New : எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-ல் இருந்து

“எல்லாரும் உங்க வகுப்புக்குத்தான் காத்திருக்காங்க. இன்னிக்கு நோ டயலெட்டிகல் மெடீரியலிஸம்” என்றார் சிரித்தபடி ஜெபர்சன். நான் ஸ்கூட்டர் பையில் துருத்திக்கொண்டிருந்த வாளியைப் பார்த்தேன். அதை விட்டுவிட்டு வந்தால் திரும்பும்போது அங்கேயே இருக்குமோ என்னமோ. கையில் வாளியோடு இலக்கியம் பேச உள்ளே போனேன்.

“இவங்களுக்கெல்லாம் மலையாள வகுப்பு இருக்குன்னு யார் சொன்னாங்க” நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, சைக்கிளில் வந்து இறங்கினார் நிருபர் கார்மேகம். முகம் கொள்ளாத சிரிப்பு அவருக்கு.

“என்ன சார், உங்க க்ளாஸுக்கு ஊர் முழுக்க ஆள் பிடிச்சிருக்கேன். அதை சொற்பொழிவுன்னு ஆக்கிட்டீங்கன்னா நான் செய்தி போட்டுடுவேன். நாலு வரின்னாலும் நாலு வரி. மாசக் கடைசியிலே அளந்து பார்த்து காசு கொடுக்கும்போது இருபது ரூபாய் கூட வரும்” என்றார் அவர். மாதாமாதம் அவர் அனுப்பிய செய்திகளின் மொத்த நீளத்தை அளந்து வரிக்கு ஐந்து ரூபாய் வருமானமாம் அவருக்கு.

“முடிஞ்சா நடுவிலே, நம்ம பிரதமர் வகுத்த இருபது அம்சத் திட்டப்படி நாடு சிறப்பா முன்னேறிக்கிட்டிருக்கு. சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டப்படி இளைஞர்கள் பாடுபடணும் இப்படி சேர்த்துச் சொல்லிடுங்க. இன்னும் ரெண்டு வரி சேர்த்துப்பேன்” என்ற நிருபரைப் பார்த்துத் தலையாட்டி விட்டு நான் மேஜை முன் அமர்ந்தேன். வாளிக் கையோடு வணக்கம் சொன்னேன். அவர் முதல் வரிசையில் இருந்து செய்தி எழுத ஆரம்பித்தார்.

கரும்பலகையில் “மலையாள இலக்கியம் – ஓர் அறிமுகம்” சொற்பொழிவு என்று எழுதி என் பெயரை ஜெபர்சன் குறிப்பிட்டுவிட்டு வந்து எல்லோரையும் வரவேற்றார். ’இது அரசியல் பேசும் கூட்டம் இல்லை, இலக்கியக் கூட்டம்’ என்று ஒன்றுக்கு மூன்று முறை சொல்ல கடைசி வரிசையில் இருந்து ஒட்டத் தலைமுடி வெட்டிய ரெண்டு பேர் கையில் டயரிகளோடு வெளியே போனார்கள். இன்னும் இரண்டு பேர் முன்வரிசையிலிருந்து பின்னால் போகக் கல்லூரி ஆசிரியர்கள் புன்னகை பூத்தார்கள்.

நான் வைக்கம் முகம்மது பஷீர் என்று பேச ஆரம்பித்தேன். கையில் எடுத்து வந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாளியும் எனக்கு முன்னால் உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தது.

—- —— —– —-

“உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கடன் எதுவும் வசூல் ஆகும்னு நம்பிக்கை இல்லே. ஒரு உதவியாகத்தான் செஞ்சிட்டிருக்கோம். இதை அதிகாரபூர்வமா சொல்ல முடியாது. ஆனாலும் எல்லோருக்குமே தெரியும். திரும்பித் தரணும்னா எம்பி எதுக்கு வந்திருக்கப் போறார். ஆர்டிஓ எதுக்கு கூடவே நிக்கப் போறார். இந்த ஐநூறு ரூபாயை வச்சு உங்க எதிர்காலம் நல்லா ஆகப் போறதுன்னு சொல்றது எல்லாம் ரொம்ப அதிகம். ஆனாலும் ஆடிக்கிட்டிருக்கோம். எல்லோரும் நாடகம் ஆடறோம்னு தெரிஞ்சு தான் ஆடறோம். நீயும் கூடவே ஆடலாம், காசை வாங்கிக்க. அதை திரும்ப வவுச்சர் போட்டு உள்ளே வைக்கணும். வீண் வேலை” மேனேஜர் சொன்னார். அவரால் இவ்வளவு கோர்வையாக நிலைமையைச் சொல்ல முடிந்ததில் சந்தோஷம்.

“இப்போ வேணாம் சாமியோவ். இருபது பள்ளிக்கூடத்துலே படிப்பான். அப்போ தேவையின்னா கேட்டு வாங்கிக்கறேன்”, சிரித்தார் எண்ணூறு என்ற அந்தக் குருவிக்காரர். “இருபதுன்னா?” நான் கேட்டேன். “பிறந்திருக்கற பிள்ளை. இருபது அம்சத் திட்டம் பேரை வச்சுட்டார்” என்றார் ஜெபர்சன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன