புது நாவல் : 1975: பகுதி : ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு

ஆபீஸில் நுழைந்தபோது, ரத்தினம் எதையோ மறைத்து எடுத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்னங்க, கல்லு தோசை கொண்டு வரேன்னு சொன்னீங்களே. அதுவா?” என்று கேட்டேன் அவரை. கல்லுத் தோசையும் கருவாட்டுக் குழம்பும் வீட்டில் விசேஷமான காலைப்பசியாறல் என்பார் அடிக்கடி அவர்.

“கருவாட்டுக் குழம்பு இல்லீங்க தம்பி, ரவித் தம்பிக்கு ஸ்பெஷல் அய்ட்டம். ஜீவா ஸ்டோர் ராமேசுவரம் பிள்ளை கொடுத்து அனுப்பினார். அவர் தான் மறச்சு கொண்டு போங்கன்னார்”.

நான் ரத்தினம் கையில் வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தேன். முரசொலி. மறைத்து எடுத்து வந்து படிக்கிற பத்திரிகையா இது? படிக்க, எழுத, பேச எல்லாம் தணிக்கை, சகலருக்கும் சகலமானதற்கும் மேலே இருந்து யாரோ சதா கவனிக்கிற பயம், இதெல்லாம் எப்போது இங்கே வந்து கவிந்தது? ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு, ரயிலை, பஸ்ஸை நேரத்துக்கு வரச் செய்துவிட்டு, மூச்சு விட அனுமதிக்க மாட்டோம், சாகவும் விடமாட்டோம் என்று அழிச்சாட்டியம் பிடிப்பது என்ன அரச தர்மம்?

முரசொலியைப் புரட்டிப் பார்த்தேன். அண்ணா நினைவு நாள். அண்ணா சமாதிக்கு வந்தவர்கள் என்று போட்டு ஒரு சிறு பட்டியல். கூடவே, வராதவர்கள் என்று இன்னொரு நீளமான பட்டியல். அந்தப் பட்டியலில் இருந்தவர்கள் எல்லாம் எமர்ஜென்சி நடவடிக்கையாக சிறைபிடிக்கப் பட்டவர்கள்.

கவிந்த சோகத்தில் ஒரு நிமிடம் ஈடுபட்டு நிற்க ரவி பத்திரிகையை வாங்கிக் கொண்டார். “நீங்களும் இது படிப்பீங்கன்னு தெரியாது. தினம் வருதே. ஆனா ரகசியமா வச்சிருக்கோம்” என்றார் அவர்.

நான் ஜனசக்தி, தீக்கதிர், நவசக்தி, முரசொலி என்று முன்பெல்லாம் வேகமாகப் புரட்டிவிட்டுப் போவேன். அது ரானடே ஹால் லைபிரரியில். இப்போது என்னமோ இந்தப் பத்திரிகைகளை ஆழ்ந்து படிக்கத் தோன்றுகிறது. முக்கியமாக சர்க்கார் கட்சியல்லாத பிறவற்றின் இதழ்களை.

(எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’- ல் இருந்து)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன