புதியது: ‘சென்னைச் சிறுகதைகள்’ நூலுக்கு என் முன்னுரை

கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் பரிசு பெற்ற சென்னைச் சிறுகதைகள் தொகுப்புக்கு முன்னுரை – இரா.முருகன்

இது சிறுகதை மருவிய காலம். சிறுகதைகளின் வரவு ஆகக் குறைந்து விட்டது. பத்திரிகை இதழ் ஒன்றுக்கு நாலு கதை, வானொலியில் வாசித்துக் கேட்ட கதை, வரிசையாக வரும் புதிய சிறுகதைத் தொகுப்புகள் என்று அனுபவமான சிறுகதைப் பெருக்கு இன்று இல்லை.

சிறுகதை ஒரு மாயச் சுழற்சியில் பட்டிருக்கிறது. சிறுகதை எழுதப்படாததால் பிரசுரிக்கப்படவில்லை. பிரசுரிக்கப்படாததால் வாசிக்கப் படவில்லை. வாசிக்கப்படாததால் அதன் ஈர்ப்பு குறைய வரவேற்பும் நாளடைவில் குறைந்து, இதழ்கள் வேறெதையோ தேடிப் போய்க் கொண்டிருக்கின்றன.

நூற்றைம்பது சிறுகதைகளுக்கு மேல் நான் எழுதியிருந்தாலும் இன்று சிறுகதைக் கரு மனதில் தோன்றினால் அது தன்வயமாகத் தற்போது எழுதி வரும் நாவல் நீரோட்டத்தில் கலந்து விடுகிறது. சிறுகதை மட்டுமா, டயரிக் குறிப்பு, பத்திரிகைச் செய்தி, சமையல் குறிப்பு, பச்சிலை மருத்துவம், திரைக்கதை என்று எல்லாமே கதைப் பிரவாகத்தில் கலந்து நகர்ந்து போக, நவீன நாவலின் சிதறுண்ட கதையாடல் fragmented narration வழி செய்கிறது. சிறுகதையின் இழப்பு இன்னொரு இலக்கிய வடிவத்துக்கு அணிசெய்யப் போய்விடும் சூழல் தவிர்க்க முடியாதது.

இந்த மருவிய காலத்திலும் பிடிவாதமாகச் சிறுகதை எழுதுகிறவர்களாக, ஐந்து கதை இல்லாவிட்டாலும் நிறையச் சுருக்கி வார இதழில் ஒரே ஒரு கதை மட்டும் என்றும் பிரசுரிக்கும் பத்திரிகையாக, பிடிவாதமான சிறுகதை ரசிகர்களாக இந்த இலக்கிய வடிவத்தை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் என் வந்தனம்.

இது மாற்றுச் சவ்வூடு reverse osmosis பரவும் காலம். உயிர்த்து இயங்கிக் கொண்டிருப்பதற்காகச் சிறுகதை உருவம் மாற்றி வருகிறது. நீளம் குறைந்து வாமனனாகி ஒரு பக்கத்தில் உலகளக்கப் பார்க்கிறது. அரைப் பக்கச் சிறுகதை, 140 எழுத்து குறுங்கதை கூட வர ஆரம்பித்து விட்டது. சற்றே நீண்ட புதுக் கவிதை சிறுகதை வேடம் கட்டி வருகிறது. திரைக்கதையும் சிறுகதையாகி வலம் வருகிறது. எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதை தான்.

சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தின் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தப் பதினான்கு கதைகளும் சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன.

அயர்லாந்துக்காரரான ஜேம்ஸ் ஜாய்ஸ் தான் வாழ்ந்திருந்த தேசத் தலைநகர் டப்ளின் நகரைக் கதைக் களமாக்கி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான Dubliners டப்ளினர்ஸ் போல சென்னையைச் சுற்றிச் சுழலும் சிறுகதைகளை எழுதி சென்னையர் என்று தலைப்பிட்டு எந்தத் தமிழ் எழுத்தாளரின் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வந்ததில்லை. சொல்லப்போனால், நெல்லைக்கு மட்டும் தான் இந்த இலக்கிய கீர்த்தி கிடைத்திருக்கிறது இதுவரை – வண்ணநிலவனின் ‘தாமிரபரணிக் கதைகள்’ மூலமாக. சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்குப் பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது.

இந்தக் கதைகளில் இரண்டு விதமான கதைப்போக்கைக் காணலாம். சென்னை நகரவாசியாக இல்லாமல், இங்கே வந்து, சற்றே இருந்து, திரும்பிப் போகும் மற்ற ஊராரான எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் ஒரு வகை. இவற்றில் கதைத் தலைவன் (பெரும்பாலும் ஆண் – வாலிபன்) சென்னையில் தனியனாக மேன்ஷனில் இருந்து வேலைக்குப் போகும் நண்பனுடைய அறையில் விருந்தாளியாகத் தங்கிப் பெறும் சென்னை அனுபவங்கள் இக்கதைகளின் நிகழ்வாகின்றன. இவர்கள் பெரும்பாலும் சிகரெட் புகைக்கிறவர்களாக இருப்பது நல வாழ்வு, சுற்றுச் சூழல் தூய்மை என்ற பார்வையில் கவலை தருவதைப் பதிந்தாக வேண்டும்.

சென்னைசார் எழுத்தாளர்களின் கதைகள் தீராத சென்னைப் பிரச்சனைகளான தண்ணீர், சுகாதாரம், போக்குவரத்து, 2015 பெருமழை பற்றிப் பருந்துப் பார்வை பார்த்து நகர்கின்றன. புறநகரில் வீடு கட்ட நிலம் வாங்குவது குறித்த ஒரு சுவையான கதையும் இவற்றில் உண்டு.

சென்னையை இந்தப் பார்வைக் கோணங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்கால, அண்மைக்கால வரலாற்றுக் கோணத்தில் பார்க்கும் அபூர்வமான சிறுகதைகளில் ஒன்று முதல் பரிசு பெற்ற ஸ்ரீதர் நாராயணனின் படைப்பு. ஜெர்மானியக் கப்பல் எம்டன் மதராஸ் பட்டணத்தில் குண்டு வீசிப் போன 1914-ஆம் ஆண்டில் நிகழும் இக்கதை உறுத்தாமல் புனைவோடு வரலாற்றைக் கலக்கிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகளை எழுதியவர்கள் பலரும் இணையக் குழுமம், வலைப்பூ, பேஸ்புக், இணைய இதழ்களில் எழுதத் தொடங்கி, எழுதி எழுதிப் பழகிச் சிறுகதை எழுத வந்தவர்கள். கதை மொழியில் அநேகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் இவர்களெல்லாம். இண்டர்நெட்டுக்கு நன்றி.

சென்னைக் காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள்.எங்கே இருப்பினென்? மானுடம் பாடுவது மகத்தானதல்லவா!

இரா,முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன