new bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 19 இரா.முருகன்


நான் சுவர்க்கத்தில் காலாற உலவியபடி தேவதைகளை நினைத்துக் கொண்டிருக்கும்போது இதைத் தொடங்கலாம்.

தியூப்ளே வீதியில் பழைய கருக்கு அழியாமல் இருக்கும் அழகான கட்டடங்களைத் தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்தால், மேலே எங்களுடைய இருப்பிடமும், நேர் கீழே, அப்பா மேனேஜராக இருந்த பேங்கும் அமைந்த கட்டிடம் சிறப்புப் பரிசைப் பெறத் தகுந்தது. விஸ்தாரமான கீழ்த் தளம். அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உயர்ந்த மாடி. நுழைந்ததும், நீண்டு நிமிர்ந்த வைரம் ஏறிய மரத் தூண்கள் கம்பீரமாகக் கட்டிடத்தை முன்னிலைப் படுத்தும். மேல் தளத்தில் வரிசையாக அமைந்த பிரஞ்சு ஜன்னல்கள், இந்த இடத்தை இன்னும் தியூப்ளே ஆட்சிக் காலத்தில் இறுகப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும். சுண்ணாம்புகூட தியூப்ளே காலத்தில் பூசியதாக இருக்கும்.

கீழ்த் தளத்தையும் மேல் தளத்தையும்விட மனதை அள்ளுகிற இடம், மொட்டை மாடி. மரத்தால் வேய்ந்த கூரை, மலையாளக் கரைக் கோவில்கள்போல சீராக இறங்கி இருக்கும். கதவுகள் இல்லாத இரண்டு முற்றங்கள், அடுத்தடுத்து விரிந்து வெய்யில் காய்ந்துகொண்டிருக்கும். மார்பு திறந்த வீனஸ் சிலையும், பறக்கும் தேவதைகளுமாகப் புடைப்புச் சிற்பங்கள் சுவரில் இருந்து வரவேற்க, பச்சைக் கண்ணாடிச் சில்லுகள் ஜன்னல்களில் அடைத்த ஒரு பின்னறையும் மொட்டை மாடியில் அடக்கம்.

பின்னறை, இந்தக் கட்டிடம் முப்பது வருஷம் முன்னால் ஹோட்டலாக இருந்தபோது, உரிமையாளரான பிரஞ்சு துரை சாயந்திரம் மாடியில் லாந்திவிட்டு உள்ளே சிநேகிதர்களோடோ சிநேகிதிகளோடோ உட்கார்ந்து ஒயின் சாப்பிட என்று தெரிகிறது. இப்போது பிரஞ்சு துரையும் இல்லாமல், ஹோட்டலும் போய் பேங்க் வந்து, அந்த அழகான அறை முழுக்க பேங்கின் பழைய லெட்ஜர், வவுச்சர் சமாசாரங்கள் தூசி படித்து கிடக்கின்றன.

சுற்றி இருக்கும் வலிமையான கைப்பிடிச் சுவருக்கு அருகில் நின்று பார்த்தால் கிழக்கே அதிக தூரத்தில் இல்லாமல் அலையடித்துக்கொண்டு கடல் கிடக்கும். மேகம் இல்லாத பொழுதுகளில் கடலைத் தொட்டு விரியும் நீல வானத்தில் ஒட்டிப் பறக்கும் பறவைக் கூட்டங்கள்கூட தட்டுப்படும். கடல் காற்று வீசும் மாலை நேரத்தில் மொட்டை மாடிதான் சுவர்க்கம்.

மாடியில் காலாற உலவியபடி நான் ஜோசபினை நினைத்துக்கொண்டேன்.

காரைக்கால் போய் வருகிறதாகப் புறப்பட்டுப் போனவள், ஒரு வாரமாகத் திரும்ப வரவேயில்லை. கசினுக்கு கல்யாணமாம். பிரான்ஸில் பெரிய நகரமான மார்செய்லியில் இருந்து கல்யாணத்துக்கு ஜோசபினுடைய அத்தை வரப்போகிறாளாம்.

அப்புறம் உனக்கு ஒண்ணு தெரியுமா, உன்னோட ஷெர் அமி. டியர் ப்ரண்ட் மிசியே விக்தொ ப்ரான்ஸ்வா பூமோ… அவரும் வரப்போறார்.

விக்தொகூட நீ எதுக்குப் போகணும்?

எரிந்து விழுந்தேன். விக்தொ இல்லை என்றால் நான் டவுன்ஹாலில் நடனத்துக்கே போயிருக்கமாட்டேன். என் ஜோசபின் எனக்குக் கிடைத்திருக்கமாட்டாள். ஆனாலும் என்ன, அவரோடு ஏன் ஜோசபின் பயணம் போகணும்?

’சாருக்கு கோபத்தைப் பாரு. ஜிவ்வுனு முகமெல்லாம் சிவந்து போய்…’

ஜோசபின் என் நெற்றியில் திருஷ்டி கழித்துவிட்டுச் சிரித்தாள். கையைத் தட்டிவிட்டேன்.

’பின்னே ஏன் விக்தொகூடப் போறேன்னு சொன்னே?’

ஜேசு. இந்தப் பிள்ளைக்கு கொஞ்சம் புத்தி கொடு. விக்தொ அங்கிள் என் அத்தைக்கு அவங்க ஹஸ்பெண்ட் வழி உறவுன்னு இவன்கிட்டே சொல்லு. கல்யாண மாப்பிள்ளைக்கும் உறவுன்னும் மறக்காம சொல்லு. மிசியே விக்தொ அவர் பாட்டுக்கு காரைக்கால் போறார். நல்ல பொண்ணு ஜோசபின் பாவம். அவ பாட்டுக்கு போறா. ஒரே பஸ்கூட இல்லேன்னு சொல்லு ஜேசப்பா. ஸ்தோத்ரம்.

அந்த ‘சொல்லு ஜேசப்பா’வில் இருந்த செல்லமான கெஞ்சலுக்கு, நானாக இருந்தால் ஓடிவந்து சொன்னபடி செய்திருப்பேன். போகட்டும். சமாதானமாகி அவளோடு இருந்து குரிசு வரைந்துகொண்டேன்.

‘கசின்ங்கறே, உன்னைக் கட்டிக்க மாட்டேனுட்டானா?’

அவள் வாயைப் பிடுங்கினேன். சுங்கச்சாவடிக்குப் பின்னால் ஆள் வராத கடல்புரத்தில் உட்கார்ந்திருந்தோம்.

‘ஹேய், என்னைக் கல்யாணம் கட்டிக்க ஒரு ராஜகுமாரன் தங்கத் தேர்லே வருவான். எம்.ஜி.ஆர்., சினிமா மாதிரி தூக்கிப் போட்டுக்கிட்டு கிளம்பிடுவான்.’

டொக் டொக் என்று வாயால் குளம்பு சத்தம் ஒலித்து, திமிர்த்து வரும் பஞ்சகல்யாணிக் குதிரை. அடக்க வேண்டாம். பார்த்து அனுபவிக்க வேணும்.

‘சரியா?’ கட்டை விரல் உயர்த்திக் காட்டினாள். பற்றிக்கொண்டேன்.

‘தங்கத்தேர் ஆர்டர் கொடுத்திருக்கு. இப்போதைக்கு ராலே சைக்கிள் போதும். கேரியர்லே கடத்திப் போகலாமா? இல்லே, மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வர்ற டெம்போவிலே கைகாலைக் கட்டித் தூக்கிப் போகட்டுமா’?

‘எங்கேடா?’

‘அது உனக்கு அநாவசியம். ஐயர், மாலை, தேங்கா, பழம், தாலி எல்லாம் ரெடியா இருக்கும். நீ அதுலே ஃபிட் ஆகமாட்டியா? சரி வேணாம். சர்ச் பாதர் கையிலே பைபிளைப் பிடிச்சுட்டு. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கு’ன்னு மந்திரம் சொல்வார்’.

‘டேய், அது செத்தா சவ அடக்கத்துக்குச் சொல்றது.’

அவள் என் காதைத் திருகினாள். உனக்கு திமிர் ஜாஸ்தியாப் போச்சு என்று கன்னத்தில் எச்சில் பட அழுத்தி முத்தினேன். ஏண்டா இப்படிச் செஞ்சே என்று என் கையை எடுத்துக் கன்னத்தைத் துடைத்துக்கொள்வதாக ஈரம் பரத்திக் கோபம் காட்டினாள்.

‘முகலாய ராஜகுமாரி மாதிரி தழையத் தழைய வெள்ளை பைஜாமாவும் மேலே கிச்சுன்னு கருப்பு சட்டையுமா இருக்கற பொண்ணுக்குக் கன்னத்திலே முத்தம் கொடுத்து அணைச்சுக்கணும்னு நளவெண்பா சொல்லுது’ என்றேன்.

நளவெண்பாவிலே ஏது சல்வார் கமீஸ் என்று அழகு காட்டினாள். நாக்கைத் துருத்தி அழகு காட்டும் பெண்ணுக்கு அந்தச் சிவந்த நாக்கில், முடியாவிட்டால் உதட்டில், பாராட்டை எழுதணும்னுகூட நளவெண்பா சொல்லுது.

நான் நெருங்கி உட்கார்ந்தேன். அவள் என் தோளைப் பிடித்துத் தள்ள மறுபடியும் அப்படியே அமர்ந்தேன். தள்ளிய கைகளை ஈர மண்ணில் தாழ்த்தி வலுவாகப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்த்தாள். உயிர்தான் விலை இந்தப் பார்வைக்கு. வருடி அணைக்கும் கருவிழிகளில் கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போகச்சொன்னால், மறு பேச்சின்றி சந்தோஷமாகப் போய்விடுவேன்.

‘நீயும் யூதிகோலன் போட்டுக்க ஆரம்பிச்சிட்டியா?’ என்றாள் முகர்ந்தபடி.

‘ஆமா, எப்பவும் உன்னோட இருக்கற மாதிரி இந்த வாசனை இதமா இருக்கு. ராத்திரிகூட புதுசாப் போட்டுக்கிட்டுத்தான் உறங்கப்போறேன்’.

குட்டி நட்சத்திரம்போல வட்டமாக ஒட்டியிருந்த அவளுடைய மூக்குப் பொட்டை அழுத்தியபடி சொன்னேன்.

போடா என்றாள் செல்லமாக.

எங்கே போக?

என்னைக் கேட்டா? மூக்கு விடைக்கக் கேட்டாள்.

தங்க மூக்குப் பொட்டுக்கு அழகு சேர்த்த அந்தத் துறுதுறு மூக்குக்கு அடுத்த அபராதம் விதித்தேன்.

‘முழுசாக் கடிச்சுத் துப்பிடு. மண்டோதரி மாதிரி ஆயிடுவேன்’ என்றாள்.

‘அது சூர்ப்பனகை. தப்பா சொன்ன வாய்க்கு அடுத்த…’

‘நீ வர வர ராட்சசனா ஆயிட்டிருக்கே. நான் போறேன்’.

அவள் எழுந்தாள். உட்காரச் சொல்லி அவள் கையைப் பற்றி இழுத்தேன். சரிந்து மிக நெருக்கமாக முகத்தில் முகம் இழையக் கால் மண்டியிட்டு அமர்ந்தாள்.

‘ஜோஸ்ஸி…’

‘என்னடா?’

‘ஜோசபின்’

‘சொல்லுடா’

‘ராஜாத்த்த்தீ, எண்டெ ஸ்வந்தம் கள்ளியங்காட்டு யக்ஷி, கரளிண்டெ கரளே, கருத்தம்மா, ம ஷெரி… உன்னை நான் எப்படிக் கல்யாணம் செஞ்சுக்கணும்?’

வேடிக்கையாகத்தான் சொல்ல உத்தேசித்திருந்தேன். ஆனாலும் குரல் கம்மி உருக்கமாக அது வெளிவந்தது. ஏன் என்று தெரியாமல் என் கண் நிறைந்தது.

அவள் ஆச்சரியத்தோடு பார்த்தாள். இது வேண்டாம் என்று அழுத்தமாகச் சொன்னாள். விலகி அமர்ந்தாள்.

தூரத்தில் கரையிலிருந்து சமுத்திரத்துக்குள் நீண்டு கிடந்த கடல் பாலத்தைப் பார்த்தபடி அமைதியாக இருந்தோம். எங்கேயும் இட்டுப்போகாத பாலம். கப்பல் வந்தால் ஏறிக் கண் காணாத கடலின் அக்கரை போகலாம். காத்திருக்க வேணும். வருமோ?

இருட்டத் தொடங்கியது. என்னையும் இழுத்து நிறுத்தியபடி மறுபடி எழுந்தாள் ஜோசபின். சாரிடா என்றாள். எதுக்கு என்று கேட்டேன். பதில் வரவில்லை.

சைக்கிள்களை எடுத்துக்கொள்ள, அலைகள் மோதிப்போகும் சுவர் ஓரமாக நடந்தோம்.

‘நானும் காரைக்கால் வரட்டா? உன் கசின் கல்யாணம் முடிஞ்சதும் அதே சர்ச், அதே கெஸ்ட், அதே பாதர், அதே பிரதர், அதே சிஸ்டர், அதே கெட் அப்பிலே நம்ம மேரேஜ் வச்சுக்கலாம்’.

‘கஞ்சப் பிசுனாரி… உ ஸ்தேத் அன் அவ, விட்டா அதே மாலையைப் பறிச்சு போட்டுக்கலாம்னு சொல்வே போலே இருக்கே…’ ஜோசபின் சிரித்தாள்.

‘ஆமா, அதே வீட்டுலே ரிசப்ஷன். அதே ரூம்லே…’ நிறுத்தாமல் சொன்னேன்.

‘ஏய்… வேண்டாம். நீ விவகாரமான பையன். ஸ்டாப்’. ஜோசபின் கையமர்த்திச் சிரித்தபடி சைக்கிளில் அமர்ந்தாள்.

‘எப்ப காரைக்கால்லே இருந்து திரும்பி வருவே?’

அழும் குழந்தைக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

‘சீக்கிரம் வந்து என்ன பண்ணனும்? புருஷனா, பிள்ளைகுட்டியா? மெதுவா வர்றேன்’.

என்னைச் சீண்டி வேடிக்கை பார்க்கிறாள்.

‘ரெண்டே நாள் மட்டும் லீவு தர்றேன். திங்கள்கிழமை இதே இடம். இதே நேரம். வரலேன்னா…’

‘வந்துடறேண்டா. எனக்கும் அங்கே ஓடாது’. உண்மையைச் சொன்னாள்.

‘ரெண்டு நாள் என்ன பண்ண’? முறையிட்டேன்.

‘உனக்குத்தான் கயல் இருக்காளே. அழகுப் பொண்ணு. பெல் ஃபிலே… நல்ல ஜோடி’.

‘நான் உன்கிட்டே அதெல்லாம் கேட்டேனா? போனோம் வந்தோம்னு இரு. இல்லையோ நானும் காரைக்கால் வந்து, அதே வீட்டிலே…’

குலுங்கிச் சிரித்தபடி சைக்கிள் மிதித்து ஜோசபின் அப்பால் போனது போன வாரம். நேற்று விடிகாலைக் கனவில்கூட அந்தச் சிரிப்பு கேட்டது. அவள் இன்னும்தான் திரும்ப வந்துகொண்டிருக்கிறாள்.

தூறல் விழ ஆரம்பிக்க, சுழன்றடிக்கும் காற்றும் கூடவே சேர்ந்துகொண்டது. தீர்க்கமான மண் வாசனை வெளியெங்கும் சூழ்ந்து சுழல ஆரம்பித்தது. அந்த கந்தத்தை சுவாசித்தபடி நான் தூறல் மேலே விழுந்து நனைக்க, கைப்பிடிச் சுவருக்குப் பக்கமாக நின்றுகொண்டிருந்தேன்.

கடல் காற்று வலுவடைய, சின்னஞ்சிறு இலைகள் எங்கிருந்தோ பறந்து வந்து சிதறி விழுந்தன. பின்னறையின் ஜன்னல்கள் காற்றில் அடித்துக்கொள்ள கதவு கரகரவென்று நகர்ந்து, அப்புறம் சாத்திக்கொண்டது. அடுத்த காற்று கதவை விரியத் திறக்க, உள்ளே லெட்ஜர்களோ ஃபைல் கட்டுகளோ சரிந்து விழுந்தன. பெரிய சத்தமாக இருந்தது அங்கே.

என்ன என்று பார்க்க பின்னறக்குள் போனேன். மறுபடி தொடங்கிய சூறாவளி அலையில், ஜன்னல்கள் திரும்ப அடித்துக்கொண்டு திறக்க, கட்டுப் பிரிந்து விரிந்த ஃபைலின் பக்கங்கள் பறக்கத் தொடங்கின.

என் காலில் வந்து மோதி விழும் காகிதங்களை அடுக்கி ஃபைலுக்குள் வைத்தபடி பார்த்தேன். டிரெயினிங் கிளார்க் விக்தொ ஃப்ரான்ஸ்வா பூமோ என்று டைப் அடித்து ‘மிஸ்யூ ரெஸ்பெக்டெ – ரெஸ்பெக்டெட் சார்’ என்று தொடங்கும் கடிதம்.

பேங்க் மேனேஜருக்கு ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தில் ஃப்ரான்ஸ்வா பூமோ சீனியர் எழுதிய கடிதம் அது. அவர் மகன் விக்தொ பற்றியது. பெர்சனல் என்று போட்டு அடித்து ஒஃபிஷியல் என்று போட்டது. ரகசியம் என்று அடிக்கோடு இடப்பட்டிருந்ததும்கூட அது.

விக்தொ பெயரைப் பார்த்ததும் படிக்கத் தோன்றியது. கொடுத்துவைத்த மனுஷர். வயதானவர் என்ற சலுகையில், காரைக்காலில் ஜோசபினோடு மணிக்கணக்காக அரட்டை அடித்துக்கொண்டு விருந்து சாப்பிடுவாராக இருக்கும். அவர் மேல் காரணமே இல்லாமல், இல்லாமல் என்ன, ஜோசபின்தான் காரணம். எரிச்சல் வந்தது.

அடுத்தவருக்கு வந்த கடிதம். அதுவும் இருபத்தைந்து வருஷம் முன்னால் வந்தது. பறந்துவந்த வெள்ளிவிழாக் கடிதத்தின் பக்கத்தைத் திரும்ப ஃபைலில் வைத்தேன். அந்த ஃபைலையும் தூசி தட்டி ஒரு ஓரமாகத் தனியாகப் போட்டுவிட்டுப் படி இறங்கினேன்.

கீழே வீட்டுக்குள் நாலைந்து பேர் காக்கி உடுப்பில் வந்து ஒயர் இழுத்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களோடு, இங்கே இனிமே தனி டெலிஃபோன் லைன் என்ற சந்தோஷ செய்தியைக் கீசுகீசென்று எனக்குத் தெரிவிக்க, மேலே வார் வைத்துத் தைத்த கால்சராய் அணிந்து விக்தொவும் நின்றுகொண்டிருந்தார்.

‘இனிமேலே ஒரு சிநேகிதியை கூப்பிடாம விடமாட்டியே’

தோளைத் தட்டி சிநேகிதமாகச் சிரித்தார் வில்லன் விக்தொ.

‘சார், ஃப்ரண்ட் காமன் ஜெண்டர்’ என்றேன்.

‘நீ ஜெண்டர் பெண்டர். உனக்கு ஸ்பெஷலா அது கேர்ள் ஃப்ரண்ட் மட்டும்னு திருத்திட்டு இருக்காங்களாம்’.

அவரோடு சிரித்து, அவரோடு நடந்து வளைவு திரும்பிக் கீழே இறங்கும்போது, குரலில் எந்த ஆர்வமும் தெரியாமல் ஜாக்கிரதையாகக் கேட்டேன்.

‘சார், ஒரு வாரமாப் பார்க்கவே இல்லியே. லீவா’?

‘ஆமா, காரைக்கால்லே ஒரு கல்யாணம். க்ராண்ந் மாரியாஷ்’.

‘எனக்கும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர் வீட்டுக் கல்யாணம் பார்க்க ஆசையா இருக்கு’ என்றேன்.

வெள்ளை உடை புரள இரண்டு பெண் குழந்தைகள் தாங்கிப் பிடித்துக் கூடவர, ஜோசபின் மணமகளாக நடந்துவரும் கல்யாணம். நான் பட்டு வேட்டி உடுத்தி, தென்னங்குலை அலங்கரித்த கதிர் மண்டபத்தில் தானியம் நிறைத்த மரக்கால் பின்னே காத்திருக்கிறேன்.

‘கிறிஸ்தியன் கல்யாணம்தானே… சீக்கிரம் ஜோசபின் கல்யாணம் வருது’.

யட்சிணி வேலை மாதிரி நான் நினைத்ததைச் சொல்கிறார். ஆச்சரியத்தோடு விக்தொவைப் பார்த்தேன்.

‘என்ன அப்படிப் பார்க்கறே? யாரைக் கூப்பிடலைன்னாலும் உன்னை அழைக்காம விடமாட்டா. ஃப்ரண்ட் ஆச்சே. போய்ப் பாரு’.

விக்தொ ரகசியம் பகிரும் குரலில் சொல்லிப் படி இறங்கி, லெட்ஜர்களும் கரன்சி நோட்டுகளுமான பேங்க் உலகத்துக்குள் நுழைந்துவிட்டார்.

ஜோசபினுக்கு கல்யாணம் வருதா? நான் சொல்லாமல் எப்படி வரும்?

ஜோசபின் என்னுடையவள். நடு மண்டபத்தில் நின்று சொல்வாள்.

விக்தொ மனம் புழுங்கட்டும். டவுன்ஹாலுக்கு நடனம் ஆட வரும் அவருடைய சேக்காளிக் கிழடுகளும் இளையவர்களும் ஏங்கிச் சாகட்டும்.

திரும்பப் படியேறி வீட்டுக்குள் போகும்போது, டெலிபோனும் புதிய கருப்பில் மின்னிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். புது எண் வேறே அதன் டயலுக்குள் செருகி இருந்தது.

ஜோசபின் இருந்தால், அவளுக்கு டெலிபோன் செய்து புது இணைப்பு வந்த சந்தோஷத்தைப் பகிர்ந்திருப்பேன். காரைக்காலில் என்ன செய்துகொண்டிருக்கிறாய் பெண்ணே? அங்கே தொலைபேசி உண்டா?

‘உனக்குத்தான் கயல் இருக்காளே. அழகுப் பொண்ணு. பெல் ஃபிலே… நல்ல ஜோடி’.

ஜோசபின் சைக்கிள் ஓட்டிப்போக, கயல் மனமெங்கும் நிறைந்தாள்.

‘புதுத் தொலைபேசி எண்ணைச் சற்றே குறித்துக்கொள் உயிரே’.

கயலுக்கு நல்ல தமிழில் தொலைபேசிச் சொன்னேன்.

‘அது வேறேயா, ஏத்தம்தான்’.

நாலு தடவை நம்பரைச் சொல்லச் சொல்லி, முன்னுக்குப்பின் முரணில்லாமல் இருப்பதைச் சரிபார்த்து நோட்டுப் புத்தகத்தில் பதிந்துகொண்டாள்.

‘என்ன பண்ணிட்டிருக்கே?’

‘நாளை நவராத்திரி வருது இல்லே. பொம்மை எடுத்து வச்சிட்டு இருக்கேன்’.

‘நீயே பொம்முக்குட்டிதான். மேல் படியிலே போய் உக்காந்துடு. காலேஜும் லீவுதானே?’ வம்புக்கு இழுத்தேன்.

‘நீ வந்து அடுத்த படியிலே உக்காரு’ என்றாள். ‘சீய்ய் அது வேண்டாம். கீழே இருந்து மேலே பார்ப்பே’.

உடனே திருத்திக் கயல் சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்தது.

‘ஷொகொலா தின்னுன்னு, அல்லே குட்டி?’

‘எப்படிடா தெரியும்? மில்க் சாக்லெட்’.

‘காதெல்லாம் நனைஞ்சு போச்சுடி கழுதே’ என்றேன்.

‘ரொம்பத்தான் செல்லாம் கொஞ்சாதே’.

‘கொஞ்சினா?’

புது டெலிபோனுக்கு கொடுத்துவைத்திருக்கிறது. காக்கிச்சட்டை டெலிபோன் ஊழியர், வயர் சுருள் எடுக்கத் திரும்பவும் உள்ளே வந்திருக்காவிட்டால், நானும் அவளுக்கு ஒரு முத்தம் அனுப்பியிருப்பேன்.

‘இன்னும் ஒரு மணி நேரத்திலே டவுனுக்கு வரேன். பொம்மை வாங்கணும். கூட வர்றியா?’ கயல் கேட்டாள்.

‘வேறே என்ன வேலை?

‘பட்டீஸ்ஸரி வாசல்லே நில்லு’ என்றாள் கயல்.

‘அங்கே பன்தான் கிடைக்கும். பண்ருட்டி பொம்மை வாங்க இங்கே தியூப்ளே வீதிதான் வரணும்’ என்றேன்.

‘ஐய்யே, அதை நேரு வீதின்னு மாத்தி அஞ்சு வருஷம் ஆச்சு. தெரியாதா?’

‘நேரு பேர்லே இந்தியாவிலே ஆயிரம் வீதி இருக்கு. தியூப்ளே பெயர்லே இது ஒண்ணுதானே? அப்படியே இருக்கட்டும். விடு’.

‘பெட்டிஷன் போடு, திரும்ப மாத்தச் சொல்லி’ என்று டெலிபோனை வைத்தாள் கயல்.

பட்டிஸ்ஸரி வாசலில் அரை மணி நேரம் முன்பே போய் நின்றுவிட்டேன். சமிதிப் பெண்கள் சைக்கிள் விட்டுப் போகும் நேர்த்தியை வியந்துகொண்டிருக்க, சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து இறங்கி வந்தாள் கயல்.

‘இந்திக்காரப் பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டிருக்கியா?’

‘இல்லவே இல்லை’ என்றேன். ‘இந்தி இல்லே, குஜராத்திப் பெண்கள்’.

‘ஒழி. ஆமா, என்னடா எல்லாரும் சர்க்கஸ்லே பார் ஆடப்போற மாதிரி டிரவுசரை போட்டுக்கிட்டு. தப்பெல்லாம் இல்லே… உடுத்திக்க சௌகரியம்…’

சொல்லி நிறுத்தி என்னைப் பார்த்தாள் கயல்.

‘என்கிட்டேயும் ஷார்ட்ஸ் இருக்கு. எப்பவாவது வீட்டிலே இருக்கறபோது போட்டுட்டு உள்ளேயே சுத்தறது உண்டுதான்’. தன்னிலை விளக்கம் தந்தாள்.

‘இதைத்தான், இதையேதான் எதிர்பார்த்தேன். உன்கிட்டே என் புது நம்பர் இருக்குதானே. நாளைக்கே ஷார்ட்ஸோட எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடு. டான்னு வந்துடறேன்’.

‘அவசியம் பார்த்தே ஆகணும்னா, ஷார்ட்ஸ் மட்டும் கொடியிலே போடறேன். வந்து பார்த்துட்டுப் போ’ என்று கடுப்படித்தாள். ‘நோ ப்ராப்ளம் அங்கே ஆரம்பிச்சுக்கலாம்’ என்று சொல்லித் திட்டு வாங்கி அவள் வேகமாக நடக்க, நாய்க்குட்டியாக கூடவே ஓடினேன். சைக்கிள் வேணாம் என்று கண்டிப்பாகத் தவிர்த்துவிட்டிருந்தாள் கயல்.

‘எங்கே போகணும்?’

வளை அணிந்த கையைப் பற்றிக் கேட்டேன், செயின்ட் லாரன் தெருவுக்காம்.

‘அங்கே எல்லாம் படம், லாக்கெட், ஊதுபத்திதான் கிடைக்கும். ஆமா, கொலு வைக்க படி எல்லாம் வேணாமா?’ என் நியாயமான சந்தேகத்தையும் கேட்டேன்.

‘நீ முன்னே பின்னே நவராத்திரிக்கு கொலுப்படி எடுத்துவச்சிருக்கியா, கோலம் போட்டிருக்கியா, பொம்மை வாங்கியிருக்கியா?’ என்று கட்டபொம்மியாக உறுமினாள் கயல்.

எல்லாம் செஞ்சிருக்கேன் என்றேன் கர்வத்தோடு. கிழிச்சே என்று ஒரு வார்த்தையில் என் மமதையைக் கெல்லி எறிந்தவள் எனக்குப் பிரியமானவள்.

ரெட்டைத் தெரு மகிமை இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன தெரியும்? ராத்திரி பத்து மணிக்கு வெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம் பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும், அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை.

கொலுப்படி அசெம்பிள் பண்ணணுமா என்று கேட்டேன்.

‘அதெல்லாம் மேலே லாஃப்ட்லே போட்டிருக்கு. அப்பா எடுத்து நிறுத்தி வச்சிருப்பார். பொம்மை வாங்கிட்டு நேரா வீட்டுக்குப் போகணும். நெறைய வேலை இருக்கு’.

‘எனக்கா உனக்கா?’

‘ஏன் எனக்குன்னா செய்ய மாட்டியா?’

‘உன் விசுவாசமுள்ள ஊழியன்’ என்று குனிந்து ஜப்பானிய பாணியில் வணங்கினேன். சைக்கிள் ஓட்டிவந்த சமிதிப் பெண்கள் களுக்கென்று சிரித்து பேசியபடி கடந்தார்கள். அருகே வந்து விலகிப்போன வழுவழுப்பான அந்தக் கால்கள்.

‘என்ன, கால் கண்டார் காலே கண்டாரா?’

என் கண் போன திசையைப் பார்த்து, கவிதாயினி வம்புக்கிழுக்க நான் வாயை இறுக மூடி அவள் பின் போனேன். சமிதி வாடை கவியும் தெருக்கள். இது தியூப்ளே தெரு இருக்கும் ஊர் இல்லை. பிரஞ்சுக்காரர்கள் விட்டுப்போன பழைய நகரமும் இல்லை. வேறே நிலம். வேறே மொழி. வேறே மனிதர்கள். கடல் மட்டும் எதிரே எல்லோருக்கும் பொதுவாக அலையடித்துக்கொண்டு கிடக்கிறது.

பிரம்மாண்டமான கட்டிடங்களும், இதமான மஞ்சள் வெளிச்சம் தரும் சோடியம் விளக்குகளும், அங்கங்கே ஜன்னல் ஊடாகத் தெரியும் நீள மெழுகுவர்த்தி ஒளியை இன்னும் மென்மைப்படுத்திக்கொண்டு மேல் தளத்தில் இருந்து கசிந்துவரும் பியானோ இசையும், தோ ரொ மி என்று திரும்பத் திரும்ப எந்தக் குழந்தையோ வயலினில் வாசித்துப் பழகும் மேற்கத்திய இசையின் அடிப்படையும் கவிய வேறு உலகத்தில் இருந்த தெரு.

கயலும் நானும் இந்த நிமிடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசிவைத்து முடிவெடுத்த மாதிரி, ஆளரவமற்ற அந்தத் தெருவில் கை கோர்த்து நடந்துகொண்டிருந்தோம். கடல் காற்று கூடவே வந்தது.

‘என்ன பெயர்டா கயல்?’

நளினிகாந்த் சட்டார்ஜி.

வேகமான கடல்காற்றில் தலை கலைய, அவள் கையை விலக்கிக்கொண்டு தோளில் மாட்டி இருந்த கைப்பையில் எதையோ நடந்தபடி எடுக்க சிரமப்பட்டாள்.

‘சீப்பு உள்ளே கிடக்கு. கையிலே தட்டுப்பட மாட்டேங்குது’.

நான் சர்வ சுதந்திரமாக அவளுடைய கைப்பைக்குள் கை விட்டுத் தட்டுப்பட்டதை எடுத்தேன். பார்த்து முகம் சிவந்துபோனாள்.

‘நீ லவ் பண்ணு, மண்ணாங்கட்டியும் பண்ணு. ஒரு பொண்ணோட கைப்பையிலே கை விடறது நாகரிகம் இல்லாத விஷயம். உனக்கு இல்லாத கஷ்டம் எல்லாம் எனக்கு உண்டு. அதைச் சகிச்சுக்கிட்டுத்தான் சிரிக்கிறேன். சைக்கிள் விடறேன். சமைக்கறேன். சாப்பிடறேன். ஊட்டிவிடறேன். கிஸ் பண்ணினா ரசிக்கறேன். திரும்பத் தரேன். கஷ்டம்டா. புரிஞ்சிக்கோ. இப்படி பஞ்சும் துணியுமா நீ எந்தக் காலத்திலேயும் வெளியே போகவேண்டி இருக்காது. ஆணாச்சே’. கயல் குமுறினாள்.

அவள் என் கையில் இருந்து சானிட்டரி நாப்கினைப் பறித்துத் திரும்பவும் கைப்பையில் எறிந்தாள். தப்பு செய்ததை உணர்ந்து மனப்பூர்வமாக திசொலி டியர் என்றேன்.

அவள் சட்டென்று நின்று, எதிர்ப்பட்ட வீட்டில் பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டினாள். வங்காளியில் எழுதி இருந்தது அது.

‘நொளினிகாந்த் சட்டோபாத்யாயா. சட்டோபாத்யாயாதான் சாட்டர்ஜி. முகோபாத்யாயா முகர்ஜி. பாந்தோபாத்யாயா பானர்ஜி’.

நான் படித்து விளக்க, கயல் திகைப்போடு பார்த்து, வங்காளி தெரியுமாடா உனக்கு என்றாள். ஏதோ எழுத்துக் கூட்டி பிரஞ்சு மாதிரிப் படிப்பேன் என்று உள்ளதைச் சொன்னேன். கீழேயே இங்கிலீஷிலும் இருந்ததை அவள் கவனிக்கவில்லைபோல.

‘பக்கத்துக் கட்டிடம் பெண்கள் பள்ளிக்கூடம். இவங்களுக்கு மட்டும்’. அந்தப் பெயர்ப் பலகையையும் படித்தேன்.

‘இங்கே சமிதிப் பொண்ணு யாரையாவது தேத்தறியா?’

அவள் திரும்ப ஃபார்முக்கு வந்திருந்தாள்.

‘ஷர்மிளா தாகூர், மௌஷுமி சாட்டர்ஜி மாதிரி கிடைச்சா ஆட்சேபம் இல்லை. பானுரேகாவும் ஓகேதான். அப்புறம் ஃபரீதா ஜலால், ராக்கி…’

‘அடப்பாவி ஊர்லே ஒரு பொண்ணுகூட விடமாட்டியா?’

என் முதுகில் அடித்துவிட்டு காலிங் பெல்லில் கை வைக்கப் போனாள்.

‘ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு’ என்று அவள் கையைப் பிடித்தேன்.

‘என்னடா, முத்தம் கொடுக்கப் போறியா?’

‘சர்வ சாதாரணமாகப் போயிடுச்சு உனக்கு’.

சிரித்தேன். வேறென்ன செய்ய?

‘பின்னே, அஞ்சு நிமிஷம் நாம தனியா இருந்து, இப்படி ஒரு வீதியும் ஆள் இல்லாம கிடைச்சா நீ சும்மா இருப்பியா?’

‘எதுக்கு வம்பு? நான் மாட்டேன். யாராவது வீட்டு மாடியில் இருந்து பார்த்தா?’

‘நீயா, அதெல்லாம் யோசிக்கமாட்டே? பூட்டிவச்ச அந்த ஓர வீட்டு வாசலை ஒட்டி ஜோடியா பவழமல்லி மரம் ரெண்டு மறைச்சுக்கிட்டிருக்கே, அங்கே போகலாம்னு நினைப்பியே?’

‘பின்னே இல்லியா?’

கயல் சொன்னபடி, பவழமல்லி மரங்களின் கீழ் இதழ் கலந்தோம். கொடுத்தும் பெற்றும் மகிழ்ந்த முத்தங்களில் பூ வாசனை அடிக்கிறவை அவை.

‘யாரோ பார்க்கறாங்கன்னு தோனறுதுடா’.

ரகசியம் சொல்ல நெருங்கினாள் பெண். முகம் தோளில் பட்டு விலகியது. கயல் என் சட்டையில் ஒற்றிய இடத்தில் லிப்ஸ்டிக்கை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

‘யாரோ பார்க்கற மாதிரி இருக்கு’. திரும்ப முனகினாள்.

தெருவுக்கு முதுகைக் காட்டி நிற்கிறாள். அவளுக்கு என்ன தெரிந்தது?

‘உனக்கு என்ன முதுகிலே கண்ணா?’ அவள் உதட்டை நிமிண்டினேன்.

என் மனதில் ஏதோ நெருட, கயலை விலக்கித் தலைதூக்கிப் பார்த்தேன். தெருமுனையில் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்தபடி யாரோ என்னையும் கயலையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. என் கண்ணை சந்திக்க மறுத்து, வந்தவர் திரும்ப ஏறி உட்கார ரிக்ஷா திரும்பிப்போனது.

யாராக இருக்கும்? யார்? டூரிஸ்டுகள் பார்த்த ஊர் வனப்பில், நானும் கயலும் எங்கள் பவழமல்லி முத்தமும் சேர்ந்துகொண்டதா? ஃபோட்டோ எடுத்திருப்பார்களோ? ஃபிரஞ்சு பத்திரிகை அட்டையில் வருமோ? பாரதி தெருவில் ஜே.எஸ்ஸோடு வாங்கக் கிடைக்குமோ?

கயல் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி காலிங் பெல்லை அடித்தாள்.

ஆரோகணத்தில் மட்டும் பாடிய அந்த அழைப்பு மணி ஒலித்து நிற்க, ‘ஆஷோன்’ என்று வரவேற்பு.

ஆறரை அடி உயரமும், மூலக் கச்ச வேட்டியும், நீளமான காவிக் கதர் ஜிப்பாவும், வாயில் இன்னும் கொளுத்தாத புகைச் சுருட்டுமாக வாசலுக்கு வந்து வரவேற்ற பெரியவர், நொளினிகாந்த் சாட்டர்ஜி என்று ஊகிக்க சிரமம் இல்லை.

‘காயல், வா’.

‘அங்கிள், நான் காயல் இல்ல, கயல். இவன் என் காலேஜ்மேட்’.

‘சாரி சாரி, நெக்ஸ்ட் டைம் சரியா சொல்றேன்’ என்று சுருட்டை மேஜையில் வைத்தார்.

‘ரொபீந்தர் சின்ன வயசிலே இருந்த மாதிரி இருக்கே’ அவர் என் கையைக் குலுக்கும்போது சொன்னார்.

எந்த ரொபீந்தர்?

ரொபீந்தர் நாத் தாகூர்.

பெருமையோடு விளக்கினார். உட்காரச் சொல்லி உள்ளே போனார்.

வரவேற்பு அறையில் மிதமான வண்ணங்களும் கோடுகளுமாக ஓவியங்கள். மேஜையில் மொகஞ்சோதாரோ பிரதிமைகள்போல, சுட்ட சிறு களிமண் சிற்பங்கள்.

‘ஏ ரொபீந்தர்நாத் தாகூர், தாடி எங்கேடா?’

கயல், எதிர் நாற்காலியில் இருந்து சீண்டுகிறாள்.

சும்மா சிரித்தேன்.

‘ரவீந்தரநாத் தாகூரைச் சொன்னா, ஷர்மிளா தாகூரை நினைச்சிட்டிருப்பியே. களவாணிடா நீ’.

இந்தப் பெண்களுக்கு மனசில் இருப்பது எப்படியோ தெரிகிறது. அதுவும் பித்துப்பிடித்து கூடவே வரும் பையன்கள் பற்றி ஒரு இழை பிசகாமல்.

‘நீதான் என் ஷர்மிளா. நாணும் நங்கைன்னு அர்த்தம் அந்தப் பெயருக்கு’.

‘மெர்சி பெகூ’ என்று அவசர நன்றி நவின்றாள்.

பழைய இங்கிலீஷ் வீடுகள்போல், வரவேற்பரையில் கணப்பு வைத்த வீட்டில், கணப்புக்குள் அனல் துண்டங்கள்போல் மின் விளக்குகள் ஒளிர்ந்தன.

பக்கத்து நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கயலை, ஒரு சிற்பமாகவோ ஓவியமாகவோ செய்யச்சொல்லி, நொளினிகாந்த் மோஷாயைக் கேட்கணும்.

(தொடரும்)

தினமணி.காம் பிரசுரம் 17.9.2015

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன