We support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு


நானும் மனுஷ்யபுத்ரனோடு. நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.

இரா.முருகன்

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்கு கண்டனம்

சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

 

எழுத்தாளரும் அரசியல் – சமூக விமர்சகருமான மனுஷ்யபுத்திரன் மீது மிரட்டல் தாக்குதல் தொடுக்கப்படுவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவருடனும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்போருடனும் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

இலங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ரிசானா நஃபீக் தன் குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் வீட்டு வேலை செய்துவந்தவர். ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுமி அரசின் மரணதண்டனைக்கு உள்ளானார். நீதிமன்றம், மதவாதம் சார்ந்த சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொடுமையான முறையில், பொது இடத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

பல இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஒரு சிறுமியை இவ்வாறு கொன்றது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, ‘நக்கீரன்’ வார இதழில் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற போதிலும், மனுஷ்யபுத்திரனுக்குத் தனது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.

 

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு, அவர்களது மார்க்கத்திற்கு எதிரான கருத்தை மனுஷ்யபுத்திரன் கூறிவிட்டார் என்று கூறி அவரையும் அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களையும் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளது. எழுத்தாளரின் வாதத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மனுஷ்யபுத்திரனைத் தாக்குகிற கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் கொலைமிரட்டலே கூட விடுத்துள்ளார்.

 

மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சகிப்பின்மைகள் வளர்வது மக்கள் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும் இது, முஸ்லிம் மக்கள் அனைவரையுமே தவறான முறையில் சித்தரிக்க முயலும் சக்திகளுக்கே சாதகமானதுமாகும்.

 

பொதுவான முஸ்லிம் மக்கள் இயக்கங்கள் இப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த இயக்கங்கள் இத்தகைய பொறுமையற்ற மிரட்டல்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்கள் – கலைஞர்களும், ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் மனுஷ்புத்திரனோடு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

One comment on “We support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு
  1. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    இப்படியா மதவெறி கண்ணை மறைக்கும் இந்த கும்பல்களுக்கு ?

பொன்.முத்துக்குமார் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன