புது நாவல் : டிஸ்ட்ரிக்ட்லேயே நீளமான தலைமுடி. எமர்ஜென்ஸி புள்ளிவிவரத்திலே இதெல்லாம் அடங்குமோ?

“ஏன் பேசவே மாட்டேங்கிறே”, வட்டமேஜை மேல் உட்கார்ந்தபடி கேட்டாள் பாருக்குட்டி.

தலைமுடியை நெகிழ வாரி, முழங்கால் வரை தொங்கியதை அவள் சுவாதீனமாக முன்னால் அள்ளிப் போட, என் முகத்தில் மூலிகைத் தைலமும், மரிக்கொழுந்தும் வாடிக் கொண்டிருக்கும் கதம்பமும் நெடியைக் கிளப்பி ஒரு வினாடி கண் இருள நள்ளிரவாக்கி விட்டு அவள் தோளில் அமர்ந்தது. இது அழகு ஆக்கிரமிப்பே தான். திட்டமிட்டு நடத்தப்படுவது. யார் திட்டமோ.

காலேஜில் இரண்டு வருடம் பின்னால், என் தங்கையோடு படித்தபோது கண்டுகொள்ளவே மாட்டாள். வர்கீஸ் செரியான் என்று பக்கத்து ஊர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மகன், நெடுநெடுவென்று உசரமாக, சதா உல்ஃப் என்று சொல்வது போல் உதட்டைத் துருத்திக் கொண்டிருக்கும் சிரியன் கிறிஸ்டியன் தான் அவளுக்கு நாட்பட்ட சிநேகம். வெர்கீஸ், ஒரு உதடு பெருத்த மட்டாஞ்சேரிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு சுல்தான் பத்தேரி என்ற புண்யஸ்தலத்தில் ஒதுங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.

‘ டிஸ்ட்ரிக்ட்லேயே நீளமான தலைமுடி எனக்குத்தான் இருக்கு. தெரியுமா?”

மெய்யாலுமா? முடிக்கணக்கை எல்லாம் யார் வைத்திருக்கிறார்கள்? எமர்ஜென்ஸி புள்ளிவிவரத்திலே இதெல்லாம் அடங்குமோ?

“ரோமவர்த்தினி தைலக் காரங்க ஒவ்வொரு மாவட்டமா முடியழகி தேர்ந்தெடுத்தாங்க. நம்ம மாவட்டத்திலே என்னை செலக்ட் செஞ்சிருக்காங்க. இனி மெட்றாஸ் ஸ்டேட் பைனல்ஸ் வரும்”.

“யார் இதை தீர்மானிச்சது?”

ரெண்டு மாசம் முந்தி சசிவர்ணர் சிற்றரங்கத்திலே தாசீல்தார் முன்னிலையிலே எம்பி வந்து தேர்ந்தெடுத்தாராம். தமிழய்யா கம்பநாடர் தமிழ் இலக்கியத்தில் தலைமுடி பற்றிப் பேசினாராம். வாட் அ லாஸ் எனக்கு.

நான் அவள் தலைமுடியைப் பார்த்தேன். முழித்திருக்கும் நேரம் எல்லாம் அதை போஷிப்பதைத் தவிர வேறே காரியம் அவளுக்கு இருக்காது என்று தோன்றியது. தலைக்கு வெளியே இருப்பதற்கு செலவழிக்கும் நேரத்தில் பாதியாவது தலைக்கு உள்ளே இருப்பதற்காகச் செலவிட்டால் இந்நேரம் அவள் பி.எஸ்ஸி முடிக்க முடியாமல் மூன்று வருடமாக முடங்கிக் கிடக்காமல் அதுவும் கடந்து, மேலே எம்.எஸ்ஸியும், பி.எச்டியும் முடித்து காலேஜ் ப்ரொபசராக இருக்கலாமே என்று முதலில் இங்க்லீஷிலும் தொடர்ந்து தமிழ், முடிந்தால் மலையாளத்திலும் சொன்னால்? வேணாம், மதராஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் மூணாம் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என்று அறிவிக்கிற மாதிரி இருக்கும்.

“அப்பா பென்ஷன் பத்தி கேட்க மட்டும் வரலே, நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் முக்கியமா”, பாருக்குட்டி விஷயத்துக்கு வந்தாள் ஒரு வழியாக. ’சரி இன்றைக்கு காலை பத்தே முக்காலில் இருந்து நீ எனக்கு அதிகாரபூர்வமான காதலனாக இரு. நாம் நாளை மறுநாள்சாயந்திரம் ஊருணிக் கரையில் சந்தித்து வசந்தா ராகத்தில் அமைந்த இந்தக் கீர்த்தனையைச் சேர்ந்து பாடி காதல் புரியலாம்’ – அவள் சொன்னால் சுவாரசியமாயிருக்கும்.
“எங்களுக்கு பேங்க் லோன் வேணும்” என்றாள் அவள். எதுக்கு, முடி வளர்க்கவா? இல்லையாம். தேனி வளர்க்கவாம். என்னது? தேனீ.

//எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

குறிப்பு : இது பயோபிக்ஷன் இல்லை. ஒரு தலைமுறையின் மொத்தமான நனவிடைத் தோய்தல். பெயர்களும் இடங்களும் கற்பனையே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன