புத்தக வாடை
சமீபத்தில், 1921-ம் வருட டயரி ஒன்று கிடைத்தது. பரண் உபயம்தான். வக்žல் குமாஸ்தாவாக இருந்த இரண்டு தலைமுறைக்கு முந்திய உறவுக்காரருடையது அது. இண்டு இடுக்கு விடாமல் வாய்தா, வக்காலத்து நாமா , சிரஸ்ததார் பெண் கல்யாணத்துக்குப் போனது, முன்சீப் கோர்ட் கிளார்க் அம்மா சிவலோக பதவி அடைந்தது என்று கலந்து கட்டியாகப் பதிவு செய்து வைத்திருந்த டைரியில் அந்தக் கால தஞ்சாவூர் அத்தர்க்கடை விளம்பரமும் கண்ணில் பட்டது. “நானாவித பரிமள கந்தங்களும், இங்கிலீஷ் தேச வாசனா திரவியங்களும் ‘ சகாய விலைக்குக் கிடைக்கும் கடையாம்.
அத்தர்க் கடை விளம்பரத்தின் அடியில் செண்ட் பாட்டில் விலைப்பட்டியல் கமகமவென்று ரூபாய் அணா பைசா வாசனை அடித்தது. அதையும் தாண்டி இன்னொரு அற்புதமான வாசனை அந்தப் பழைய டயரியிலிருந்து கிளம்பி மூக்கைத் துளைத்தது. எத்தனை முகர்ந்தாலும் போதும் என்று தோன்றாத பழைய புத்தக வாடைதான் அது.
இந்த வாடைக்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டதாகச் சரித்திரமே இல்லை . பத்திரிகை ஆசிரியரான என் நண்பர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை வந்தால் ஜோல்னாப் பையும், கையில் பிரம்புமாகக் கிளம்பி விடுவார்.
“”ஆனைக்கவுனியிலே ஒரு பழைய வீட்டை வாங்கி இடிச்சுக் கட்டறாங்கப்பா. அங்கே மர்ரே ராஜம் கம்பராமாயணம் செட், மராட்டி மோடி ஆவணத் தொகுப்பு , ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வெரி ஃபர்ஸ்ட் எடிஷன் எல்லாம் இருக்காம்” என்று நடந்தபடிக்கே தகவல் அறிவித்தபடி விரைவார்.
ஆனைக்கவுனி பழைய புத்தக வாடை எல்லாம் எப்படி இவருடைய குரோம்பேட்டை மூக்குக்கு எட்டுகிறது என்பதைப் பற்றி ஆச்சரியப்படுவதை நான் šறுத்தியாகிவிட்டது. ஆனாலும் புத்தகப் பிரியருக்குக் கையில் எதுக்கு அந்தக்காலப் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி பிரம்பு? மனுஷர் பின்னால் லொங்கு லொங்கு என்று ஓடி ஜோல்னாப் பையைப் பிடித்திழுத்துக் கேட்ட போது கிடைத்த பதில்.
“”என்னப்பா விஷயம் புரியாதவனாக இருக்கே, பழைய புத்தக வாடைக்கு நாம மட்டுமில்லே, எங்கே எங்கேன்னு பூரான் , தேள், பல்லி எல்லாம் புத்தக அலமாரியிலே குடியும் குடித்தனமுமா இருக்கும். பிரம்பாலே புத்தகத்தைச் செல்லமா ரெண்டு தட்டு தட்டினா அதெல்லாம் வெளியே ஓடிடும். அப்புறம் நம்ம ராஜ்யம்தான்”.
இவர் டன் கணக்கில் இப்படிப் பழைய புத்தகம் வாங்கி வந்து சகதர்மிணி கண்ணுக்கு மறைவாக அவற்றை நைசாக வீட்டுக்குள் கடத்தும் டெக்னிக் பற்றி தனியாக ஒரு அத்தியாயமே எழுத வேண்டும்.
மற்ற கிறுக்கு மாதிரி இந்த எழுத்து வாசனை சாமாசாரமும் எனக்குப் பள்ளிக்கூட நாட்களில்தான் பிடித்தது. ஊரில் மேற்குப் பார்த்து உடைய சேர்வார் ஊருணிக் கரை சரசரவென்று இறங்கும் பாதை. பெடலே போடாமல் சைக்கிளை கனகுஷியாக இறக்கினால் உயரமான தூணும், வரிசையாக கண்ணாடி ஜன்னலும், அழகான வாசல் கதவுமாக கோகலே ஹால். பாடப் புத்தகத்தில் தலை மட்டும் அச்சிடப்பட்டுப் பார்த்துப் பழக்கமான தேசபக்தர் கோபால கிருஷ்ண கோகலேயின் முழு உருவப்படம் வைத்த கட்டடம். வெளியே கோந்து பாட்டில் கவிழ்த்த மரமேஜை, அதன் மேலே நீளவாக்கில் பேரேடு. மேஜைக் காலில் சணல் கயறு கட்டித் தூக்கு மாட்டிய ஒரு புழுக்கைப் பென்சில். பேரேட்டையும் பென்சிலையும் அப்படி இப்படி நகர்த்தி ஒரே மட்டத்தில் கொண்டு வந்து, பெயரை எழுதிக் கையெழுத்தைப் போட்டுவிட்டு உள்ளே நூழைந்தால் வரிசை வரிசையாக மர அலமாரி.
அதிலெல்லாம் னிரம்பி வழிந்து, தரையிலும் அங்கங்கே குவிந்து கிடக்கும் புத்தகங்கள். பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு சீருடை அŠவித்த மாதிரி எல்லாப் புத்தகமும் ஒரே மாதிரி பைண்ட் செய்து சாம்பல் கலரில் மேல்சட்டை போட்டு இருக்கும். தேக்கு மர பெஞ்சுகளில் ஆரோகணித்து, பைண்ட் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்தபடி சில ஆத்மாக்கள். பெஞ்ச் கடைசியில் “ஆசு நகர மந்திரவாதி”” புத்தகத்தில் முழுகி கண்ணை இடுக்கிக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் டிரவுசர் போட்ட சோனிப் பையன் தான் இதை எழுதிக் கொண்டிருப்பவன்.
எல்லா அலமாரியிலும் கீழ் வரிசைகளில் என் கைக்கு எட்டும் உயரத்தில் தேவதைகள், ஏழு கடலுக்கு அப்பால் தங்கக் கிளியைத் தேடிப் போகும் ராஜகுமாரர்கள், துப்பறியும் சங்கர்லால், கட்டு மஸ்தான முகமூடி, குள்ளக் கத்தரிக்காய் ஆஸ்ட்ரிக்ஸ், அவனுடைய பீப்பாய் சைஸ் நண்பன் ஒபீலிக்ஸ், விக்கிரமாதித்தன், வேதாளம் என்று மனதுக்குப் பிரியமானவர்கள் நான் தொட்டு எடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாப் புத்தகமும் கம்மென்று ஓர் அற்புதமான அதாவது பழைய காகித மற்றும் கோந்துப் பசை, அந்துருண்டை வாசனையோடு என்னை எடு என்னை எடு என்று அழைக்கும்.
அலமாரிகள் மேல் வரிசை புத்தகங்கள் கைக்கு எட்டாதது மட்டுமில்லை, சின்னப் பையன்கள் படிக்க வேண்டாதவை என்று லைபிரேரியனோ வேறு பெரியவர்களோ முடிவு செய்தவை. அவற்றை அனாயாசமாக எடுத்து ஏதோ படித்து அப்புறம் மேஜையில் விட்டுப் போவார்கள் அதே போன்ற பெரியவர்கள்.
மலைபடுகடாம், சேக்ஷ்பியர் நாடகம், காளிதாசனின் சாகுந்தலம் மொழிபெயர்ப்பு என்று புரட்டிப்பார்த்தால் தலைப்பு தட்டுப்படும்.
இப்படித்தான் ஒரு தடவை கையில் கிடைத்தது “ஆயிரத்தொரு இரவு அரபுக் கதைகள்’. அதை எடுத்துக் கொண்டு நாலு அடி பெஞ்ச் பக்கம் நடப்பதற்குள் நூலகர் அவசரமாக என் கையிலிருந்து பறித்து அலமாரியில் வைத்துவிட்டார். “நீயும் வேட்டி கட்டற காலத்துலே படிச்சுக்கலாம்டா பையா’ என்றபடி நகர்ந்தார் அவர். நூலகத்துக்கு உள்ளேயே அந்த அலமாரிப் பக்கம் நாற்காலி போட்டு உட்கார்ந்து சாயந்திர டிபனாக ஆனந்த பவான் மசாலா தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் வேலை மெனக்கெட்டு எழுந்து வந்து இப்படி என்னைத் தடுத்தாட்கொண்டார்.
அந்த šமிடம் அந்தப் பழைய் புத்தக வாசனையோடு அவருடைய கையில் மசாலாதோசை மணமும் சேர்த்து அடித்தது. பிற்காலத்தில் எத்தனையோ முறை அரபுக்கதைகளின் மாயாலோகத்தில் அமிழ்ந்திருக்கிறேன். ஆனாலும், “ஆயிரத்தொரு இரவுகள்’ என்று எங்கே புத்தகத்தைப் பார்த்தாலும் உள்மூக்கில் மசாலா தோசை வாடை தூக்கலாக அடித்துக்கொண்டே இருக்கிறது.
லைபிரரி புத்தக வாடை இப்படி என்றால் வாரச் சந்தை கூடும்போது இன்னொரு விதமான புத்தக வாசனை. பலாச்சுளை, வெள்ளரிக்காய், மாம்பழக் கடைகளுக்குப் பக்கம் மூலிகை மருந்து விற்கிற இரண்டு தாடிக்கார முதியவர்கள் கடைபரத்தி šற்பார்கள். மருந்துக் குப்பி வாடைக்கு நடுவே பழைய அல்லி அரசாணிமாலை, தேசிங்கு ராஜன் கதை பெரிய எழுத்து புத்தகம் நாலைந்து அடுக்கி இருக்கும். அதில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்து, ராகம் போட்டு, “மட்டக் குதிரை ஏறிப் போனான் ராஜா தேசிங்கு’ என்று ஒரே குரலில் இருவரும் பாடும்போது அவர்களின் நீண்ட தாடி ஒரே நேரத்தில் எழுந்து தாழ்வது பார்க்கப் படு சுவாராசியமாக இருக்கும். அந்தப் பெரிய எழுத்துப் புத்தகங்களை வாங்காமல் போனது பற்றி இன்னும் வருத்தம்தான்.
ஊரில் திருவிழா வந்தால், சோவியத் புத்தகக் கடை போடுவார்கள். மிர் பதிப்பகம் வெளியிட்ட அந்தப் புத்தகங்கள் தொட்டால் வழவழ என்று நேர்த்தியான காகிதத்தில், ஒரு தனி ரஷ்ய வாசனையோடு வரும். விலையும் கொள்ளை மலிவுதான். அங்கே தான் சிவப்புத் துண்டு போட்ட ஓர் அண்ணாச்சி அழகான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
யா.பெரல்மான் எழுதிய “பொழுதுபோக்கு பெüதிகம்’ என்ற அப்புத்தகத்தையும், கூடவே இனாமாகக் கிட்டிய வேரா பனோவா எழுதிய “செர்யோஷா’ என்ற சின்ன நாவலையும் ரஷ்ய வாசனைக்கும் எல்லாவற்றுக்கும் மேலான் உயர்தரமான எழுத்து வாசனைக்குமாக எப்போதும் னினைவு வைத்திருப்பேன். சிவப்புத் துண்டைத் தோளில் போட்டிருந்த அந்த அண்ணாச்சியையும்தான்.
(Dinamani Kadhir – Satre Nakuka – Oct 05)