Sujatha… more on Sujatha, stage plays and Taslimaசுஜாதா, சுஜாதா, சுஜாதா, நாடகங்கள், தஸ்லிமா…

எழுதிக் கொண்டிருக்கும் ‘சுஜாதா சிறுகதைகள் தொகுப்புரை’ யில் இருந்து. இறுதிப்பிரதியில் இது இருக்கலாம், உதிர்ந்திருக்கலாம். இந்த நிமிடத்து ஸ்னாப்ஷாட் –

சுஜாதா மொழிநடை அவருக்கு அடுத்த தலைமுறையை வெகுவாக பாதித்த ஒன்று. அவர் கதையில் ஒரு இடத்திலாவது எழுவாய் இல்லாமல் சட்டென்று ஒரு சொற்றொடர் தொடங்கும் – ’காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள்’ என்பது போல். யார் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள், எங்கே எப்போது என்பதெல்லாம் சாவகாசமாக வரும். வராமலும் போகலாம்.

இன்னொரு சுஜாதா பிரயோகம் ‘விரோதமாக’. ஜீவராசிகளுக்கு மட்டுமில்லாமல் உயிரற்ற பொருட்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்துவார். இயைந்து வராத தன்மையைக் குறிக்க இது.

‘மையமாகச் சிரித்தல்’ அடுத்தது. ஏதாவது நிலைபாட்டை ஏற்றுக் கொண்டேன் அல்லது ஏற்கவில்லை என்று சொல்ல மனமில்லாமல், எதிரே இருப்பவர் மனதை நோகடிக்காமல் விலகும் தன்மைக்கு இது பொருத்தமான சொற்றொடர். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கடினம்.

அதேபோல் ஒரிஜினல் சுஜாதா ப்ராண்ட் பிரயோகங்கள் – ஜல்லி அடித்தல், கோஷ்டியே அலைகிறது, குடலாப்பரேஷன் போன்றவை. அவருடைய வைணவப் பின்னணி காரணமாக அவர் கதைகளில் யாரும் யாரையும் வணங்குவதில்லை. அவர்கள் சேவிப்பார்கள்.

பரவலான வாசிப்பு காரணமாக அவரைப் படித்து எழுதத் தொடங்கிய 1970-களின் இளைஞர்களுக்கு இந்த சொல்லாடல்கள் நடையின் இயல்பான பகுதியாகி விட்டிருந்தன.

நான் மேஜிக்கல் ரியலிசத்தில் புகுந்ததே அந்தப் பாதிப்பில் இருந்து விடுபட்டு என் கதையாடலை உருவாக்கிக் கொள்ளத்தான். பாலகுமாரன் அவர் கவிதை மொழியைக் கதைக்குக் கொண்டு வந்து தன் சொந்த மொழியைக் கையாளவும் அதுவே காரணமாக இருந்திருக்கலாம். பாலகுமாரன் இரண்டாம் வேற்றுமை உருபை நாடு கடத்தி விட்டு ஜன்னல் திறந்தான் வானம் பார்த்தான் என்றபடி எழுதியதற்கும் பின்னோடிகள் வந்து சேர்ந்தது நகை முரண்.

—————————————————–

இன்னும் ஒரே ஒரு ஷ்னாப் ஷாட் – இறுதிப் பிரதியில் பார்த்தால் அடையாளம் தெரியாது போகலாம் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன் (சுஜாதா சிறுகதைகள் தொகுப்புரை எழுதும் போது)

குதிரைக் கிச்சாமி கதையை ராச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணையில் அறுபது வாட்ஸ் பல்ப் எரிய, தெருவில் சோன் பப்டி ஆகிய பாம்பே மிட்டாயை பெரிய தராசு மாதிரி கட்டித் தூக்கிக் கொண்டு ஒரு வடக்கத்திய வியாபாரி ‘ஹாங் ஜீ கரம் நா ஜீ நரம்’ என்று இந்தியில் ஏதோ பாடியபடி பெட்ரோமாக்ஸ் விளக்கு சகிதம் விற்றுக் கொண்டு போகிற ராத்திரியில் தான் படிக்க வேண்டும். தெருவே கேட்கும் அளவு அதிர்ந்து சிரித்து விட்டு ஐந்து ரூபாய்க்குக் கை நிறைய சோன் பப்டி தினத்தந்தி கும்பத்தில் சுற்றி வாங்கிக் கொண்டு பிடிப்பிடியாகச் சாப்பிட்டபடி இன்னொரு தடவை ரசித்துச் சிரித்து ஆனந்தப்பட வேண்டும். பட்டிருக்கிறேன். இப்போதும் சோன்பப்டியைப் பார்த்தால் குதிரை தான் நினைவு வருகிறது. கதை தான் என்ன?

கிச்சாமியைக் குதிரை கடித்து விட்டது.. அவ்வளவுதான். ஆமா, நான் ‘குளத்து ஐயர் அங்கியை மாட்டிக் கொண்டார்’ என்று சிறு நகரத்தில் ரேடியோ ரிப்பேர் செய்து பிழைக்கும் ஒரு பிராமணர் ஊரில் அவுட்டோர் ஷூட்டிங் வந்த படத்தில் ஒரு காட்சியில் பாதிரியாராக அழைக்கக் கூட்டிப் போவது பற்றி எழுதிய கதையின் முதல் வரி. அங்கேயே கதை முடிஞ்சுடுத்து முருகன் என்றார் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். குதிரை கிச்சாமியும் தேர்ந்த வாசகனுக்கு முதல் வரியிலேயே முடிந்திருக்கலாம். ஆனால் அதைப் படித்து வரிக்கு வரி, வரிகளுக்கு இடையில் வரும் நகைச்சுவையை அனுபவிக்க வேண்டி நான் உன்னத வாசகர் தகுதியை உதறித் தள்ளவும் தயார். தரை டிக்கெட்டில் உட்கார்ந்து விசில் அடித்து மனம் முழுக்க மகிழ்ச்சியோடு பார்க்க வேண்டிய எம் ஜி ஆர் படம் அது (எம் ஜி ஆருக்கும் குதிரைக்கும் சுஜாதாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டாம். ஒன்றும் இல்லை).

கதைசொல்லி கூற்றாக (இது ரொம்ப ஓவர் – இந்தக் கதைக்கு இப்படி பண்டிதத்தனமான பில்ட் அப் எல்லாம் கொடுத்தால் சுஜாதா என்னை மன்னிக்க மாட்டார்) ‘நான்’ – நேரடியாகக் கிச்சாமி என்ற மத்ய தர வர்க்கத்து, இளமையிலிருந்து நடு வயதுக்குப் போய்க் கொண்டிருக்கும் சாமான்யன் கிச்சாமி என்ற கதைத் தலைவன் தன் கதை சொல்கிறான்.

’எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!’

சுஜாதாவின் சிறப்பு வர்ணனைகளில் இந்தக் கதை முக்கிய இடத்தைப் பெறுகிறது. முனிசிபல் ஆஸ்பத்திரி, அதன் முன்னால் குதிரை லாயம் (பிட்ரகுண்டாவில் கூட இதே போல லாயம் இருக்கிறதாம்), ஸ்டவ் திரி வாங்க கிச்சாமி அகமது ஸ்டோருக்குப் போவது, டாக்டர் மருத்துவப் புத்தகத்தைப் பிரித்து குதிரைக்கடி என்று பொருளடக்கத்தில் தேடி உதட்டைப் பிதுக்குவது, அவர் சிறப்பு மருத்துவரிடம் போகும்படி சிபாரிசு செய்ய கிச்சாமியும் அவனைத் திட்டிக் கொண்டே மனைவியும் வெளியே வரும்போது கண்ணில் படுகிற, பனியனைத் தின்னும் பசுமாடு (அது பக்கத்திலே போகாதீங்க. அதுவும் கடிச்சு வைக்கப் போறது – மிசிஸ் கிச்சாமி’), ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே என்று ஜட்கா குதிரைகளில் பிஎச்டி வாங்கியது போல் நுண்மான் நுழைபுலத்தோடு தீர்மானமாகச் சொல்லும் மாமனார், கடித்த குதிரையை தினசரி பார்க்க கிச்சாமியின் நடை, ப்ருஹ்ஹ்ஹ் என்று சிரிக்கிற குதிரை.. சுஜாதா இந்தக் கதையை சின்னச் சின்ன நகாசு வேலைகளால் நிரப்பி இருக்கிறார். எந்த சிரமமும் இல்லாமல் கதை நகரும்போதே நகைச்சுவையும் நம்மை முழுக்கச் சூழ்ந்து கொள்கிறது. தணிந்த நகைச்சுவையில் சுஜாதா மாஸ்டர்பீஸாக இந்தக் கதையைச் சொல்வேன்.

—————————————————————–

சுஜாதா – இன்னொரு எழுத்துச் சில்லு. இங்கே பகிராத இன்னும் ஆறோ என்னமோ பாக்கி உண்டு…//

எங்க ஊர்லே பங்குனியில் உத்திரத் திருநாளுக்கு முந்தைய பத்து நாளும் திருவிழா. மண்டகப்படி. இங்கே பத்து கதையோடு சுஜாதா மண்டகப்படி ஜாம்ஜாம்னு நடக்க இருக்கிறது.

மண்டகப்படியில் ஒரு பொதுத் தன்மை கச்சேரியாக பந்தலில் உட்கார்ந்து வாசித்து, சாமி புறப்பாட்டோடு தொடர்ந்து வாசித்து முன்னால் வரும் நாதசுவர கோஷ்டிகள். பத்து நாளும் பத்து விதமான வித்வத் அனுபவிக்கக் கிடைக்கும்.

எந்த நாளில் யார் வாசித்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கம் காந்திவீதி சந்திப்பில் நாதசுவர கோஷ்டி நடு ராத்திரிக்கு நின்று சிந்து பைரவி ஆலாபனை ஆரம்பித்தால், போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு நாற்சந்திக்கு ஓடுவோம். ‘தாமரை பூத்த தடாகமடி’ அடுத்த அரைமணி நேரம் அமுதமாகப் பொழியும் என்று தெரியும்.

தேஷ் ராகத்தின் மூர்ச்சையைக் கோடி காட்டி ஒற்றை நாதசுவரத்தின் ஸ்ருதி வாஞ்சையாக அழைத்தாலும் அதே கதைதான். ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்று அடுத்து பாரதிதாசன் பாடல் காலத்தை உறையச் செய்யப் போகிறது என்று அர்த்தம்.

அதேபோல் ‘ஸ்ரீரங்கம்’ என்று சுஜாதா கதை தொடங்கினால், கைவேலையைத் தொப்பென்று போட்டு விட்டு அக்கடா என்று உட்கார்ந்து விடலாம். ஒவ்வொரு ஸ்ரீரங்கம் கதையும் ஒரு ரகம். சிலவற்றில் தேவதைகள் வந்து போவார்கள். சிலவற்றில் மெய்மறக்க வைக்கிற, குறை இருந்தாலும் சிரிக்க வைக்கிற, அலட்டிக் கொண்டு அலைகிற, பரம சாதுவாக எல்லோருக்கும் தொண்டனாக ஓடி நடக்கிற எத்தனை எத்தனையோ பாத்திரங்கள். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒவ்வொரு நாயக்கராக சலிக்காமல் அறிமுகமாகிறார்கள் என்று எழுதியிருந்தார் சுஜாதா. அவருடைய ஸ்ரீரங்கத்துக் கதை மாந்தர் கோபல்ல கிராமத்து மகாஜனங்கள் போல் எல்லா விதத்திலும் சுவாரசியமானவர்கள். சுஜாதா இன்னும் இருக்க மட்டும் நமக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவர் அறிமுகப்படுத்த இன்னும் எத்தனை சீரங்கத்தார் பாக்கி இருக்கிறார்களோ!

லண்டனில், சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற பிரபல எழுத்தாளர்களும், (ஆர்தர் கானண்டயிலின்) ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற சாசுவதமடைந்த கதாபாத்திரங்களும் சுவாசித்திருந்த லண்டன் தெருக்கள், சந்து பொந்துகளை எல்லாம் அந்த எழுத்தாளர்கள், கதாபாத்திரங்களில் நம்போல் ஊறிய வழிகாட்டிகள் சுட்டிக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி நம்மோடு நடந்து வரும் சிறப்பு நடை நிகழ்ச்சிகள் தினமும் உண்டு. பெரும்பாலும் தேம்ஸ் தீரத்தில், பிக்பென் கடியாரக் கூண்டுக்கு முன் நிரையில் இவை மதியச் சாப்பாட்டு நேரத்துக்குப் பிறகு தொடங்கும். சுஜாதாவின் ஸ்ரீரங்கக் கதைகளைப் பாராயணம் செய்த எழுத்து ரசிகர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களுக்காக ஸ்ரீரங்கம் சுஜாதா நடையை இங்கேயும் அறிமுகப்படுத்தலாம். இந்த நடையும் அவருடைய உரைநடை போல் பலரையும் பாதித்தாலும் வியப்பில்லை.

சுஜாதாவின் ‘உஞ்சவிருத்தி’ கதை புறக்கணிக்கப்பட முடியாத இப்படியான இன்னொரு ஸ்ரீரங்கக் கதை. தொடக்கத்திலேயே தேஷ் ராக ஆலாபனை போல் ஒரு சின்ன வர்ணனை. வாங்கப்பா, கதை சொல்லப் போறேன் என்று கூப்பிடுகிறார் சுஜாதா. இதோ வந்தோம் -.

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறானே பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த பதினைந்து நிமிடம் நாம் சந்திக்கிற முதியவரை ஜன்மத்துக்கும் மறக்க முடியாமல் செய்து விடுகிறார் சுஜாதா. சொந்தப் பிள்ளை, மருமகள் மேல் வன்மத்தோடு வளைய வருகிறார் பெரியவர்.

அவருக்கு குடும்பத்தினர் மேல் ஆயிரம் குற்றம் குறை.

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’
‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

குடும்பத்துக்கும் அவர் மேல் கோபம் உண்டு.

நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’

கண் நன்றாகத் தெரிந்தாலும் குச்சியைப் பிடித்துக் கொண்டு ஒரு வேத பாடசாலை பையன் வழி நடத்த, பெரியவர் திருநாடு ஏகியதும், அவனுக்குப் போகிறது வீடு. மீதிக் கதையைப் புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்.

கண்டாங்கரஸ் என்று சொல்வார்கள். அதுக்கு அடுத்து ஓல்ட் என்ற அடுத்த அட்ஜெக்டிவ் தன்னிச்சையாக விழும். இந்தப் பெரியவரை கண்டாங்கரஸ் ஓல்ட் மேன் என்று திட்ட முடியாது. காரணம் அவரையும் ரத்தமும் சதையும். மில்க் சாக்லெட்டில் ஆசையுமாக (இந்தப் பையனுக்கும் ஒரு சாக்லெட் கொடு) ஆக்கி உலவ விட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தொகுப்பு எதிலும் இடம்பெறாமல் போகாத கதை ‘உஞ்சவிருத்தி’.
———————————-

நேற்று ‘ஊருக்கு உரைப்போம்’ நிகழ்ச்சியில் (மக்கள் டிவி) நான் அறிமுகப்படுத்திய ’தடங்கலுக்கு மகிழ்கிறோம்’ – தன்னம்பிக்கை தரும் நூல் வகை- தினகரன் எழுதியது – வைகறை பதிப்பகம் ஒரு பிரதி உண்டு. யாருக்கு வேணும் ப்ளீஸ்?

———————————–
விஸ்வரூபம் நாவலுக்கு நண்பர் யுகமாயினி சித்தன் எழுதிய மதிப்புரை வரப் பெற்றேன். மாலை ஐந்து மணிக்கு, ‘Chiththan, you have made my day’ என்று அழைத்து, உரத்துக் கூவ வைக்கும் உரை. விரைவில் பத்திரிகையிலும் பின் இணைய தளத்திலும் வெளியாகும். நன்றி, Chithan Prasadh
———————————
நேற்று ஒருத்தர் கேட்டார் – ‘புல்லாங்குழல் மேதை சர்ப்ப சாஸ்திரிகள் பற்றித் தெரியுமா?’

ஊஹும். சரப சாஸ்திரிகள் தான் தெரியும்னேன்.

ஏதோ புத்தகத்தில் படித்தாராம். விஷயம் தெரிந்த ப்ரூப் ரீடர்கள், எழுதியவரிடம் சந்தேகம் கேட்கத் தயங்காத எடிட்டர்கள் இல்லாமல் பதிப்புத் துறை தடுமாறுகிறது.

மட்டுமா?

’மாமா வா பட்டாபிராமா’ என்று மனம் உருக தீட்சிதர் வேண்டினார் –

அப்படியெல்லாம் உறவு கொண்டாடவில்லையாக்கும்.
———————————
சபாநாயகரின் சிரிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது நண்பர் மாலன் குறிப்பிட்டார் – சிரிப்புக்கு ஏது வயது?

சிரிப்புக்கு வயதுண்டா?// பல்லு வேணுமே மாலன்?! ஆனா பாருங்க, விஷ்ராந்திக்கு ராஜம் கிருஷ்ணன் அவர்களை சந்திக்கப் போனபோது நம்ம திருப்பூர் கிருஷ்ணன் சொன்னார் – கல்லூரி பேராசிரியரும், சிறந்த மேடைப் பேச்சாளருமாக இருந்து ஓய்வில் இருக்கற பேராசிரியர் இந்திராவும் அங்கே தான் தங்கி இருக்கார், அவ்சியம் சந்திச்சுட்டு வாங்க முருகன்.. அவங்க சிரிப்பு மாதிரி ஒரு அழகான சிரிப்பை நான் பார்த்ததே இல்லை’.

திருப்பூர் சொன்னாரே என்று பேராசிரியர் இந்திரா அம்மையாரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சிரிப்பு, திருப்பூர் கிருஷ்ணன் சொன்னப்டிக்கு மிகமிக அழகானது. வாயில் ஒரு பல் கூட இல்லை.ஆனாலும் அவருடைய மகிழ்ச்சியை எல்லாம் கண்ணில் தேக்கி கண்ணால் சிரித்தபடி இருந்தார் அந்த மூதாட்டி…
——————————————
நண்பர் ஆனந்த ராகவ் மூலம் சில மாதங்கள் முன் ஷ்ரத்தா நாடகக் குழுவினர் நண்பர்களானார்கள் . குழுவைத் தொடங்கி, முன்னெடுத்துப் போகிற திரு சிவாஜி சதுர்வேதி, திரு TDS (T.D.சுந்தர்ராஜன்), டாக்டர் பிரேமா சதுர்வேதி இவர்களோடு ஒரு பெரிய இளைஞர் படையே துடிப்பாகச் செயல்படும் அமைப்பு இது.

இன்று ஷ்ரத்தா குழுவினரின் அடுத்த படைப்பான ‘நேற்று – இன்று -நாளை’க்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. நான் எழுதிய ‘ஆழ்வார்’, ‘சிலிக்கன் வாசல்’, ‘எழுத்துக்காரர்’ என்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு அது.

நண்பர்கள் ஒத்துழைப்போடு நன்றாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனந்த் ராகவுக்கு சிறப்பு நன்றி.

——————————————————————-

தஸ்லிமா நஸ்ரின் தேசப்பிதா மகாத்மா காந்தியைக் கடந்த இரண்டு நாட்களாகக் கேடு கெட்ட முறையில் ட்விட்டரில் அவமதித்து வருகிறார்.

பெண்ணுரிமை, செக்குலரிசம் என்றெல்லாம் சங்கு ஊதி இவருக்கு இந்தியாவில் தங்க புகலிடம் வாங்கிக் கொடுப்பதில் முன்னணியில் நின்ற ஞானபீட விருது பெற்ற கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய் போன்ற ’மகா எழுத்தாளர்கள்’ கூட இவர் சொல்வதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.

தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களுமாவது எழுப்பலாமே – எங்கள் தேசப்பிதாவை அவமதித்த தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியே அனுப்புக அரசே!

ட்விட்டரில் https://twitter.com/taslimanasreen என்று தேடினால் இந்தப் புழுத்து நாறும் வசைகள் கண்ணில் படும்.

நான் பொதுவாக எந்த நிலைத் தகவலையும் tag செய்வதில்லை. இந்தச் செய்தியின் முக்கியத்துவம் கருதி அதைச் செய்ய நேர்ந்தது. என் இனிய நண்பர்கள் எல்லோரும் (தற்போது 4076 பேர்) தத்தம் காலக் கோட்டில் இதை தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.
———————————————————————————-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன