புதிய சிறுகதை – கல்யாணி மட்டும் இரா.முருகன்

கல்யாணி மட்டும்
(இரா.முருகன்)

அன்னம்மா வாசலுக்கு வந்தபோது ஏக இரைச்சலாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம். இரண்டு பெரிய தெருக்களின் சந்திப்புக்குப் பின்னால் ஒற்றை வரிசையில் ஓட்டு வீடுகள் நெருங்கியடித்து நிற்கும் முட்டுச் சந்து அது. வாசலை ஒட்டி சாக்கடை ஓடுகிற பிரதேசம். ஓடாமல் அது ரெண்டு நாளாகத் தேங்கி நிற்கிற கஷ்டம் இங்கே யாருக்குமே நினைவில் படுவதில்லை. எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் குழந்தைகள் சாயந்திரம் பந்தெறிந்து அடித்து விளையாடுகிறார்கள். சாக்கடையில் விழுந்த பந்துகளை எந்த முகச் சுளிப்பும் இன்றி ஆழமாக இரு கையும் விட்டு எடுத்து அடிபம்பில் கழுவி ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். தண்ணீர் வராத நேரங்களில் அப்படியே மணலில் புரட்டி நாலு முறை பந்தைச் சுற்றிலும் துப்பி ’சுத்தம் சுத்தம்’ என்று சொல்லி, மறுபடி விளையாடப் போகிறார்கள்,

அன்னம்மா கண் மறைக்கிறது. சாயந்திரம் ஆனால் இது ஒரு பெரிய கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து ராத்திரி டாய்லெட்டுக்குப் போகும்போது சுத்தமாகத் தெரிவதில்லை. பெரும்பாலும் தவழ்ந்து தான் போக வேண்டி இருக்கிறது. சமயத்தில் அரைக்கட்டிலேயே கழிந்து விடுகிறாள். பேத்தி ஏற்படுத்திக் கொடுத்த செவிலி மூக்கில் துணி கட்டிக்கொண்டு சுத்தப்படுத்துகிறாள். அவளுக்கும் இனி வெறுத்துப் போகும்.

பேத்தி என்றால் பேத்தியில்லை. அன்னம்மாவின் சகோதரனின் பேத்தி. செவிலி என்றால் செவிலி இல்லை. ஓங்கு தாங்கான ஒரு நடுவயதுப் பெண். பேத்திக்கு பேங்கில் வேலை. ரெண்டு தெரு கடந்து வீடு. செவிலி ஊர்க்கோடியில் குடியிருக்கப் பட்டவள். பேத்தி காலையிலும் மாலையிலும் சாப்பாடு கொடுத்துப் போவாள். ராத்திரி துணைக்கு செவிலி. காலையில் குளிக்க வைத்து உடைமாற்றிப் போவாள் அவள். மாடிக் குடித்தனமும் முன்பகுதிக் கடைகளும் தரும் வாடகையில் எல்லாம் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் சாயந்திரங்களை அன்னம்மா எப்போதும் சந்தோஷமாக எதிர்பார்க்கிறாள். கோவிலுக்கும் தட்டான் கடையில் காதுத் தோடுக்கு ஸ்குரு முடுக்கவும் போவது, வழியில், நல்ல மல்லிப்பூவாக நாலு முழம் வாங்குவது, ரயில்வே ஸ்டேஷன் கடையில் நன்னாரி சர்பத் குடிப்பது இப்படி எல்லாம் போன சாயங்காலங்கள் உண்டு தான். அவையல்ல இப்போது வருகிறவை.

“அன்னம்மா அக்கா வந்திருக்கு, பெரிய டம்ளர் எடுத்து சர்பத் போடுடா”, கடை முதலாளி சொல்லிக் கொண்டே இருக்க, ஏதாவது பாசஞ்சர் ரயில் வந்து நிற்கும். வண்டி உள்ளே உட்கார்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தவர்கள் யாராவது ஓடி வந்து சர்பத் கிளாஸைத் தள்ளி விடாத குறையாக அவளுடைய எதாவது ஒரு கச்சேரி பற்றி ஆஹா என்று சிலாகிப்பார்கள். அது ஒரு காலம்.

”கிருபையா பாலய ஆலாபனை போன மாசம் மாரியம்மன் திருவிழா கச்சேரியிலே. அடடா. சாருகேசி இனிமேல் வேறே யாரும் புல்லாங்குழல்லே வாசிச்சா கேட்கத் தோணுமா, இல்லே, மனசுலே இறங்குமா?” அவர்கள் அபிமானத்தோடு சொல்வார்கள். ஆனாலும் அடுத்த வாரம் வேறே கச்சேரிக்கும் போவார்கள். அங்கேயும் இதேபடி வேறேதாவது சொல்வார்கள்.

வாசலில் ஓவென்று பெரும் சத்தம். தெருப் பிள்ளைகள். கதவுக்கு அந்தப் பக்கம் நின்று கூப்பிடும் பிள்ளைகள். அரிசியடி அன்னம்மா பாட்டி. அதுகள் குதித்துக் குதித்துக் கைதட்டி ஆடுவது மங்கலாகத் தெரிகிறது. வேலை மெனக்கெட்டு குழந்தைகளை உட்கார வைத்து யாரோ தப்பும் தவறுமாக வகுப்பெடுத்திருக்கிறார்கள். அவள் பெயர் அன்னம்மா பெட்ரைஸ் அதை பீட் ரைஸ் என்று தப்பாகச் சொல்லித் தமிழிலும் அரிசி அடி என்று அந்தப்படிக்கே மாற்றி விட்டார்கள். பெட்ரைஸ். கிளாரினெட் சாம்ராட் குப்புராவ் பாசத்தோடு கூப்பிடுவார் – ”நாயீ, பெட்டுரைசு”. அன்னம்மா கரைந்து போவாள். அவள் குரு அவர். அவர் கிளாரினெட் போன பாதையில் அன்னம்மா குழல் நடக்கும்.

பிள்ளைகளுக்குச் சொன்னால், அரிசி அடியை விட்டு விட்டு நாயே என்று கூவ ஆரம்பித்து விடும். நாயன், நாயி இப்படியான வார்த்தைகளும் உண்டு என்றும் அவற்றுக்கெல்லாம் மரியாதையும் பிரியமுமாக அர்த்தம் செய்து கொள்வது அந்தக் கால வழக்கம் என்றும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. இவர்களைப் பெற்றவர்களுக்கும் தெரியாத விஷயம் அதெல்லாம்,

”பந்து கொடு.. பந்து கொடு”. பிள்ளைகள் அவளைச் சூழ்ந்து கொண்டு இரைந்தார்கள். ”இங்கே வரல்லேடா”. அவள் சொல்வதை லட்சியமே செய்யாமல் வீட்டுக்குள் குறுக்கே ஓடி ஜன்னல் பின்புறம், கதவுக்குப் பின்னால் என்று தேடினார்கள். பந்து தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

”அக்கா இல்லியா”? பேத்தியைத் அக்கா என்கிறார்கள். அவளுக்கு அன்னம்மா மீது அலாதி வாஞ்சை. சங்கீதம் தெரியாவிட்டாலும் பிரியம் காட்டத் தெரிந்த ஒரு ஜன்மம். இன்றைக்கு காலையில் வந்து முக்கியமான காரியம் இருக்கிறதென்று சீக்கிரமே கிளம்பிப் போய் விட்டாள். அவள் இருந்தால் இந்தப் பசங்கள் விட்டெறிந்த பந்தைத் தேடிக் கொடுத்திருப்பாள்.

”தேடிப் பார்த்து, இருந்தா தரேன்”. அன்னம்மா நாலு தடவை இதையே திரும்பவும் சொல்ல, தெருக் குழந்தைகள் மெல்லப் பின்வாங்கினார்கள். குழந்தைகள் போய் ரொம்ப நேரம் வரை தரையில் தவழ்ந்து கட்டில் அடியில் பந்தைத் தேடிக் கொண்டிருந்தாள் அவள்.

ஹால் கடியாரம் ஆறு மணி அடித்த சத்தம் காதில் பட அன்னம்மா மும்முரமானாள். பேத்தி போகும் போது சொல்லிப் போயிருக்கிறாள் – ஆறரை மணிக்கு பத்திரிகையில் இருந்து ஒருத்தர் அன்னம்மாவைப் பார்க்க வரப் போகிறாராம். இசைவிழாவுக்கு மலர் போடும்போது மூத்த புல்லாங்குழல் கலைஞர் அன்னம்மா பேட்டி அதில் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் அந்தப் பத்திரிகைக் காரர். பேட்டி இல்லை. பேத்தி அதை நேர்காணல் என்று சொல்லியது நினைவு வந்தது அன்னம்மாவுக்கு. நல்ல தமிழில் அதுதான் சரியான வார்த்தையாம்.

எட்டு வயதில் பள்ளிக்கூடத்தில் இருந்து அவளை இழுத்து வந்து கச்சேரியில் அன்னம்மாவின் அப்பா உட்கார்த்தி இருக்காவிட்டால் அவளும் நல்ல தமிழில் பேசவும், வியாசம் எழுதவும், செய்யுள் இயற்றவும் கற்றுக் கரை கண்டிருப்பாள். ஐயங்கார் சைக்கிள் கம்பெனி முதலாளி வீட்டில் மூத்த பெண் புஷ்பிணியான வைபவம். சாயந்திரம் மஞ்சள் நீராட்டுக்கு அப்புறம் வீட்டு முற்றத்தில் அன்னம்மா புல்லாங்குழலும், தாட்சாயினி மிருதங்கமும், லீலாயதாட்சி வயிற்றில் பொத்தி வைத்து உலகத்தில் இல்லாத அதிசயமாகப் பொம்பளைப் பிள்ளை வாசிக்கிற நூதன அனுபவமாக கடமும், சிவகடாட்சம் கொன்னக்கோலுமாக அமைந்த பெண்களே பங்கெடுத்த கச்சேரி. சிவகடாட்சம் பெண்ணா என்றால், அவள் ஆணில்லை என்பாள் அன்னம்மா.

அன்றைக்கு வாசித்த காம்போதியை இப்போது கேட்டால் அப்படியே வாசிக்க அன்னம்மா தயார் தான். யார் கேட்கிறார்கள்?

குப்புராவ்ஜி போல, தான் மகா வித்துவான் என்ற நினைப்பே மனதில் ஓரமாகக் கூட ஒட்டாமல், அன்னம்மாளை வாசிக்கச் சொல்லி ரசிக்க, அதில் கரைய எத்தனை பேருக்கு முடியும்? அந்த கம்பீரம் வேறு யாருக்கு வரும்?

”திருச்சி ரேடியோவிலே இருந்து கடிதாசு போட்டிருக்காங்க”. ஓட்டமும் நடையுமாக அவர் வீட்டுக்கு அன்னம்மா போன உச்சி வெயில் பொழுதில் அவர் அங்கே இல்லை. அவருடைய மூன்று மனைவிகளும் உக்ரமான சக்களத்திச் சண்டையில் இருந்தார்கள். ‘கழிச்சல்லே போறவளே, பேதியிலே நட்டுக்கப் போறவளே’ வசவுகளுக்கு இடையே அவர்களில் ஒருத்தி காப்பி காய்ச்சி சுடச்சுட எடுத்து வந்து அன்னம்மாளிடம் கொடுத்தாள் அப்போது.

கல்யாணமான நாலாம் மாசம் புருஷனைப் பறிகொடுத்தவள் என்று அன்னம்மா மேல் இரக்கம். யாருக்குத்தான் வராது? பையன் அவர்களுக்கு மகன் உறவு வேறே. அன்னம்மாவோடு ஆசைப்பட்டு ஜதை சேர்ந்தவன்.

”எத்தனை மாசம்டி கண்ணு?”, மூத்தவள் கேட்க, தலையை முடிந்தபடி மூன்றாம் மனைவி சொன்னாள் – ”பார்த்தாத் தெரியலே அக்கா? அஞ்சு முடிஞ்சிருக்கும்”. நொடியில் மூன்று பேரும் சமாதானமாகி இதுபோல உயிர் சிநேகிதம் உலகில் உண்டா என்று பார்க்கிறவர்கள் ஆச்சரியப்பட இழைந்து கொண்டிருந்தார்கள். அன்னம்மா வீட்டுக்குப் போகிறதுக்கு முன் திருப்பதி லட்டு உருண்டை என்று பிரசாதமும், கடக்கு கடக்காக உலர்ந்த வடையும் அவளுக்குக் கொடுத்து அனுப்பினார்கள். ’ஓரமா வச்சுக்கிட்டு அப்பப்போ தின்னு, உனக்கு மட்டும் தான் இது’ என்றார்கள். திருச்சி ரேடியாவுக்கு கடுதாசு எழுதி இங்கே வந்து வாசிக்கச் சொல்லி டேப்பில் எடுத்துப் போகச் சொல்லேன் என்று யோசனை வேறு. கர்ப்பிணிக்கு இந்த உபகாரம் கூடவா சர்க்கார் செய்யக் கூடாது? ஒரே குரலில் கருத்து சொல்லவும் தவறவில்லை. “வேறே கட்டிக்கோ” என்றார்கள் அவளிடம் அவர்கள். சொல்லி விட்டு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த சண்டை ஆரம்பம்.

“போய்ட்டு வா. அழுதென்ன, புலம்பியென்ன, அவன் வரவா போறான்? பொழுதன்னிக்கும் இங்கேயே உக்காந்து அழுதா என்ன வரும்? ரேடியோவிலே வாசிச்சாலாவது கைச்செலவுக்கு ஆச்சு”. அவள் அப்பாவும் சொன்னார். அவரால் கண்கலங்கப் பேசுவது தவிர வேறே எதுவும் முடியாது.

திருச்சி ரேடியோவில் கச்சேரி தர பாசஞ்சர் ரெயிலில் ஊர்ந்து திருச்சி ஜங்ஷனில் இறங்கியபோது தலை சுற்றி வயிற்றைப் புரட்டியது. அன்னம்மாவின் சித்தப்பா ஆண்ட்ரூஸ் பிள்ளை, கூட வந்திருந்தவர், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருப்பதி லட்டைப் பிடித்துக் கொண்டார். ”விக்கிரகத்துக்குப் படைச்சதை தின்னக் கூடாதுன்னு சொன்னா கேட்டாத்தானே. இப்போ வயிறு வலிக்கும். பாரு, அங்கே அசுரவித்து முளை விட்டிருக்கும்”. அவர் பாதிரியார் போல, முகத்தில் முள்ளுத் தாடியைச் சொரிந்தபடி சொல்ல, அன்னம்மா அவரை ’ சித்தப்பு, சும்மா இரும்’ என்று அரை மரியாதையோடு அடக்கினாள். அவர் அப்புறம் வாயைத் திறக்கவே இல்லை. வாய் நிறைய, மிச்சமிருந்த திருப்பதி லட்டு.

போய் இறங்கின போது ரேடியோக்காரர்கள் வருத்தப்பட்டார்கள் –’இப்போ தான் தெரிய வந்தது உங்க வீட்டுக்காரர்.. ரொம்ப வருத்தப்படறேன்’. பெண் அதிகாரி சொன்னார். ”வாயும் வயிறுமா இருக்கறது தெரிஞ்சா ஒத்திப் போட்டிருப்போமே. அடடா, ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம்”.

மைக் சரிபார்த்தபடி ரேடியோ நிலைய அதிகாரி ஒருத்தர் சொன்னார் – ”குப்புராவ்ஜி நேத்து தான் கச்சேரி செஞ்சுட்டுப் போறார்’. ராவ்ஜி கச்சேரி செய்தாரா? அன்னம்மாவிடம் அவர் அடுத்த மாதம் தான் ரேடியோவில் வாசிக்கறேன் என்று சொல்லி இருந்தார். ஏன் பொய் சொன்னார் என்று தெரியாமல் அவள் வாசிக்க உட்கார்ந்தாள். பொய்யும் சொல்வார் மேலோர்.

அம்சமாக அமைந்து போன கச்சேரி. கமாஸ் தாரு வர்ணத்தில் ’ஷடோதரி சங்கரி சாமுண்டேஸ்வரி’ என்று வாசித்து மேலே போக, மனசும், மூச்சுக் காற்றும், குழலும், ஒத்துழைக்கும் உடலும் ஒன்று பட்டு இன்றைக்கு ஜெயம் ஜெயம் என்று கட்டியம் கூற, கல்யாணி ராகம் தானம் பல்லவி, ஜோன்புரி, ஷண்முகப்ரியா என்று போய், ’கோவிந்தா நின்ன நாமாவே’ என்று ஜனசம்மோதினியில் உருகி, மாண்ட் ராகத்தில் குறவஞ்சி வாசித்து முடிக்க ரேடியோ ஸ்டேஷன் முச்சூடும் ரிக்கார்டிங்க் அறைக்கு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு பாராட்டி ஓய்ந்தார்கள். அவர்கள் கொடுத்த சன்மானத்தை விட ஆயிரம் மடங்கு விலை மதிப்பு அந்த இதமான வார்த்தைகளுக்கு என்று அன்னம்மா சொன்னாள். பெண் அதிகாரி நெய் ஜாங்கிரி வரவழைத்து எல்லோருக்கும் கொடுத்து கச்சேரி செய்த, கேட்ட ஆனந்தத்தைக் கூடுதல் இனிப்பாக்கி விட்டாள்.

வாசித்துவிட்டு வரும்போது திருவிடைமருதூர் ஸ்டேஷனில் ரயில் நின்று விட்டது. ஷண்டிங் என்றார்கள். எஞ்சினில் கோளாறு, சரி பண்ணியாகிறது என்றார்கள். ரெண்டும்தான் என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லியபடிக்குக் கக்கத்தில் சுருட்டிய துணிக் கொடிகளோடு நடந்து போனார். வீட்டுக்குப் போய்த் தலை சாய்த்து ஓய்ந்து கிடக்க வேணும் என்று அன்னம்மாவுக்கு உடம்பு சொல்லிக் கொண்டிருந்தது. வயிற்றுக்குள் இருந்தது வா, வீட்டுக்குப் போகலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தது. சீக்கிரம் அது சங்கீதமும் நாட்டியமுமான சூழ்நிலையில் பிறந்து ஸ்ருதி பிசகாது அழும்.

ஒத்தாசைக்குக் கூடக் கூட்டி வந்திருந்த நாச்சியாரம்மா ’காப்பித் தண்ணி கிடைக்குதா பாக்கறேன் அம்மாடி’ என்று இறங்கிப் போய் உடனே திரும்பி விட்டாள். ரயில் கிளம்பப் போகிறது என்று யாரோ போகிற போக்கில் சொல்லிப் போனார்களாம். இது நடந்து அரை மணி நேரம் கழிந்தும் வண்டி நகர்வேனா என்று திருவிடைமருதூரில் தான் அழிச்சாட்டியமாக நிற்கிறது.

’நாயீ’. காத்திரமாக ஒரு குரல். ஜன்னல் பக்கம் இருந்து வருகிறது அது. முண்டாசு கட்டிய தலை ரயில் பெட்டி அரை இருட்டுக்குள் கண்ணை இடுக்கிக் கொண்டு பார்க்கிறது. கிளாரினெட் சாம்ராட் ராவ்ஜியே தான் அது.

’நாயி, ரேடியோ கச்சேரி பாதிதான் கேட்டேன். சீயாழி போய்த் திரும்ப லேட் ஆகிடுச்சு. கல்யாணி விஸ்தாரமா எடுத்து வாசிச்சியாமே? அபூர்வமான தானம்னு நாச்சியார்கோவில் தட்சிணா அண்ணன் சொன்னார். எனக்கு வாசிச்சுக் காட்டேன் அதே படிக்கு.’

சுருட்டைப் பற்ற வைத்துப் புகை விடுகிறார். இதென்ன கலையில் பித்தா மனுஷனே முழுக் கிறுக்கனா? மூணு கட்டி மூணுக்கும் குழந்தைப் பேறு வாய்க்காது ஒத்துக்காரர் மகனை, சிவபாக்கியத்தின் கடைசித் தம்பியைத் தத்தெடுத்த மனுஷர் அவர். அது கிறுக்குதான். ஒத்துக்காரர் பெண்ஜாதியை பெண்டாளுகிறதாகவும் பிரஸ்தாபம் உண்டு. அன்னம்மா அறிவாள்.

இன்னும் நாலே ஸ்டேஷன் போய் மாயவரம் வந்து விடும். வீட்டுக்குப் போய் வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் இல்லையா? பிள்ளைத்தாச்சி பொம்பளை, அவருடைய வளர்ப்பு மகனுடைய வாரிசைச் சுமக்கிறவள். அற்பக் காரணத்துக்காகப் பெண்டாட்டியிடம் சண்டை பிடித்துக் கொண்டு ஓடின பயித்தாரனின் வாரிசு. வயிற்றைத் தள்ளி, உட்கார்ந்தே வந்ததால் உப்புசம் பாரித்து சங்கடப்பட்டபடி அவள் ராவ்ஜிக்குக் கல்யாணி வாசிக்க வேணுமாம். அதுவும் ரயில் பிச்சைக்காரி போல, ஓடுகிற ரயிலில். ஓடவில்லைதான்.

”மாமா, சரியா வருமான்னு தெரியலே, ஒரேயடியா உங்க பேரன் படுத்தறான்”.

”அவங்க அப்பனைக் கொண்டிருக்கான். அவன் வயித்துக்குள்ளே உதைக்க உதைக்க அவங்கம்மா நெல்லுக் குத்த, பால் கறக்கன்னு பிரசவ நேரம் வரை சுத்திக்கிட்டிருந்துச்சும்பாரு ஒத்துக்காரர். சோறு பொங்கி, கோழி அடிச்சு கறி பண்ணி வச்சுட்டுத்தான், ‘வலிக்குது, நீங்களே எடுத்துப் போட்டுக்குங்க’ன்னு கையைக் காட்டிட்டு படுத்துச்சாம். ஒரு மணி நேரத்திலே அவன் பிறந்துட்டான். போகுது. நீ எனக்காக கொஞ்சம் வாசிக்க மாட்டியா நாயி?”.

வாசித்தாள். அங்கேயே அமர்ந்து, உடல் உபாதையைப் பொருட்படுத்தாமல் சுவாதித் திருநாள் கிருதி ’அத்ரிசுதாவர கல்யாணசைல’ வாசித்தாள் அன்னம்மா. கிராமபோனுக்கு முன்னால் நாய்க்குட்டி மாதிரி அவள் முகத்தையே பார்த்தபடி இருந்த அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. அடுத்த, அதற்கும் அடுத்த கம்பார்ட்மெண்ட்களில் இருந்தெல்லாம் யாரோ வந்து பார்த்து ஒரு நறுக்கு கல்யாணி கேட்டுவிட்டு நடக்க, ராவ்ஜி அனுபூதி நிலைக்குப் போயிருந்தார். அவளை ஆரத் தழுவித் தலைதொட்டார். ‘நீயே கல்யாணி’ என்றார். அவள் நெஞ்சில் சிலுவை வரைந்து கொண்டாள். பரிசுத்த ஆவி எல்லோரையும் ரட்சிக்கட்டும்.

அவள் மெல்லக் கேட்டாள் : “ஏன் மாமா, உங்க கச்சேரி ரேடியோவிலே வந்த சமாசாரமே சொல்லலியே. நான் கேட்கக் கூடாதா?”

“அதொண்ணுமில்லே நாயி, இவன், கணேசனுக்கு தான் கச்சேரி அன்னிக்கு. ஆறு மாசம் முந்தியே ஏற்பாடு ஆனது. பெறகு, உங்கிட்டே கோபிச்சுக்கிட்டு ஓடிட்டான். ரேடியோவிலே ஏத்துக்கிட்டு மாட்டேன்னு சொல்ல முடியுமா? கவுர்மெண்ட் ஆச்சே. அதான் நானே போய் வாசிச்சுட்டேன். எங்கெல்லாம் அவனுக்குப் பதிலா நிக்க முடியுமோ அங்கே எல்லாம் நிக்க ஆசைதான்”.

சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் அன்னம்மா. உடனே உதடு துடிக்கத் தலையைக் குனிந்து கொண்டாள். அப்புறம் அவள் பேசவே இல்லை.

”மெயில் போனாத்தான் இதை எடுப்பாங்க. இரு, இதோ வந்துட்டேன் தாயி”. ராவ்ஜி எழுந்தார். என்ன ஆச்சு என்று புரியாமல் பார்த்தாள் அன்னம்.

”ஸ்டேஷன் பக்கம் நாகப்பட்டண ஐயன் கடையிலே சுடச்சுட பால்கோவா செஞ்சு இறக்கி இருப்பான். வாங்கியாறேன். உனக்குத் தரணும்னு ஆசை”.

அவள் வேணாம் என்று தலையாட்ட, அவர் இறங்கிப் போய்விட்டார். போனவர் போனவர்தான். நாற்பத்தஞ்சு வருஷமாகப் பால்கோவாவுக்காக அன்னம்மா காத்திருக்கிறாள். மனதில் இன்னும் பயம். இன்னும் ஆசை.

மழை அடர்ந்து வந்தது. சீரான வேகத்தில் வாசல் ஷெட் தகரக் கூரை மேல் மழைத்துளிகள் மோதி ஆர்பரித்துக் கொண்டிருந்த சத்தம் அன்னம்மா மனதுக்கு இதமாக இருந்தது. அது ஓயும் வரை வேறேதும் செய்ய வேண்டாம். வேறு எதைப் பற்றியும், பழசோ, புதுசோ, நினைக்கவும் வேண்டாம். அந்தப் பத்திரிகைக்காரப் பையன்? வரப் போவதில்லை. அவனும் வேறே எங்காவது மழை பாடுவதைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.

இல்லை, வந்து விட்டான். வாசலில் காலிங் பெல்லைப் பொறுமையாக அடிக்கிறான் அவன். அன்னம்மா அவனிடம் எல்லாம் சொல்வாள். சகலமும்.

அன்னம்மாவுக்குக் கண் மறைக்கிறது. தட்டுத் தடுமாறி மழைச் சத்தம் மட்டும் துணைக்கு வர, வாசல் கதவை மெல்லத் திறந்தாள் அன்னம்மா. மசமசவென்று யாரோ நிற்கிறார்கள். பேத்தி சீக்கிரம் வந்துவிட்டாள் போல.

”சாப்பாடு கொண்டாந்திருக்கியாடி?”, அன்னம்மா கேட்க, ஆண்குரல் பதிலாக வந்தது. ”எதுக்கு சோறு வரணும்? நானே ஆக்கித் தரேன். கூட ஒரு புளிக்குழம்பு வச்சுட்டா நம்ம ரெண்டு பேருக்கு போதாதா?”. இது யார்? அவள் வீட்டுக்காரன் எப்படி இப்போது திரும்ப வந்தான்? அவனில்லை. இது ராவ்ஜி. இந்தக் குரல் எத்தனை வருடம் கழித்துக் காதில் விழுகிறது. அப்படியும் இருக்குமா? அவர் தானா? மனதும் மழையும் கூடி மாயாஜாலம் காட்டுகிறது.

”உள்ளே வாங்க, எவ்வளவு காலமா காத்திட்டிருக்கேன் தெரியுமா?”. சொல்ல நினைக்கிறாள் அன்னம்மா. பாதி கூட வார்த்தை வாயில் வரவில்லை. கை மட்டும் உத்தேசமாக உள்ளே சுண்டுகிறது. அது சுவரைப் பார்த்து. அவளைச் சுவர்களுக்கு நடுவே அடைத்து வைத்து நாற்பத்தைந்து வருடமாகிறது.

“தாமதமாயிடுத்து, அன்னம்மா. அவன் போய்ட்டான். அவனைக் கரையேத்திட்டு உனக்கு இனிப்பு வாங்க கடைக்குப் போக வேண்டி வந்தது”.

“அவர் போய் நாலு மாமாங்கம் ஆச்சே, மாமா. கோவிச்சுக்கிட்டுப் போய் கண்காணத ஊர்லே செத்தும் போனாரே. வயத்துப் பிள்ளையும் கலைஞ்சு போச்சு”. விட்டேத்தியான குரலில் அன்னம்மா சொன்னாள். அன்னம்மா அழ, ராவ்ஜி ஒரு கால் உள்ளே வர எடுத்து வைத்தபடி மவுனமாக நின்றார்.

“அவர், உங்க மகன், என்னைக் கட்டிக்கிட்டதுலே உங்களுக்கு கோபம். அதானே மாமா?”. ராவ்ஜி காலைப் பின் வலித்துக் கொண்டார். பேசவில்லை.

“ஒரு பாட்டைக் கேட்டா கொஞ்சம் மறக்கும். ஒரு நாட்டியம் பார்த்தா ஒரு மணி நேரம் மனசுலே வராது. அன்பான சிநேகிதரைப் பார்த்தா அரை நாள் அமர்ந்து போகும். அப்புறம் முழு சக்தியோட கிளம்பி வரும், அதானே? நீங்க கல்யாணி கேட்டபோது விலகின கோபம், கோபம் மட்டும்தானா.. எதுவோ அது அப்புறம் ஒரேயடியா மேலேறி.. நீங்க திரும்ப வராமலே போயிட்டீங்க”

”உண்மையைச் சொல்றேன் நாயி. எனக்கு யார் மேலேயும் எந்தக் கோபமும் இல்லே.. மனசெல்லாம் நீ இருந்தே. வேறேதும் கெடைக்கலேன்னாலும், நீ வாசிச்ச அந்தக் கல்யாணி. அது எனக்கு வசமாகுமான்னு பார்க்க ஊர்க்கோடி ஐயனார் கோவில் பக்கம் போய் கிளாரினெட்டோடு உக்கார்ந்துட்டேன். இன்னும் வாசிச்சிட்டுத்தான் இருக்கேன். உன் கலையும் எனக்கு கைகூடலே. நேரிலே உன்னைப் பார்க்க வர ஒரு பயம். ஏன்னு கேட்காதே”.

அன்னம்மா அவர் கால் தொட, ராவ்ஜி விலகினார். “இந்தா வாங்கிக்க. நான் போகணும். ரயில் வந்துட்டிருக்கு. எதையும் மனசுலே வச்சுக்காதே”.

“இருங்க. பந்து தேடணும். புல்லாங்குழலை தேடணும். தேடி எடுத்து வந்து கல்யாணி வாசிக்கறேன்.”.

“ஒண்ணும் அவசரம் இல்லை, இதை சாப்பிட்டு வந்து வாசி. ”

அன்னம்மா கையில் எதையோ வாங்கினாள். கெட்டுப் போன இனிப்போ? மனதிலும் நாவிலும் இனிமையாக கல்யாணி ராக ஆலாபனை பரவ, அன்னம்மா சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள், அவளுடைய புல்லாங்குழல் அவள் உயிரை வெளியே இழுத்து நீட்டி ராகமாக்கி அறையில் நிரப்பியது.

பேத்தி வந்தபோது, கையில் தன் கழிவோடு அன்னம்மா பாட்டி இறந்து கிடக்கக் கண்டாள். ஒரு வாடை இல்லை. சுவரோரம் சாக்கடை நீர்பூசி ஒரு பந்து கிடந்தது. யார் வீட்டிலோ ரேடியோவில் ’மன்னவன் வந்தானடி’ கேட்டது. வீட்டு வாசலில் தோளில் பையோடு நின்றவர் பத்திரிகை நிருபராக இருக்கும்.

இரா,முருகன்
(நவம்பர் 2017)

நன்றி – குமுதல் லைஃப் (டிசம்பர் 13 பிரசுரம்)
‘தமிழ்’ – ஓவியம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன