An excerpt from my forthcoming novel MiLAGU
அடர் சிவப்பில் நனைந்து இருக்கிற மிங்குவின் வயிற்றை கண்ணீர் கண்ணில் மறைக்க உற்றுப் பார்க்கிறார் அவர். வயிற்றில் இருந்து குருதிப் பெருக்கு குறைந்து வருவதை அவருடைய வைத்திய அனுபவம் சொல்கிறது.
கொலைபாதகம் நடத்த வந்த பெண்பிள்ளை ஓடி வந்து குறுவாளை அழுத்தப் பிடித்து ராணியின் தலையில் ஆழமாக வெட்ட உத்தேசித்திருந்தாள். அந்த வேகமும் அழுத்தமும் எல்லாம் குறுக்கிட்டுப் பாய்ந்து வந்த மிங்குவின் வயிறு வாங்கிக் கொண்டது.
வைத்தியர் வருவதற்குள் ஆழப் பதிந்த கத்தியை எடுக்க எல்லோருக்கும் சங்கடம். அது பெரும் ரத்தப் போக்கில் முடிந்து போகும் என்ற அச்சம். கத்தி வயிற்றில் பதிந்த முற்பகல் பத்து மணிக்கு என்றால் அது தானே கீழே விழுந்தது உச்சிப் பொழுதானபோது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வேண்டா விருந்தாளியாக மிங்குவின் வயிற்றில், தேகத்தில் என்னவெல்லாம் களேபரம் நிகழ்த்தியிருக்குது அந்த சீனக் கத்தி என்று மருத்துவச்சி நடுராத்திரிக்கு சுவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்.
வைத்தியர் மிங்குவின் வயிற்றில் இருந்து ரத்தப்போக்கு கணிசமாக மட்டுப்பட்டதை உறுதி செய்துகொண்டார். அடுத்து அவள் வயிற்றில் தாமரை இழை வைத்து சத்ர சிகிச்சையாக நான்கு தையல் போட தண்ணீர், வெள்ளைக்கார மருத்துவர் கொடுத்த கிருமிநாசினி, கட்டுப்போட வெள்ளைத் துணி என்று எடுத்து வைத்தார்.
ஆங்கிலேய மருத்துவன் சொன்னபடி ஆனால் தாமரை நாரை வைத்து மிங்கு வயிற்றில் தையல் போட்டார். வலிக்கும் தான். மரண வலி. அவள் பொறுத்துக்கொள்ளப் பழகி விட்டாள்.
அப்போதுதான் வைத்தியருக்கு நெல்பரலி நினைவு வந்தது.
ஆழமான காயத்தை ஆறவைப்பது, ரத்தப்போக்கை மட்டுப்படுத்தி இனியும் ஏற்படாது செய்தல் இந்த விஷயங்களில் நெல்பரலி எப்படி பயன்படும் என்று அறிய அவசர அவசரமாக அலமாரியில் இருக்கும் நூற்றைம்பது வருடம் முந்திய தமிழ் ஓலைச் சுவடிகளைப் புரட்டினார் அவர்.
நெல்பரலி ஒரு சர்வரோக நிவாரணி, இறைவன் அமிர்தத்தை நெல்பரலி ஆக்கி அதை அதன் மதிப்புத் தெரியாதவர்களுக்கு நடுவே குப்பைச் செடி மாதிரி வளர்த்து வைத்திருக்கிறான் என்பது வைத்தியரின் திட நம்பிக்கை.
இதோ இருக்கிறதே. அந்நிய வஸ்துக்கள் மூலம் உடலில் காயம் ஏற்பட்டால் நெல்பரலி கஷாயத்தில் வசம்பு இடித்துப்போட்டு பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை இட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வர, பழுப்புச் சர்க்கரை ஒரு சிறு கரண்டியளவு கரையவிட்டுப் பருகக் கொடுத்தால் உடம்பில் ஏற்பட்ட ஆழமான காயம் சீக்கிரம் ஆறும், ரத்தப் போக்கு மட்டுப்படும் என்று பூடகமாக எழுதப்பட்ட சித்தர் பாடல். ‘சிவசம்பு காயம் ஐந்தொன்றாகும் பெருங்காயம் நிலைக்கும்’ என்ற இறுதி வரிக்கு வசம்பும் பெருங்காயமும் கூட்டி நெல்பரலியோடு தர காயம் ஆறும், உடல் ஆரோக்கியப்படும் என்று உடுக்குறியிட்டுப் பொருள் சொன்னது சுவடி.
அதை அப்படியே கடைப்பிடித்தார் வைத்தியர். கஷ்டப்பட்டு மிங்குவை இரண்டு மடக்கு நெல்பரலி கஷாயத்தை பருக வைத்தார் அவர். என்ன சொல்ல, கத்தி வயிற்றில் தைத்த இடத்தில் மறுபடி கணிசமாக ரத்தப் பெருக்கு உண்டானது.
வைத்தியர் நெல்பரலி மருந்தை உடனே நிறுத்தினார். குருதிப் பெருக்கு மட்டுப்பட்டது. ஆனால் முழுக்க நிற்க வைக்க முடியவில்லை . மிங்குவின் நினைவு தப்பவில்லை என்றாலும் அவள் கண்கள் மூடியே இருந்தன.
என்னமோ சந்தேகம் தோன்ற ஓடிப்போய் ஓலைச் சுவடிகளை பெட்டியோடு இறக்கி இன்னொரு தடவை பார்த்தார் வைத்தியர். ’வசம்பு இடித்துப் போடச் சொன்னது சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.
வசம்பும் ரத்தமும் ஒன்றுக்கொன்று இழைந்து போகாமல் எதிர்த்து வந்து ஆரோக்கியத்தை மோசமாக்கி விடும் என்று மேலும் சொன்னது இந்த சுவடி.
ஆண்டவனே!
வைத்தியர் பெருங்குரல் எடுத்து அலறினார்.
மிங்குவின் நோய்ப் படுக்கைப் பக்கம் அவர் ஓடுவதற்குள் கண்ணில் ஒரு சின்னச் சிரிப்போடு மிங்கு விடைபெறாமல் புறப்பட்டுப் போயிருந்தாள்.
மிங்கூஊஊஊ
அவர் மௌனமாக அழுதார். சொல்லித் தீராத துயரத்தை மருந்துப் பெட்டிமேல் தலையை மோதி மோதி வெளியாக்க முயன்றார். எல்லா மருந்து, எல்லா வைத்தியம், எல்லா மூலிகை, எல்லா எண்ணெய், எல்லா மருத்துவர்கள், எல்லா நோயாளிகள், எல்லா கொலைகாரப் பெண்டுகள், எல்லா குறுவாள் அடித்துத்தரும் கருமான்கள் என்று வகைதொகை இல்லாமல் எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் கோபம் ஏற்பட்டது.
அவர் படித்தும், பார்த்துக் கற்றும், அனுபவத்தில் படிந்தும் பெற்ற மருத்துவ அறிவெல்லாம் ஒன்றுமில்லாமல் போனதாக உணர்ந்தார். எல்லாம் இழந்த அநாதையாக சுய பச்சாதாபம் மேலெழ தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவருடைய மிங்கு இல்லாமல் போனாள்.