புது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி

எழுதத் தொடங்கியிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி (எடிட்டிங் செய்யப்பட வேண்டியது)

லாரி. ரொம்பப் பழையது. ஏகத்துக்கு இரைகிறது. பென்ஸ் லாரியின் கியர் நடுவில் இசகுபிசகாகச் சிக்கி விடுவிக்கப்படும் ஓசை வேறே நாராசமாகக் காதில் விழுகிறது. சின்னச் சின்னப் புரைகளாக மரச் சட்டங்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறது. லாரி கடந்து போக, காற்றில் பலமான ஒச்சை வாடை. அது உயிரின் வாடை கூட. விரைவில் இல்லாது போகும் அது. வாடைபூசிய ஐம்பது நூறு கோழிகள் மரச்சட்டங்களில் அடைத்து வைக்கப்பட்டுப் பயணம் செய்கின்றன. சிவா அந்த ப்ராய்லர் கோழிகளின் ஒன்று. நகர்ந்து கொண்டிருக்கவில்லை. பறந்து கொண்டிருக்கும் வாகனம்.

தீவனம் வந்து கொண்டிருக்கிறது. மரச் சட்டங்களில் இருந்து தலையை நீட்டி நீட்டிப் பார்க்கிறார்கள் சக பயணிகள். விமானத்தின் எகனாமி கிளாசில் கையையும் தலையையும் நினைத்தபடி சுதந்திரமாகத் திருப்ப விடாமல் மூக்கிலிருந்து வால்வரை நீண்டு மூன்று வரிசை, வரிசைக்கு மூன்று ஆசனம் போட்டுக் கோழிகளை அடைத்துச் சுமந்து போகிற விமானம் அது. அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து பிரிட்டனில் மேன்செஸ்டர் பறக்கிற பயணிகள் தூங்கித் தூங்கி விழிக்கிறார்கள்.

ஏர்ஹோஸ்டஸ் குனிந்து சூட மிட்டாய் வாடையடிக்கச் சொன்னாள் – சார், உணவு கொள்ளும் நேரம். அந்த நெருக்கத்தில் அவள் வாய் நாற்றத்தைத் தவிர்த்த பெருமிதம் வழியும் குரல். சிவா சும்மா தலையசைத்தான். ப்ராய்லர் கோழிகளுக்கு வாயைத் திறந்தால் எட்டு ஊருக்கு துர்வாடை தான். எத்தனை மணிநேரமாக விமானத்தில் நெருக்கடிக்கு நடுவே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதோ, இது காலையா, மத்தியானமா, மாலையா, இரவா என்பதோ, எங்கே எந்த நாட்டுக்கு எந்த ஊருக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறோம் என்பதோ தெரியாது மயங்கும் பிராணிகள் இவை.

பதினைந்து மணி நேரப் பயணம். இங்கிலாந்து குளிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஐந்து மணி நேரம் முன்னால் இருக்கும் நாடு. இந்த அடிப்படையை மறக்காமல் இருந்தால் காலமும் இடமும் தெரிந்திருக்கும். தெரிந்து என்ன செய்ய? பிரக்ஞையில் அது படாததும் சுகம். சிவா அறிவான்.

முந்தைய சீட் முதுகில் டெலிவிஷன் திரையைத் தடவினால் நேரமும் இடமும் உடனடியாகத் தெரியும். தெரிந்து என்ன ஆகப் போகிறது? காலைச் சாப்பாடு சாப்பிடு, ராத்திரி டின்னர் சாப்பிடு, இது மதியம், எடுத்துக் கொறி என்று யாரோ நிர்ணயித்த நேர இடைவெளியில் கொடுக்க யந்திரமாக விழுங்கிக் கொண்டிருக்கிறான். பல் துலக்குவது என்பது தாற்காலிகமாக மறக்கப் பட்டிருக்கிறது. “சாப்பிடுகிறீர்களா” என்ற ஹோஸ்டஸின் பார்வைக்கு சைவ உணவு தானே என்று குரல் கரகரக்கக் கேட்டான் சிவா. வாய் நாறி இருக்கும். சகித்துக் கொண்டு புன்னகைக்கத் தான் அவளுக்கு சம்பளம் தருகிறார்கள். இத்தனை கோழிகளையும் புன்னகையோடு மேய்ப்பது அவளுக்கும் அவள் கூடவே ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வரும் இந்தக் கருப்பின உதவியாளனுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பிரிட்டீஷ் சாஸேஜ்களும், ரொட்டித் துண்டங்களும், வெண்ணெய்க் கட்டியும், பழக்கூழுமாக சாப்பாட்டுத் தட்டை நிறைத்து நீட்டுகிறான் உதவியாளன். இது காலை உணவு. ஆக, இது காலை நேரம். எங்கே காலைநேரம்? கீழே கண்ணுக்குத் தெரியாமல் மேகங்களுக்கும் கீழே விரியும் நீர்ப் பரப்பிலும் நிலப் பரப்பிலும் இது காலை நேரம். மேன்செஸ்டர் வந்துகொண்டிருக்கிறதா? அல்லது லண்டன் மாநகருக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறோமா?

சாஸேஜை பாதி கடித்துக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் கண்ணைச் சுழற்றி உறக்கம் மேலெழுந்து வந்தது. சாஸேஜ். பன்றி மாமிசம். இங்கிலாந்தில் பொதுவான காலை உணவு அது என்று கேட்டிருக்கிறான் சிவா. இனி அவனும் பழகிக் கொள்ள வேண்டியிருக்கலாம். ஓட்ஸ் கஞ்சி அங்கே கிடைக்குமா? போரிட்ஜ் என்று கேட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கிறாள் சஞ்சிதா. அவளும் கூட வந்திருந்தால் ஓட்ஸ் கஞ்சிக்கு அலைய வேண்டி இருக்காது. சஞ்சிதா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? சான் ஓஸேயில் நேரம் என்ன? மனம் கணக்குப் போட்டுப் பார்க்கத் துவங்க, துயில் அவனை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டது.

2 comments on “புது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி
  1. surya சொல்கிறார்:

    veg meal is enquired but he is biting sausage.
    Pls modify

Era Murukan உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன