நாவல் அத்தி பூத்தாற்போல் வரும். ஒரு நாவல் எழுதினால் அது அல்டிமேட் சாதனை. அடுத்த பத்து வருடம் ஓய்வெடுத்து விட்டு அடுத்ததை யோசிக்கலாம். இந்த சூழலில் தான் தமிழுக்குப் புது இலக்கிய வடிவமாக, ஆனால் பரபரப்பின்றிக் குறுநாவல் வந்து சேர்ந்தது. மேற்கில் இருந்து வந்த ’நல்லனவெல்லாம்’ பட்டியலில் குறுநாவலைக் காணலாம்.

இடைக்காலத்தில் இருந்தே ஐரோப்பிய மொழிகளில் குறுநாவல் உண்டாம். பதினான்காம் நூற்றாண்டில் பொகாசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நூலில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு குறுநாவலாம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன், பிரஞ்சு இலக்கியத்தில் குறுநாவலுக்குத் தனியானதோர் இடம் அளிக்கப் பட்டதாக அறிகிறோம். இருபதாம் நூற்றாண்டு, ஆங்கில இலக்கியத்தில் குறுநாவல் செழித்த காலம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

’உமக்குத் தெரிந்த ஆங்கிலக் குறுநாவல் வகை சார்ந்த இலக்கியப் படைப்பு ஒன்றைப் பெயர் குறிப்பிடுக’ என்று அரை மரியாதையோடு யாராவது கேட்டு எனக்கும் சொல்ல இஷ்டம் இருந்தால், நான் உடனே சொல்வேன் – ட்ரூமன் கபோட் எழுதிய ப்ரேக்ஃபாஸ்ட் அட் டிப்பனி (Breakfast at Tiffany’s by Truman Capote). ஆட்ரி ஹெப்பன் நடித்து 1960-களின் சூழலில் நிகழும் சினிமாத்தனம் சற்றே கூடிய திரைப்படமாகத் தான் முதலில் இந்தப் புனைவு மனதில் படிந்திருந்தது. ட்ரூமன் கபோட் பற்றிப் பின் கேள்விப்பட்டு முதலில் நான் வாசித்த, 1940-களின் சூழலில் இயல்பாக நடைபெறும் குறுநாவல் இது.

காஃப்காவின் ‘வளர்சிதை மாற்றம்’, கார்சியா மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’, ‘அறியாப் பெண் ஆந்த்ரியா’, எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடலும் கிழவனும்’, யாசுநாரி கவாபாத்தாவின் ‘உறங்கும் கன்னியர் வீடு’, ப்ரிமோ லெவியின் ‘நிக்கல்’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘கிறிஸ்துமஸ் கரோல்’, ஜியார்ஜ் ஆர்வெலின் ‘விலங்குப் பண்ணை’, ஆஸ்கார் ஒயில்டின் ‘காண்டர்வில்லி பிசாசு’ இதெல்லாம் என் மனம் கவர்ந்த மற்ற குறுநாவல்கள். பஷீரின் ‘பால்ய கால சகி’ கூட என் ப்ரிய குறுநாவல் தான்.

உலகின் முதல் குறுநாவல் எது? எந்த மொழியில் எழுதப்பட்டது?

தெரியாது. அடுத்த கேள்வி.

தமிழ்ல் எழுதப்பட்ட முதல் குறுநாவல் எது?

தெரியாது. அடுத்த கேள்வி? கேள்விகள் ஏதும் இல்லை. நன்றி.

இதெல்லாம் தெரியாமல் போனது போலவே தான் குறுநாவல் இலக்கணமும்.

குறுநாவலுக்குப் பக்க அளவு கிடையாது. சிறுகதையை விடக் கொஞ்சம் பெரிசு. நாவலை விடச் சிறியது. இப்படி ஒரு விளக்கம் இணையப் பெருவெளியில் காணக் கிடைக்கிறது. இதன் மற்றொரு எல்லையில், பெரிய குறுநாவலை நாவல் என்றே அழைக்கலாம் என்ற அபத்தமாகத் தோன்றக் கூடிய, தீர யோசித்தால் பொருள் விளங்கும் இன்னொரு விளக்கமும் உண்டு!

இந்தக் குறுநாவல் இலக்கணம் மட்டும் தமிழில் குறுநாவல் எழுத வந்தவர்களுக்குக் காணாப் பாடம் படிக்காமல் அடிப்படையில் தானே படிந்து வந்தது.

சிறுகதையை விட இன்னும் கொஞ்சம் பரந்த அளவில் யோசித்து எழுதக் கை கொடுத்த இலக்கிய வடிவம் குறுநாவல் என்பதால் குறுநாவல் எழுதித்தான் பார்ப்போமே என்று இதைக் கையாண்டவர்கள் 90-களில் சற்றே அதிகம்.
குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு பிரசுரித்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குக் கதை சொல்லும் கடமையாற்றிக் கொண்டிருந்தன. அது தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

குறுநாவல் இலக்கணமாகப் பயின்று வரும் மற்றக் கூறுகள் யாவை? சொல்வோம்.

குறுநாவலுக்குப் பரபரப்பான முடிவு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை இழையாகத் தான் கதை ஓட வேண்டும். சப் ப்ளாட் என்று கதைக்குள்ளே கதையாகக் குறுக்குச் சால் போட அனுமதி இல்லை. அத்தியாயங்களாகப் பிரித்து நம்பர் போட்டு எழுதக் கூடாது. போனால் போகிறது, இரண்டு அடுத்தடுத்த பகுதிகள் இடையே போதிய இடைவெளி கொடுத்துப் பிரிவினையை ஊக்குவிக்கலாம்.

இதெல்லாம் தெரியாததால் எல்லா இலக்கணத்தையும் மீறிக் குறுநாவ்ல எழுதப் போனோம். அத்தியாயங்களுக்கு நம்பர் போடுவதை மட்டும் பத்திரிகை கம்பாசிட்டர்களும் உதவி ஆசிரியர்களும் கவனித்துக் கொண்டார்கள்.

எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் குறுநாவல்களைக் கேட்டு வாங்கிப் பெற்று மகிழ்ந்து பிரசுரம் செய்தன என்று சொல்ல முடியாது. முப்பத்திரெண்டு பக்கமுள்ள பத்திரிகையில் குறுநாவல் முப்பது பக்கத்தை அடைத்துக் கொண்டு விட்டால், சந்தா அனுப்புங்கள் கோரிக்கையும் ’போன மாதம் வந்த எந்தக் கவிதையும் நன்றாக இல்லை’ என்ற வாசகர் கடிதமும் பிரசுரிக்க மீதி ரெண்டு பக்கம் மட்டும் இருக்கும்.. அபூர்வமாக கோல்ட் கவரிங் விளம்பரம் கிடைக்கும் பத்திரிகையாக இருந்தால் இந்த ஏற்பாடும் அலங்கோலமாகி விடக் கூடும்.

தமிழ் இலக்கிய இதழ்களில் குறுநாவலை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த பத்திரிகைகளில் கணையாழிக்கு முக்கிய இடம் உண்டு. 1990-களில் ஆண்டு தவறாமல் குறுநாவல் போட்டி நடத்தித் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த கணையாழியும் கஸ்தூரிரங்கன் சாரும் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல் குறுநாவலான ‘விஷம்’ எழுதி இந்த இலக்கியப் பகுப்பில் அடியெடுத்து வைத்திருப்பேனா என்று சந்தேகம் தான்.

அந்தக் காலகட்டத்தில் என்னோடு ஆண்டு தோறும் கணையாழிப் போட்டிக்கு எழுதிய நண்பர்களான ஜெயமோகன், பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் நானும் நாவலுக்குப் போய்விட்டோம் அழகியசிங்கர் விருட்ச நிழலில் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களும் குறுநாவலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
குமுதத்துக்கு சுஜாதா ஆசிரியராக இருந்த ஆண்டில் அவர் அந்த லட்சச் சுழற்சி வெகுஜன இதழில் புகுத்திய மாற்றங்களில் குறுநாவலும் உண்டு. அந்த அத்தி அவருக்குப் பின் பூக்கவில்லை.

இனியும் ஒரு முறை நீராட முடியாத நதியாகக் குறுநாவல் தோன்றுகிறது. என் இந்தக் குறுநாவல்களை பாசத்தோடு பார்க்கிறேன். மறு வாசிப்பிலும் இவை எனக்கு நல்ல வாசக அனுபவத்தையே தருகின்றன. முதல் வாசகனான எழுத்தாளனுக்குக் கிடைத்த அதே அனுபவம் இவற்றை நூல் வடிவில் இப்போது படிக்கும் வாசகர்களுக்கும் கிட்ட விழைகிறேன்.

இந்தத் தொகுப்பில் இடம் பெறும் குறுநாவல்களில், தகவல்காரர் ‘முன்றில்’ பத்திரிகையிலும், ‘மனை’, ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஆகியவை புதிய பார்வையிலும், ‘பகல் பத்து ராப்பத்து’ குமுதத்திலும் பிரசுரமானவை. மற்றவை கணையாழியில் வெளிவந்தவை. இந்தப் பத்திரிகைகளுக்கு என் நன்றி.

குறுநாவலுக்குக் கறாரான இலக்கணம் இல்லை என்பதையும் நான் கறாரான இலக்கியவாதி அல்லன் என்பதையும் இதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சாற்றுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன