Bhagavathi kutty’s diary (Circa 1870)பகவதிக்குட்டியின் டயரிக் குறிப்புகள்

[இது ஒரு பெண் எழுதியது. இவளைத் தேடினால் கிடைக்க மாட்டாள். என் சொந்தம் தான். ஆனாலும் நானே பார்த்ததில்லை. என் முப்பாட்டிக்கு முந்தியவளுக்கு முந்திய பெண். நூற்று ஐம்பது வருஷம் நமக்கு முந்தியவள். அந்தக் காலத்திலும் பெண்கள் உண்டு. ஆண்கள் உண்டு. ஆண்கள் இந்தப் பெண்களை அரவணைத்திருக்கிறார்கள். அதிகாரம் செய்திருக்கிறார்கள். கூட முயங்கி குழந்தை கொடுத்திருக்கிறார்கள். விதவையாக மொட்டையடித்துத் தெருவில் துரத்தியிருக்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். வரட்டியாக மாட்டுச் சாணத்தோடு தட்டி எரித்திருக்கிறார்கள். வாவரசி (வாழ்வரசி) என்று வணங்கி இருக்கிறார்கள்.

இந்தப் பெண் எழுதி வைத்த குறிப்புகளில் சில இவையெல்லாம். அவள் காலப் பெண்கள் பட்ட கஷ்டங்கள், அனுபவித்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், பயங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் பற்றி எல்லாம் சொல்கிறவை இவை. மொழி பழையது. ஆனால் மனசிலிருந்து வருவது. எனவே எப்போதும் புதுசுதான். பெண் மனசு ஆச்சே]

அரசூர் (தேதி உத்தேசமாக) ஜனவரி 1877 நாலாவது சனிக்கிழமை

நான் பகவதி. என்றால், பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக தப்பு இல்லாதபடிக்கு எழுத, மலையாள வாடை அதிகம் கலக்காமல் பேசக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

நாங்கள் இங்கே அரசூரில் இருக்கிறோம். அவர் புகையிலைக் கடை வைத்து நிர்வாகம் செய்கிற பிராமணன். என்ன யோசனை? பிராமணன் புகையிலைக் கடை வச்சிருக்கானா, அடுத்தாப்பல என்ன, அரவசாலை.. ஷமிக்கணும்..கசாப்புசாலை..கசாப்புக்கடை, சாராயக்கடை தான் பாக்கி என்று நினைக்கிற தோதிலா?

புகையிலைக்கடைக்காரனுக்கு எல்லாம் நம்மாத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து அனுப்புகிறோமே, காசு வசதி அத்தனைக்கு இல்லாமலா போனது நமக்கு என்று என் அண்ணாக்கள் மூணு பேரும் ஏகத்துக்கு விசனப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாரும் தாசில்தார், கோர்டு கிளார்க்கர்மார் போல் பெரிய உத்தியோகத்தில் இருக்கப்பட்ட மனுஷ்யர் இல்லை. சமையல்காரர்கள் தான். நாலு பேருக்கு இல்லை, நானூறு பேருக்கு வடிச்சுக் கொட்டி, கிண்டிக் கிளறி, வறுத்துப் பொடித்து வதக்கி, கரைத்து, காய்ச்சி மணக்க மணக்க கல்யாண சமையல் செய்கிற சமையல்காரர்கள். தேகண்ட பட்டன்மார் என்பார்கள் எர்ணாகுளம், கொச்சி பக்கம். பட்டன் என்றால் தமிழ் பேசுகிற தாழ்ந்த ஸ்திதியில் இருக்கப்பட்ட பிராமணன். நம்பூதிரிகள் உயர்ஜாதி தெய்வ துல்யரான பிராமணர்கள். அவர்களுக்கு பட்டன்மார் ஆக்கி வைக்கிற சமையல் ரொம்பவே பிடிக்கும். எங்களை மாதிரி பட்டத்திக் குட்டிகளையும் கூட. எந்த ஜாதி பெண்ணை விட்டார்கள் அவர்கள்? எது எப்படியோ, தமிழ் பிராமணன் அழுக்கு தரித்திரவாசி. போனால் போகட்டும் என்று ரொம்ப தாழ்ந்த ஸ்தானம் கொடுத்து அவர்களையும் பிராமணர்களாக கொஞ்சூண்டு மதிக்கிறார்கள்.

நம்பூத்ரி கிடக்கட்டும். அம்பலப்புழை பற்றி இல்லையோ பிரஸ்தாபம்.

கல்யாணம் கழிச்சு ரெண்டு வருஷம் பாண்டி பிரதேசத்தில் இந்த அரசூரில் குடியும் குடித்தனமுமாக இருக்க ஆரம்பித்த பிற்பாடு கூடசொந்த ஊர் மோகமும், ஈர்ப்பும், பறி கொடுத்த மனசும், அங்கே போகணுமே என்று சதா மனசிலொரு மூலையில் நமநமன்னு பிறாண்டி பிராணனை வாங்கறது.

கிடக்கட்டும் அதெல்லாம். அதை எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு உட்கார்ந்து எழுத இல்லையாக்கும் எங்களவர் இப்படி கட்டு கட்டாக காகிதமும் கட்டைப் பேனாவும், ஜலத்தில் கரைத்தால் மசியாகிற குளிகையும் வாங்கி கொடுத்ததும் கையைப் பிடித்து உருட்டி உருட்டி தமிழ் எழுத சொல்லிக் கொடுத்ததும்.

தினசரி மனசில் தோணுகிறதை நாலு வரியாவது எழுதி வை. கையெழுத்தும் தமிழ் ஞானமும் மேம்படும். நிறைய எழுத ஆரம்பித்ததும் பட்டணத்தில் வெள்ளைக்காரன் போட்டு விக்கற டயரி வாங்கி வந்து தரேன். தினசரி ஒரு பக்கம் தேதி போட்டு எழுத சவுகரியமாக கோடு எல்லாம் போட்டு வச்சிருக்கும். வருஷா வருஷம் டயரி எழுதி நம்ம சந்ததிக்கு நாலு காசோடு கூட ஆஸ்தியாக விட்டுட்டுப் போகலாம். இதோட மதிப்பு இப்போ தெரியாது. இன்னும் நூறு வருஷம் கழிச்சு தெரிய வரும் அப்படீன்னு சொன்னார்.

இங்கிலீஷ்காரன் பிருஷ்டம் துடைச்சுப் போடுகிற எழவெடுத்தவன். அவன் போட்ட நாத்தம் பிடிச்ச டயரி எல்லாம் வேண்டாம். உங்க பேரை எழுதக் கூட அது தகுந்ததில்லைன்னு சொல்லிட்டேன்.

அய்யோ, மசி தீர்ந்து கொண்டு போறது. நான் இன்னும் விஷயத்துக்கே வரலே. வந்தாச்சுடீயம்மா.

நேற்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சா? அரசூர் பக்கம் நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தா கோவிலுக்கு சாயந்திரம் போய் மாவிளக்கு ஏற்றி வச்சு ஒரு கண்மலர் சாத்திட்டு வரலாமேன்னார். அவர் போன மாசம் கண்ணிலே கட்டி வந்து கஷ்டப்பட்டபோது வேண்டிண்டது.. வெள்ளியிலே கண் மலர்னு சொல்வா இங்கே.. அம்பாள் கண்ணோட சின்ன பிரதிமை.. அங்கேயே விக்கற வழக்கம். வாங்கி கண்ணாத்தா பாதத்தில் வச்சுக் கும்புடணும். ரொம்ப இஷ்டமான காரியமாச்சே. அம்மாவோ அம்மையோ எல்லாம் நீதாண்டி ஈஸ்வரி.

ஆக நான், பக்கத்தாத்து அரண்மனைக்கார ராணி மாமி. என்ன அதிசயமா அப்படி ஒரு பார்வை? எங்காத்துக்கு அடுத்த வீடு ஜமீன் அரண்மனை. ராஜா இருக்கார். மாமனார் இருந்தா அவர் வயசு. ராணியம்மா உண்டு. ராணி மாமி, ராஜா மாமான்னு கூப்பிடுப் பழகிடுத்து. தங்கமான மனுஷர்கள்.

நாங்க தவிர, அரசூர் அரண்மனை ஜோசியர் வீட்டு சோழிய அய்யங்கார் மாமி, அவா பக்கத்து எதிர் வீட்டுலே ரெண்டு பெண்டுகள் .. பெருங்கூட்டம் தான். ஐயணை ஓட்டற ரெட்டை மாட்டு வண்டியிலே நாங்க. பெரிய கப்பல் மாதிரி விஸ்தாரமான வண்டியாக்கும் அது. ராணியம்மா ஏறணும்னா ஏப்பை சாப்பை வண்டி எல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?

இது ஸ்திரிகள் பட்டியல். ஆம்பளைகளும் நிறைய. எங்காத்துக்காரர், அவருடைய புகையிலைக்கடை ஸ்நேகிதர்கள், அரண்மனை வாசல் ஜவுளிக்கடை மூக்கக் கோனார், அரண்மனை சமையல்காரன் பளனியப்பன் ஆமா பழனியப்பன் இல்லையாம். இப்படி இன்னொரு கூட்டம் புளி மூட்டையாக இன்னொரு பெரிய வண்டியில்.

வெய்யில் தாழ நாலரை மணிக்குக் கிளம்ப உத்தேசிக்க, இவர் புகையிலைக் கடை நெடியும், கடைத்தெரு புழுதியும் வியர்வையுமாகக் கசகசக்கிறது என்று குளிக்கக் கிளம்பிவிட்டார். கிணற்றில் இரைத்து ஊற்றி, ஊர்க்கதை பேசி ஐயணை குளிப்பாட்டி விட்டபோது ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. புருஷன் குளித்துக் கிளம்பும்போது பெண்ஜாதி அட்டுப் பிடித்தாற்போல் போகலாமா என்று நானும் நாலு வாளி இரைத்து ஊற்றிக் கொள்ளும்போது மூக்கில் போட்ட நத்து கிணற்றில் விழுந்து தொலைத்தது. வைர மூக்குத்தியை எடு, மூக்கில் குத்தி ரத்தம் வர திருகு என்று நரக வாதனையோடு அதை போடுவதற்குள் வாவா என்று வாசலில் இருந்து ஆயிரம் கூச்சல்.

சரி கிளம்பலாம் என்று எல்லோரும் புறபபட மாம்பழப் பட்டுப் புடவையைச் சுற்றிக் கொண்டு அவசரமாக மாட்டு வண்டியில் போய் உட்கார்ந்தேன். பக்கத்து அரண்மனையாத்து ராணிமாமி எனக்கு முன்னாடியே அங்கே இருந்தாள்.. ரொம்ப வாஞ்சை அம்மா மாதிரி. மாமியார் இல்லாத குறையை தீர்க்கவே இவளை தெய்வம் கொண்டு வந்து விட்டதோ என்னமோ. பிராமணாள் இல்லை. சேர்வைக்காரர் வம்ச வாவரசி. ஜாதி என்ன கண்றாவிக்கு? மனுஷா மனசில் அன்போடு பழகினால் போதாதா?

தட்டை, முறுக்கு, திராட்சைப் பழம் என்று நாலைந்து ஆகார வகையறாவை வண்டியிலேயே ராணிமாமி திறக்க மற்றப் பெண்டுகள் வஞ்சனையில்லாமல் தின்று தீர்த்தார்கள். கூட ஆண்கள் இல்லாத சந்தோஷமாக்கும் அது. அப்புறம் பானகம். வேணாம் வேணாம் என்று நான் சொல்ல சங்கிலே சிசுவுக்கு மருந்து புகட்டுகிற மாதிரி தலையைத் திருகி வாயில் ஒரு பஞ்ச பாத்திரம் நிறைய் வார்த்து விட்டாள் ராணி. நான் எட்டிப் பார்த்தேன். ஆண்கள் வந்த வண்டியை எங்காத்துக்காரர் தான் ஜன்மாஜன்மத்துக்கும் வண்டிக்காரனாக ஆயுசைக் கழிக்கிற மாதிரி உற்சாகமாக வண்டி ஓட்டி வந்தார். வாயில் ஏதோ தீத்தாராண்டி பாட்டு வேறே.

நாட்டரசன்கோட்டை போனதும் தெப்பக்குளக் கரையில் ரெண்டு வண்டியும் நின்றது. ஆம்பிளைகள், எங்காத்துக்காரரும் கூடத்தான் வரிசையாக இறங்கி ஓரமாக வேலி காத்தான் புதர் ஓரம் குத்த வைத்தார்கள். எங்க வண்டியிலே மசான அமைதி. பொண்ணாப் பிறந்த ஜன்ம சாபம் அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது.

அத்தனை பொம்மனாட்டிகளும் பானகமும் ஊருணித் தண்ணீரும், சீடை முறுக்கு சாப்பிட்ட அப்புறம் பித்தளை கூஜாவில் இருந்து ஏலக்காய் போட்ட வென்னீருமாகக் குடித்து எல்லோருக்கும் வயிறு வீங்குகிற அளவு மூத்திரம் முட்டுகிறது. ஆனா, பெண்ணாப் பிறந்தவ, அவ ஊருக்கே பட்டத்து ராணியா இருந்தாலும், உலகத்துக்கு ஜாதகம் கணிக்கிற ஜோசியர் பெண்டாட்டியாக இருந்தாலும், காசு புரளும் புகையிலைக்கடைக்காரன் ஆம்படையாளாக இருந்தாலும் இடுப்புக்கு கீழே ராத்திரி மட்டும் உசிர் வரப் பட்டவர்கள். மற்ற நேரம், பொண்ணாப் பொறந்தாச்சு, பொறுத்துக்கோ.

சந்நிதிப் படி கடக்கும்போது எங்கே புடவையை நனைத்துக் கொண்டு விடுவேனோ என்று ஏக பயம். அதோடு கண்ணாத்தாவை தரிசிக்க, அவள் சிரித்தாள். என்ன அய்யர் ஊட்டுப் பொண்ணே, ரொம்ப நெருக்குதா? என்றாள். ஆமாடி ஆத்தா.

ஒரு நாள் இப்படி வாயிலே நுரை தள்ளுதே நான் வருஷக் கணக்கா இப்படித்தானே நிக்கறேன்னாளே பார்க்கணும். இல்லை எனக்கு மட்டும் கேட்டுதா?

அவசரமே இல்லாமல் பூசாரி தமிழ், கொஞ்சம் கிரந்தம், அப்புறம் ஏதோ புரியாத பாஷை எல்லாத்திலேயும் மந்திரம் சொல்லி சிரித்தார். தமிழில் நெஞ்சு உருகப் பாடினால் வேணாம் என்றா சொல்லப் போறா? அவ கிடக்கா. எனக்கு இப்படி முட்டிண்டு.

அப்புறம் ஒரு மணி நேர்ம் கூடுதல் சித்தரவதையோடு ஊர் திரும்ப வண்டி கட்டினார்கள். போகிற வழியில் ஆம்பிளைகள் திரும்ப குத்தி உட்கார்ந்து இன்னொரு தடவை நீரை எல்லாம் இறக்க, கால் வீங்கிப் போய் நாங்கள் சிவனே என்று வண்டியிலேயே உட்கார்ந்திருக்க வேண்டிப் போனது. பிரம்மா படைச்சபோது ஒரு குழாயை கூடவே கொடுத்திருக்கக் கூடாதா? நாளைக்கு விக்ஞானம் வளரும்போதாவது பிரம்மாவாவது தோசைமாவாவது என்று தூக்கிப் போட்டு விட்டு இந்தக் குழாய் சமாசாரத்தைக் கவனிக்கக் கூடாதா?

வீட்டுக்க்குள் வந்து பின்கட்டுக்கு ஓடி ஒரு பத்து நிமிஷம் பெய்து தீர்த்தேன். எதுக்கோ உடனே குளிக்கத் தோன்ற கிணற்றில் இரைத்து இன்னொரு ஸ்நானம். உள்ளே வந்து புடவையை மாற்றிக் கொண்டு பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நமஸ்காரம் பண்ணினேன். தப்பாச் சொல்லிட்டேனேப்பா உன்னை. பொண்ணு என்ன சொன்னாலும் எப்பச் சொன்னாலும் தப்பாச்சே. குழாய் எல்லாம் வேணாம்.

(இது கற்பனையே)

– இரா.முருகன்

2 comments on “Bhagavathi kutty’s diary (Circa 1870)பகவதிக்குட்டியின் டயரிக் குறிப்புகள்
  1. Sundaram Chellappa சொல்கிறார்:

    அச்சுதம் கேசவம் தொடங்கியாகி விட்டதா?

    வாழ்த்துக்கள்

    சுந்தரம் செல்லப்பா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன