‘Viswaroopam’ – novel review by Chiththan Prasadசித்தன் பிரசாதின் நாவல் விமர்சனம் -’விஸ்வரூபம்’

Sharing my friend Chithan Prasadh’s review of the novel ‘Viswaroopam’. Excerpts from this have been published in the current weekly issue of Kalki.
விஸ்வரூபம்
————————

உருகும் மெழுகென, கணிக்க இயலாத காலம், கரைந்து ஒழுகிக் கொண்டேயிருக்கிறது. காலக்கரையின் விளிம்பில் அமர்ந்து, அதில் அளைந்து கொண்டே, அது சுழித்துப் பிரவாகிப்பதைக் கண்டவாறே, நேற்றைய கழிதல்களும் நாளைய கனவுகளுமாய், விரல்களின் இடுக்களினூடே நழுவி வழிந்தோடுவதிலிருந்து, துளிகள் பழையன சில கோரி எடுத்து, மறுபுறம் வீசியிருக்கிறார் முருகன். அது நேர்கோட்டுக் கால்வாயாக இல்லாமல் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்தோடி கண்ணாமூச்சி விளையாடுகிறது. நிறம் பிரித்து நவரசங்களையும் தெறித்து ஓடுகிறது…. என்ன? சிருங்காரம் கொஞ்சம்(!) திகட்டத் திகட்டத் தூக்கலாக வந்து விழ, வாசகன் திணறித் திக்குமுக்காடிப் போகிறான்.

அர்சூர் வம்ச முருகனின் விஸ்வரூபம் இது!

இரண்டரை வருட உழைப்பு; மூன்று நாடுகள்; எட்டு ஊர்கள்; நான்கு கலாச்சாரச் சூழல்கள் ஊடே, ஆறு இழைகளாகக் கடந்து போகிற கதை; ஒன்று 1938-லும், மற்றவை 1889-1891ல் தொடங்கி 1938-ல் முடிபவை; ஆறு மொழி நடைகள்; ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்; 790 பக்கங்கள்!
முருகனின் விஸ்வரூபம்! வாமனனாகச் சுருக்கி நாலு பக்கத்தில் எழுதுவது சாத்தியமா என்ன? ஒரு முயற்சிதான்!

விஸ்வரூபம் வாசிக்கத் தொடங்கிய என்னை உறக்கத்திலும் கூட, “ படிச்சு முடிச்சுடுடா குழந்தே” என அஸ்திச் சொம்பிலிருந்த விசாலாட்சி, என் கட்டிலுக்குக் கீழேயிருந்து, உபத்திரவப்படுத்திக் கொண்டேயிருந்தாள்.

நாவலை வாசித்து முடித்து, பின்னர் நான்கைந்து நாட்கள் மகாதேவன், வேதய்யன், ஜான் கிட்டாவய்யன், மகாலிங்கய்யன், துர்க்கா பட்டன், சொத்துப் பத்திரம், நடேசன், அஸ்திக் கலசத்தில் இரண்டு எலும்பும், கொஞ்சம் சாம்பலுமாக விசாலாட்சி, தெரிசா, பீட்டர் மெக்கன்ஸி, தாமஸ், காமாட்சி, பகவதி, நாணிக்குட்டி, கல்யாணி, அம்பலத்துக் கிருஷ்ணன் என அத்தனை பேரையும் சுமந்து கொண்டு திரிய வேண்டி வந்தது.

பாகிஸ்தானி தாபாவில் ’பெஷாவரி னான்’ சாப்பிடாமலேயே முருகனுக்கு ‘மா நிஷாத’ சொல்லி எழுதத் தூண்டியது என்றால், துவக்கப் பிரச்சனை தடுத்தாட்க் கொண்டிருந்த நான், வடவள்ளி மீனாட்சி பேக்கரியில் தேநீர் அருந்தி, மீனாம்பிகே… என ’மா நிஷாத’ சொல்லி ஆரம்பித்தாயிற்று.

நாவலை வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகம், புத்தகத்தின் பின் அட்டையில் நூலை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது: ‘ மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும்” உண்மைதான்! விஸ்வரூபம் ஒன்று போதும் – நவீனத் தமிழ் இலக்கிய வெளியில், நாவல் உலகில், ‘ மேஜிகல் ரியலிசம் ‘ என்கிற முத்திரையுடன்!

ஆனால், அக்கருத்திலுந்து நான் சற்று மாறுபடுகிறேன். முருகன் செய்திருப்பது, நாம் நம் மரபிலிருந்து தொலைத்துவிட்ட ஏராளமானவற்றில் இருந்து ஒரு மீட்டெடுத்தல் என்கிற மகத்தானக் காரியத்தை! கிளி, நாரை, தீப்பந்தம், அம்பலக் கிருஷ்ணன் பேசுவதெல்லாம் நமக்குப் புதிதா என்ன? விக்ரமாதித்யன் கதைகளிலும், பஞ்சதந்திரக் கதைகளிலும், விட்டலாச்சார்யா சினிமாக்களிலும் நாம் காணாததா? நம் தமிழ் இலக்கியத்தில் இல்லாததா!

’மேஜிகல் ரியாலிசம்’ என்கிற சொற்றொடர் மேற்கே அறிமுகமாவதற்கு முப்பதைந்தாண்டுகட்கு முன்பே, எமிலி டிக்கன்ஸன் தன் படைப்புகளில் இதன் கூறுகளை அள்ளித் தெளித்துச் சென்றிருக்கிறார்.

“ தரை விரிப்பு கரைபடாமலிருக்க
இரத்தம் சுவரைத் தழுவி நின்றது” – இதை என்னவென்று சொல்வீர்கள்! அதனால் இங்கு மேஜிகல் ரியலிசம் என்கிற லேபிளோ, இந்த நாவல் மீது அது குறித்தான விவாதமோ நமக்கு முக்கியமல்ல. ’லேபிள்’களைக் கடந்து முருகனின் விஸ்வரூபத்தை அணுக வேண்டியிருக்கிறது.

தமிழில் மேஜிகல் ரியலிசம் என்று சொல்லிக் கொண்டு இதுவரை வந்தவை, பல மொழியாக்கங்கள் உட்பட, அனைத்தும் ஒரு சராசரிக்கும் கூடுதலான வாசகன் கூட உள்ளே புக முடியாத அளவுக்குக் கதைச் சொல்லும் பாணியும், சொற்பிரயோகங்களுமென அமைந்தவையே! முருகன் அங்குதான் தன் தனித்துவத்தை நிரூபிப்பதன் மூலம் வெற்றியடைகிறார்.

இந்தத் தனித்துவ மொழிநடையின் கூறுகளை 2001இல் பிரசுரமான முருகனுடைய சிறுகதைத் தொகுப்பு ‘ மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ நூலிலேயே காணலாம். அந்த நூலின் முன்னீட்டில், “…..என் எழுத்தும் நடையும், கதைக்கும் பாணியும் இந்தக் கால கட்டத்தில் மாறி வந்திருப்பதுதான்…. ”, எனச் சொல்லும் முருகனின் இந்த மொழிநடை, ’அரசூர் வசம்’ நாவலில் (2004) குதூகலமாகக் கும்மாளமிட்டு, களைகட்டி விளையாடியது. அப்போதே, ஒரு சராசரி வாசகனைக்கூட ஈர்த்து மிரட்டியது.

‘அரசூர் முக்கதை’யில் (டிரைலஜி) முதலாவதான ’அரசூர் வம்ச’த்தின் முன்னீட்டில், இக்கருத்து குறித்து அவரே சொல்வது: ” …. தமிழில் மாந்திரீக யதார்த்தம் எழுதினால் எளிதில் புரியக்கூடாதே. கிஞ்சித்தும் சுவாரசியம் தலைகாட்டாமல், வரிகளுக்கு நடுவில் எழுதினவர் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டும் வார்த்தைகளுக்கு நடுவில் ‘புரியலையா, அப்பாடா’ என்று நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டும், புத்தகத்தை கனக்க வைக்க வேண்டுமே. புரியும்படியாக மாந்திரீக யதார்த்தம் எழுதி கார்ஸியா மார்குவேஸோடும், குந்தர் கிராஸோடும் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயம் நடத்தவா? என்றால், இதை நான் ஸ்பானிஷிலோ, ஜெர்மனிலோ, குறைந்தது மலையாளத்திலோ எழுதி, ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருக்கணுமே.”

இந்தப் புரிதலே முருகனின் அசாதாரண அநாயச மொழி நடைக்குக் காரணமாகிறது. அதிலும், 1889-களிலும், 1938-லும் புழக்கத்திலிருந்த தமிழ் நடை! இனத்துக்கு இனம், ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி வேறுபட்டதொரு மொழி நடை- நீலகண்டய்யன் பேசுவது, ராமானுஜலு நாயுடு பேசியதிலிருந்து வேறுபட்டும்; அம்பலப்புழை வேதையனின் மொழி, மகாலிங்கய்யனின் ‘கடுதாசு’ மொழியிலிருந்தும்; லண்டன் தெரிசாவின் தமிழ், புஸ்தி மீசையான் மொழியிலிருந்தும்! தவிர சுவாரசியமான பத்திரிகை பயணக்குறிப்பு மொழி நடையும்!

மிகவும் உழைத்து மெனக்கெட்டாற் போலத் தோற்றமளிக்கும் அதே நேரம், வாசகனின் சுவைப்புக்கு எந்தவித சலிப்பும், ஆயாசமுமளிக்காத இலகுவான மொழி நடையும், அதனூடே திகட்டத் திகட்ட முருகன் வாரி விளம்பும் கதையும், விஸ்வரூபம் நாவலின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. விஸ்வரூபத்தின் வெவ்வேறு மொழிநடைக்கு சில எடுத்துக்காட்டுகள்…. சுவைத்துப் பாருங்களேன்.

++++++
“திரும்பிப் பார்த்ததும் தெரிந்த முகம். ஐயோ என்னத்தைச் சொல்வேன். சாமி சத்தியமாக நிஜம் இது….. அந்த பெண்பிள்ளை யார் தெரியுமோடி? சாட்சாத் ரெட்டியக் கன்யகைதான்……நான் கழுக்குன்றம் மலையில் ரெட்டை ஸ்தனத்தையும் ஆரத் தழுவிச் சுகிக்க ஆரம்பித்தபோது உசிரோடு இருந்து, அது ரெண்டும் கழுகாக மாறின போது உசிர்போய் ரத்தப் பிராவகத்தில் சவமாகக் கிடந்தாளே அவளேதான்…….

……… அய்யரே, லட்டு உருண்டை, பானகம், கனிஞ்ச வாழைப்பழம். எல்லாம் இன்னும் கொஞ்சம் வேணும். கழுகு பார்த்திருக்கீரா? ஜோடிக் கழுகு? இதோ.
அவள் மேல் சேலையை விலக்கினாள். பருத்த மார்பங்கள் கழுகாகக் கவிந்து என்னை வாவா என்று ஈர்க்க இதமாக இருட்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

கல்யாணி, அடி கல்யாணி, எனக்கு வேறேன்ன வேணுமடி?”
+++++
“… அதென்னவோ தெரியலே மாமா, என் கண்ணுக்கு நீங்க தெரியறீங்க நல்லாவே. உங்க குரல்கூட அட்டகாசமாக் கேக்குது. கூடவே தொப்பு தொப்புன்னு சத்தம் வேறே.

என் இடுப்புக்குக் கீழே குனிஞ்சு பாரு. முடி உதுர்ற சத்தம்.

நாறப் பயபுள்ளே. இவன் எத்தனை காலம் இங்கனக்குள்ளே சுத்திக்கிட்டுக் கெடந்தா என்ன, கவட்டுக்குள்ளேதான் புத்தி.

ஆமா மாப்பிளே, வாச்சிருக்கிறவன் வச்சுகிட்டு என்ன வேணும்னாலும் செய்யுவான். உனக்கு ஏன் பொச்சாப்பு?

அட போடா வக்காளி, உன்னை அப்பாலே கவனிச்சுக்கறேன்

ராஜா நடந்தார்……”
+++++

“ குஞ்ஞம்மிணியின் முகத்தை வருட அவள் விரல்கள் நீண்டன. அந்தக் குழந்தையின் கண் இமைகளின் நனைவு விரல்களில் உஷ்ணமாக உறைத்தது. விம்மி அழுது அடங்கட்டும்.

அவளுடைய குரிசு. யார் ஏற்றி வைத்தார்களோ. அவள்தான் சுமந்தாக வேண்டும். தெரிசா சுமக்கிறதைவிட வேறுபட்டது அது. ஆனால் என்ன, குரிசுகள் குரிசுகள்தான். அந்தந்த தோள்களில்தான் சுமக்கப்பட வேண்டியவை. மாற்ற முடியாது. எதையும்.”
+++++
“ இலை நிறைய தணுத்துப் போய் மலை மாதிரி வந்து விழுந்த சோற்றை அவியலில் பிசைந்து கவளம் கவளமாகத் தின்றார் நடேசன். எத்தனை ஜன்மத்துப் பசியோ முன்னுக்கு வந்து ஆகுதி கொடுத்ததை விழுங்கித் தீர்க்கிற அக்னிபோல் இலையில் விழுகிற எல்லாவற்றையும் தின்று தீர்க்க வைத்தது. இப்போது கிருஷ்ணன் வெறும் வயிறாக மட்டும் இருந்தான். கிருஷ்ணன் கோயிலில் நைவேத்தியமாகிற பால்பாயசம் நினைவுக்கு வந்த்து நடேசனுக்கு……
+++++
’குழந்தை சொப்பனத்திலே வவ்வால் துரத்தறதுடா மகாதேவா. பயந்து சத்தம் போட்டு சித்தாடையை நனைச்சுக்கறதுக்குள்ளே எழுப்பி உக்கார வச்சு இத்திரி வெள்ளம் கொடு.’ அம்மா பிரப்பங் கூடையிலிருந்து முணுமுணுப்பது மகாதேவனுக்கும் பர்வதவர்த்தினிக்கும் நன்றாகவே காதில் விழுகிறது. இரண்டு எலும்பில் இத்தனை சத்தத்தை மிச்சம் வைத்திருப்பவள் முழுசாக உடம்பும் ஆத்மாவும் கோர்த்த ஜீவனாக இருந்தபோது பேசியே யாரும் பார்த்ததில்லை.
+++++
ஏலிக்குட்டி, மரியம்மா, கொச்சு தெரிசா, காத்தி, பிலோமீனாள், ரெபக்காள் என்று பரிபூரணம் யார்யாரோ குமர்களை வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கும் போது அவனுக்குப் பரிச்சயப்படுத்தி அதிலொருத்தியை கட்டியோள் ஆக்கிக் கொள்ளச் சொன்னாள்…… …….ரெபக்கா மாத்திரம் கல்யாணத்துக்கு அப்புறமும் திவசேனம் மீன் கழிக்கிற ஏற்பாடு வேணும் என்று அவசியப்பட்டாள். அது செம்மீனாகத்தான் இருக்கணும் என்றில்லை. அயிலை, கேவலம் மத்தி ஆனால் கூடச் சேர்த்துதான்.
++++++
ரெட்டியாரே, இதைக் கேளும். எங்க பக்கம் ஏகப்பட்ட நிலபுலம் வச்சிருக்கிற உடையார் உண்டு. அவுஹ வீட்டு வளவிலே உக்கார்ந்து கணக்கு அய்யர் கண்ணைக் கவிஞ்சுக்கிட்டு கிரமமா வரவு செலவு கணக்கு எளுதுவாரு…… ரெண்டு போகம் விளையற நெலமாச்சே ஓய் நமக்கு. வரவை விட செலவு கூடுதலா எழுதியிருக்கீரே அப்படீன்னு உடையான் கேட்ட போது பாப்பான் என்ன பதில் சொன்னான் தெரியுமா?….. …..உடையாரே, உம்ம நிலம் தான் ரெண்டு போகம். உமக்கு தினசரி மூணு போகமாச்சே. செலவு ஏறாம என்ன பண்ணும்னாராம் அய்யர்.
+++++

இது தவிர, தெலுங்கு, மலையாளம், ஹிந்துஸ்தானி கலந்த உரையாடல் நடை! மேலும், இரண்டு அத்தியாயங்கள் பத்திரிகைப் பயணக் குறிப்புப் பாணியில்! இப்படித்தன் விஸ்வரூபத்தில் பல்வேறு கதாப்பாத்திரங்கள், கூடவே அஸ்தி, எலும்புத் துண்டு, நாரை, தீப்பந்தம், அமபலத்துநடையில் கிருஷ்ணன் என பலரும் பல்வேறு மொழிநடைகளில் கதையை அநாயசமாக நகர்த்திச் செல்கிறார்கள். உடன் பயணியாக நம்மையும் சேர்த்துக் கொண்டு!

அரசூர் வம்சத்து அடுத்தத் தலைமுறையின் கதை!
” கொல்லுருக்குப் போகிற அம்புலப்புழை குடும்பத்து குப்புசாமி அய்யனின் அடுத்த வாரிசு. கூடவே அஸ்திக் குடத்தில் விசாலாட்சி…. அது என் கதையும் கூடத்தான் ஒரு விதத்தில்’ என்கிறார் முருகன்.

வக்கீல் குமாஸ்தன், நடேசன், தன் காலி வயிறு நிரப்ப ஏகாம்பர அய்யர் ஹோட்டலில் நுழைய, அங்கு ‘ஒரு பழைய டோக்குமெண்ட்’ பிரதி எடுக்க வேண்டிய வேலை காத்திருக்கிறது. “ பொடி உதிர்கிற காகிதக் கட்டு’. “

கொல்லூர் தேவி க்ஷேத்திரத்தில் புஷ்பம் சார்த்தி உத்தரவு கிடைத்தபடி அம்பலப்புழை மகாதேவய்யன் நல்ல தேக ஆரோக்கியமும், ஸ்வய புத்தியும் பூர்ண திருப்தியுமாக தனது சிறிய தகப்பனார் அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யன் குமாரனும் ஒன்றுவிட்ட சகோதரனுமான வேதய்யனுக்கு எழுதிக் கொடுத்தது யாதெனில்”….. இந்தப் பழைய சொத்துப் பத்திரம் நாவலின் நாயகப் பாத்திரங்களில் முதலாவது. இரண்டு எலும்புத் துண்டுகளாக குடத்தில் கிடக்கும் விசாலாட்சி, இரண்டாவது.

இவை இரண்டும் திருக்கழுகுன்றம், மதறாசப்பட்டணம், ஹை-கோர்ட், பாண்டிப்பிரதேசம், காசி, லண்டன் என்று, மாட்டு வண்டியில் துவங்கி கப்பலில் பயணித்து, இறுதியில் சேருமிடம் சேருவதுதான் நாவலின் அடிநாதக் கதை. மற்ற எல்லா கதை மாந்தர்களும் அவரவர் அளவில் இதற்குத் துணை போகின்றனர். காசியில் பகவதியுடன் சேர்ந்து அஸ்திக் குடமும் கரைகிறது; கலக்கிறது. சொத்துப் பத்திரம் கண்ணூர் வேதையன் கைக்கு வந்து சேருகிறது. நாவல் ஒரு எதிர்பாராத அமானுஷ்யமான இடத்தில் முடிவடைகிறது.

இதற்கிடையில் நொங்கம்பாக்கம் மகாலிங்கையன் புத்திரபாக்கியம் வேண்டி திருக்கழுக்குன்றம் போய் அங்கு ரெட்டி பெண்ணிடம் காமாந்தகனாக சரசமாடி அவள் விழுந்து மரிக்க, கொலைப்பழிச் சுமந்து சிறைச்சாலையிலும், ஏழு வருடம் கழித்து வெளியே வந்ததும், வரதராஜ ரெட்டியாக தன்னை மாற்றிக் கொண்டு, அங்கிருந்து புதுச்சேரி வழி மொரிஷியஸ் சென்று, அங்கு காப்பிரிச்சி ’லோலா’ உடன் மணவாசம், ( மீண்டும் ரெட்டிப்பெண் ! ) கல்யாணி சுகவாசம் என்றிருந்து, கல்யாணி ஏமாற்றி விட, அங்கிருந்துத் தப்பித்து, சென்னைப்பட்டணம் போகக் கப்பலேற, கப்பல் மகாயுத்தம் காரணமாகத் திருப்பிவிடப்பட்டு லண்டன் செல்ல, அங்கு ஜான் கிட்டாவய்யன் குமாரத்தி தெரசாவின் கணவன் பீட்டர் மெக்கன்ஸி துரையை கொன்றுவிட்டதாக வீண் பழி சுமந்து, மீண்டும் காராகிரக வாசம்; யுத்தம் முடிந்து விடுதலையாகி சென்னைப்பட்டணம் திரும்பினாலும் மகாலிங்கய்யனை விதி சும்மா விடவில்லை; துரத்தித் துரத்தி மரணத்தை நோக்கி விரட்டுகிறது. இத்தனை வரலாறும் கடித இலக்கிய மொழிநடையில்! நம்மை ஈர்க்கும் எல்லா கதை மாந்தர்களையும் கடந்து மகாலிங்கய்யன் அதிகப்படியாக மனதில் நிற்கிறான்.

முன்பே சொன்னது போல, விஸ்வரூபம் கதையின் ஆறு இழைகளும் நேர்ப்பாதையில் செல்லாமல், குறுக்கும் நெடுக்குமாக, இடமும் வலமுமாக மாறி மாறிச் சென்று, வாசிப்புச் சுகத்தை இன்னும் சுவாரசியமாகக் கொண்டுச் செல்கின்றன. ”கால்பந்து அளவிற்கான நூற்கண்டு அது இஷ்டத்திற்கு தாறுமாறாக பிரிந்து நான்லீனியர் இடியாப்பச் சிக்கலாய் விரிந்திருக்கிறது, இந்த நூலின் களத்தில். தென்கிழக்கு முனையை பிடித்து இழுத்தால் எதிர்பாராத சிக்கலான திசையில் எதிர் அசைவு தெரிகிற சுவாரசியம்.” என்கிறது கிழக்குப் பதிப்பகத்தின் அறிமுகம். இந்த வித்தையை முருகன் அனுபவித்தே செய்திருக்கிறார்.

“ மிகை படச் சொல்வது போல், அடைமொழி கொடுத்து அழைத்துப் பெயரை மனத்தில் பதிய வைப்பது போல், காலத்தில் முன்னே பின்னே சகஜமாக நகர்ந்து கண்ணிகளை முடியவும் இழுத்து அவிழ்க்கவும் அது ஒரு சௌகரியத்தைத் தருகின்றது” என தன் மேஜிகல் ரியலிசப் பயன்பாட்டைக் குறித்து முருகனே தன்னுரையில் கூறுவது முற்றிலும் உண்மையே. அவர் சௌகரியத்துக்கு மைதானத்தில் புகுந்து புறப்பட்டு ’ஆலப்பாட்டுத் தாத்தன் மாதிரி உயரப் பறந்து’ விளையாடியிருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு முதற்பகுதி கதைக்களம் எனக் கொண்டதால் அக்கால மொழிநடையை முருகன் பயன்படுத்தியிருப்பது சரி, அக்கால மதறாசப்பட்டணத்தையும், கண்ணூர், அம்பலப்புழை, கொல்லூர், தஞ்சாவூர், மொரிஷியஸ், லண்டன் இவற்றையெல்லாம் எப்படிக் காட்சிப்படுத்துவதாம்? ’1890-1920 கால கட்ட லண்டனையும் எடின்பரோவையும் சித்தரிப்பதில் சிரமமே இல்லை. ஆனால், அதே கால கட்ட சென்னையை ( மதறாஸ்) எழுத்தில் உருவாக்க அதிக முனைப்பு தேவைப்பட்டது’ என்று இதையும் அவரே ஒப்புக் கொள்ளுகிறார்.

விஸ்வரூபத்தின் உச்ச கட்டம் என்பது அதன் முத்தாய்ப்பாக வரும் இறுதிப்பக்கங்கள்தான். ஒரு படைப்பின் துவக்கம் எப்படி ஈர்த்து இழுத்து உட்காரவைத்து வாசிக்க வைக்க வேண்டுமோ, அதே போல, அதன் முடிவும் அமைந்து ஃப்ரீஸரில் வைத்த மல்லிகைப் பூவாய் காலத்திற்கும் வாசனை காட்டிக் கொண்டிருப்பது, படைப்பின் வெற்றிக்கு வலிமை சேர்க்கும். இங்கு வலிமை சேர்ப்பதோடு, அந்த இறுதிப் பக்கங்களில் இன்னும் கொஞ்சம் காலம் தங்கியிருந்து, வாசகனின் மனதை அலைபாய விட்டுவிடுகிறார் இரா.முருகன்.

அதிலும், குறிப்பாகச் சொன்னால்,……. சொத்துப் பத்திரத்தை வைத்துக் கொண்டு, அதோடு தொடர்புடைய புரபசர் வேதையன், நடேசன், ஏகாம்பரம், துர்க்காபட்டன் என அனைவரும் பத்திரம் குறிப்பிடும் இடத்தைத் தேடிச் செல்ல, அங்கே….. முருகனின் மொழிநடையில் இதோ!

’ புரபசர் கிருஷ்ணன் முன்னால் நடந்தார். தோளில் குடை ஆட கிருஷ்ணபட்டன் பின்னால் நடந்தான். ஹோட்டல்கார கிருஷ்ணனும், கிருஷ்ணன் வக்கீலுடைய குமஸ்தன் கிருஷ்ணனும் அவர்களுக்கு வழி காட்டுகிற மாதிரி கூடவே போனார்கள்.

……………. இந்த இடம் தான்.

கிருஷ்ணன் சொன்னார்.

கிருஷ்ணன் நின்றார்.

ஆள் ஒழிந்த பூமி அது.

இது மசானமாச்சே.

கிருஷ்ணன் ஆச்சரியத்தோடு சொன்னான். கிருஷ்ணன் ஏமாற்றத்தோடு கூவினான். கிருஷ்ணன் நம்ப முடியாத திகைப்போடு திரும்பத் திரும்பச் சொன்னான். கிருஷ்ணன் அடக்க முடியாமல் சிரித்தான்……….

…………கிருஷ்ணா என்னடா இது?

நீ எப்பவும் சொல்வியே அதேதான்.

கிருஷ்ணன் சத்தமில்லாமல் உச்சரித்தது என்ன என்று கிருஷ்ணனுக்கு அர்த்தமானது.
——————————–
கிருஷ்ணார்ப்பணம்….

முருகனின் ‘அச்சுதம் கேசவம்’ (அரசூர் நாவல்வரிசையில் மூன்றாவது) மேலும் சிறப்பாக அமைவதற்கு உங்கள் அனைவரது சார்பிலும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

(நன்றி பிரசாத், விரிவான இந்த மதிப்புரைக்கு. மிக்க நன்றி – இரா முருகன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன