பாதல் சர்க்கார் – இதுவும் அதுவும் உதுவும் என் மின்நூலில் இருந்து

பாதல் சர்க்கார் இறந்து போய்விட்டார். ஆறு வருடம் முன் லண்டன் வால்த்தம்ஸ்டோவில் நண்பர் அம்ஷன்குமார் பாதல் சர்க்கார் பற்றி எழுதி இயக்கிய ஆவணப் படம் பார்த்த கதையை ஆர்வமுள்ளவர்கள் பழைய ‘திண்ணை’யில் பொறுமையாகத் தேடிப் படித்துக் கொள்ளவும்.

 

பாதலுக்காக நினைவுக் கூட்டம் நடத்தி அந்தப் படத்தைத் திரையிடலாமே என்றேன் அம்ஷனிடம். பிரளயன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதோடு கரிசனமாக அழைப்பும் அனுப்பி வைத்திருந்தார்.

 

சர்க்கார் எனக்கு முதலில் கோ.ராஜாராம் மொழிபெயர்த்து என் ஆசிரியர் கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த ‘மற்றொரு இந்திரஜித்’ மூலமாகத்தான் அறிமுகமானவர். அவருடைய நாடகங்களை ஜெயந்தனின் நாடகங்கள் போல் படிப்பது எனக்கு ரசனைக்குரியதாகத் தெரிகிறது. நாடகமாக நடத்தும்போது அறிவுஜீவிதச் செயற்கை தெரிகிறதாகச் சொன்னால் ஞாநி ஆட்சேபிப்பார்.

 

மூன்று பக்கம் திரை வைத்து மூடி நான்காம் பக்கம் பார்வையாளர்களைப் பார்த்துத் திறந்து அவர்களிடமிருந்து கொஞ்சம் போல் விலகி எல்லோரும் பார்க்கிற உயரத்தில் அமைந்திருக்கிற மரபு சார்ந்த ப்ரொசீனியம் அரங்கை பாதல் சர்க்கார் ஒதுக்கி வீதிக்கு வந்ததுக்குக் காரணம் அவர் நாடகத்தை மக்களுக்கு நெருக்கமாக எடுத்துப் போக மரபு அரங்கம் போதாமல் இருந்தது என்கிறார்கள்.

 

பாதலின் உடல்மொழி அரங்கம் (பாடி தியேட்டர்) ஏகமாக சிலாகிக்கப்படுகிறது. அதீத உடல்மொழிதான் இந்த உடல்மொழி அரங்கத்தின் உச்சமாக எனக்கு மனதில், கண்ணில் பட்டது. ஆவணப் படம் மூலம் நாடகக் காட்சிகளைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்ச்சியாகவும் அது இருக்கலாம். பாதலின் நிறுவன எதிர்ப்புக்கு இந்த அதீதம் எந்த விதத்தில் துணை போனதோ தெரியாது.

 

ஆட்டத்தோடு கூடிய நாட்டுப் பாடல், கால் இடுக்கில் கொட்டு வைத்து வாசித்துக்கொண்டு பிரவேசம், கைக்குட்டையை சுழற்றி ஊய் ஊய் என்று சத்தம் போட்டு ஹெலிகாப்டரை உருவகப்படுத்துவதான (கிட்டத்தட்ட) டம்ப் ஷாரட், ஒரே வசனத்தை ஏழெட்டு தடவை எல்லோரும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் உச்சரிப்பது, பைஜாமா ஜிப்பாவோடு நாடக ஆசிரியர் திடீரென்று குறுக்கே புகுந்து, ஊர்வலம் வந்துட்டு இருக்கு என்று சொல்லிவிட்டுப் போவது என்று இந்த பாடி தியேட்டரும் நாடக ரசிகனை நாடக வெளிக்கு உள்ளே வர ஒட்டாமல் தடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.

 

பாதல் நாடகத்தில் பாட்டு இருக்கிறது. உண்மைதான். ஆனால் அவரே சொல்கிறார் – எங்கள் நாடகங்களை விரும்பிக் கூப்பிட்ட கிராம மக்கள் பாட்டுகள் அமைந்த நாடகங்களோடு வரச் சொன்னார்கள். பாட்டுக்காக நாடகம் என்பது எழுதியவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பார்வையாளரை அதுதான் இழுக்கிறது.  சோதனை நாடகம் பழகிய பாதைக்குத் திரும்பப் பயணிக்க பார்வையாளர்களின் பிரதியாக்கம் காரணமாகிறது என்று இண்டலெக்சுவல் கல்குவாரி உடைத்து ஒரு லோடு அடிக்க நான் தயார்.

 

உத்தியில் இல்லை நாடகம்,  மனதில் இருக்கிறது என்று தோன்றுகிறது. மக்கள் கலைஞர் கத்தாரின் இசை நிகழ்ச்சிகளுக்கும் பாதல் சர்க்காரின் பாட்டோடு கூடிய பரீட்சார்த்த நாடகங்களுக்கும் என்ன வேற்றுமை? கத்தார் இப்படி அறிவு ஜீவிதத் தன்மையோடு அரங்கில் நடித்தது இல்லை என்பது தவிர. சண்டை பிடிக்க வருகிறவர்கள் கத்தாரின் ‘பத்ரம் கொடுகோ’ பாடலைக் கேட்டுவிட்டு வரலாம்.

 

உடல்மொழி அரங்கத்தோடு எனக்கு எந்த விரோதமும் இல்லை. ப்ரோசினியம் தியேட்டரின் சாத்தியக்கூறுகளை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அதை விட அல்லது அதே தரத்தில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சாம்யுவெல் பெக்கட்டின் ‘கோடாவுக்காக காத்திருந்தல்’. டென்னசி வில்லியம்ஸின் ‘பல்லி ராத்திரி – நைட் ஆப் தி இகுவானா’, ஹெரால்ட் பிண்டரின் ‘பிறந்த நாள்’ போன்ற ஆங்கில நாடகங்களைத் தொடர்ந்து பார்க்கக் கிடைத்த அனுபவம் என்னை ப்ரோசீனியம் தியேட்டர் பக்கமாகத்தான் மேலும் நகர்த்துகிறது.

 

பாதலுக்கு அஞ்சலி செலுத்த இந்தச் சிந்தனைகள் எதுவும் குறுக்கே நிற்காது.

 

 

ஸ்காட்லாந்தில் நாடக மேடையில் மொட்டைக் கட்டையாக ஒரு காட்சியிலோ நாடகம் முழுவதுமோ வந்தால் தப்பே இல்லை. நியூட் தியேட்டர் ரசனையைப் பொறுத்த ஒன்று. ஆனால் மேடையில் விண்ஸ்டன் சர்ச்சிலாகத் தோன்றி சுருட்டுப் பற்ற வைத்தால் ஓரமாகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள் பிடித்துப் போய் வழக்குப் போட்டு விடுவார்கள். மேடையில் புகைபிடிப்பது மாபெரும் குற்றம்.

 

இந்தியாவில் சுருட்டோ சிகரெட்டோ மேடையில் பிடிக்கத் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பது வருடம் முன்னால் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள் நடுவே ஒரு இடைவேளை அறிவித்து விட்டு, வடக்கே இருந்து வரும் உஸ்தாத்கள் நடுமேடையில் ஹூக்கா பற்ற வைத்து லயத்தோடு புகை வலிப்பார்கள். நம் வித்வான்கள் லாகிரி வஸ்து பக்கமே – மேடையில் இருக்கும்போது மட்டுமாவது- போவதில்லை என்று பொதுவான கருத்து. அதிலும் சம்பிரதாயமாகப் பாடுகிற சிலர் வெள்ளி கூஜாவில் நாலு மடக்கு விஸ்கியோ பிராந்தியோ எடுத்துப் போய் தம்புரா போடுகிற சிஷ்யன் எவர்சில்வர் டம்ளரில் வார்த்துக் கொடுக்க, அங்கவஸ்திரத்தால் முகத்தை மூடி ஒரே கல்பில் குடித்து முடித்துவிட்டு நிதிசால சுகமா கீர்த்தனை பாட ஆரம்பிப்பார்கள் என்று இன்னும் சுழன்று கொண்டிருக்கும் வதந்திகள் உண்டு. நம்ப முடியாவிட்டாலும் ரசமானவையே அவையெல்லாம்.

 

நாடக மேடையில் புகைவலி, லாகிரி வஸ்து உபயோகிப்பது, நக்னம் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களைப் பற்றி யாராவது யோசித்ததுண்டா?

 

போன மாதம் கனடா றொறொண்றோவில் (என்ன செய்ய, இப்படி எழுதினால் தான் எனக்கே புரிகிறது) ‘இஷ்டப்பட்டால் உடுத்தி வரலாம்’ சலுகையோடு மோண்ட்பார்ன்ஸே என்ற பிரஞ்சு நாடகம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. முக்கிய பாத்திரங்கள் கிட்டத்தட்ட நாடகம் முழுக்க பிறந்த வண்ணம் தோன்றி ஓவிய மேதைகளான பிக்காசோவாகவும், பாஸ்கினாகவும், மார்க் சகால் ஆகவும் நடித்த நாடகம் இது. இவங்க எப்போ பிறந்த மேனிக்கு இருந்தாங்க என்று கேட்க வேணாம் – ஸ்பெயின், பிரஞ்சுக்காரர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு தடவையாவது குளித்திருக்க மாட்டார்களா என்ன?

 

கதாபாத்திரங்களே காற்றோட்டமாக வரும்போது பார்வையாளர்களும் அப்படியே வந்தால் என்ன என்று யோசித்து பேஸ்புக்கில் குழு ஆரம்பித்து ஆதரவு திரட்டினார்கள். ‘பிரிட்டீஷ் புது மணப்பெண் இளவரசி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் பிருஷ்ட ரசிகர் சங்கம்’  போன்ற அமைப்புகள் நிறைந்த பேஸ்புக்கில் இவர்களுக்கு ஆதரவுக்கு என்ன பஞ்சம்?

 

நாடகம் அவை நிறைந்து பாஸ் முராலே அரங்கில் நடத்தப்பட்டதாகத் தகவல். நாடகம் பார்க்க வந்தவர்கள் தவறாமல் ஆளுக்கொரு துண்டோடு வந்தார்களாம். உடுத்துக் கொண்டு இல்லை. ஆசனத்தில், சரி, இருக்கையில் விரித்து அதன் மேல் இருந்து நாடகம் பார்த்து ரசிக்க. நாடகம் முடிந்ததும் எல்லா இருக்கையையும் சுத்தமாக அலம்பி விட எவ்வளவு தண்ணீர் செலவழித்தார்களோ தெரியவில்லை.  ப்ரோசீனியம் தியேட்டரில் இதுவும் ஒரு நன்மை பாருங்கள்.

 

 

ஆடலும் பாடலும் அன்றே முடிந்தது

கூடலும்  சீக்கிரம் காணலாம் – மேடையில்

தேடல் தொடரும் திரையுயர நக்னமாய்

நாடகம் பார்க்கநீ வா

 

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன