Indian – Grade IIஇரண்டாம் தர இந்தியன்

பிரதமரின் சுதந்திர தின உரை யூடியூபிலும் வருகிறது. காணக் காத்திருக்கிறேன்.

ஒரு நிமிடம் முன் ஒரு தேச பக்திப் பாடல் (மிலே ஸ்வர் மேரா துமாரா போல்) திரையில் ஒலித்து, ஒளிர்ந்து கடந்தது. நல்ல பாடல். நல்ல காட்சியமைப்பு. ஆனால் என்ன, முழுக்க முழுக்க இந்தியில்.

மிலே ஸ்வர் போல் எல்லா மொழியும் வேண்டாம், குறைந்த பட்சம் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கில் இருந்து ஒரு மொழியாவது பாட்டில் வரலாமே?

நான் என்ன தான் இந்தியன் என்று உற்சாகமாக முன் வந்தாலும், ’நீ இரண்டாம் தரத்து இந்தியன்; இந்தி பேசுகிறவர்கள் மட்டுமே இந்தியர்கள் ’ என்று சுட்டிக்காட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பது கசப்பான உண்மை.
——————————————————–
சுதந்திர தினம் 2013 – பிரதமர் அணிவகுப்பைப் பார்வையிட, Wing Commander சீனுவாசன் என்ற கருத்த தமிழர் அவரை வழிநடத்திப் போகிறார். நாங்கள் இல்லாமல் இந்தியா இல்லை

சுதந்திர தினம் 2013 – எதிர்பார்த்தபடி இந்தியில் தான் பிரதமர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். உத்தர்கண்ட் துயரத்தில் தொடங்குகிறார். அந்த மாநில மக்களுக்கு எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி, நேரு, அடாமிக் கமிஷன்… தொடர்கிறார்.

சுதந்திர தினம் 2013 – ஏழை எளியவர்களுக்குப் புது அதிகாரம் கிடைத்தது (ஆம் ஆத்மி கோ நயா அதிகார் மிலே ஹை) – பிரதமர் தொடர்கிறார்

சுதந்திர தினம் 2013 – Food security bill – waiting before parliament – மூணு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி – உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – 7 புது ஐ ஐ டி, 8 புது ஐ ஐ எம்.. 5 தேசிய பல்கலைக் கழகம், 2 கோடி ஏழை எளிய மக்கள் குழந்தைகளுக்கு மத்திய சர்க்கார் வகையில் இலவசக் கல்வி, இலவச மதிய உணவு… இலவச மருத்துவ உதவி ஏழைப் பட்டவர்களுக்கு, வாழ்நாள் அதிகரிப்பு .. உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – நீண்ட பயணம்.. நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய.. லம்பி சஃபர், பஹுத் குச் கர்னா பாக்கி ஹை .. உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – அந்த நேரம் தொலைவில் இல்லை. நம் எல்லா துயரங்களில் இருந்தும் விடுதலை அடைவோம் .. ஓ வக்த் தூர் நஹி.. ஹமாரி பூரா முஷ்கில் சே ஆஸாதி ஹோ ஜாயஹா .. ஜன கன மன அதிநாயக .. பிரதமர் உரை முடிவு

அடுத்த வருடமும் இதே பேச்சு, இதே கூட்டம், இதே தலைவர்கள் அணிவகுப்பு, இதே இந்தி.. இதே சுதந்திரம்.. வைதீஸ்வரன் சார் சொன்னது போல், ‘இன்னும் சுதந்திரம்’ .. வ்ந்தேமாதரம்

——————————————————–

சுதந்திர தினம் 2013 – அஹமதாபாத் ஒளிபரப்பு. குஜராத்தியில் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் விட்டுக் கொண்டு ஆறு பேர் போக, பின்னணியில் ஏ ஆர் ரஹ்மான் ‘மா துஜே சலாம்’ பாட மோதி (மோடி) வரக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுமை இல்லை. வேறு யாராவது பார்த்து விட்டு எழுதுவார்கள்…

————————————————-
“There will be a general election in our country before I have the privilege of addressing you again on the eve of our next Independence Day. This great festival of democracy is an opportunity for us to elect a stable government which will ensure security and economic development. Every election must become a crucial milestone in our nation’s journey towards greater social harmony, peace and prosperity.”

மிக அழகாகச் சொன்னார் பிரனாப். (ஜனாதிபதியின் சுதந்திர தின உரை)

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனநாயகத் திருவிழாவாகத்தான் பார்க்கிறேன். மகிழ்வோடு பங்கு கொள்கிறேன். பொங்கல் முடிந்து கரும்பும் தின்று முடிவது போல் அடுத்த அரசு பதவி ஏற்ற சில மாதங்களில், மகிழ்ந்த நேரம் முடிந்து போகிறது.

—————————————————————–
காலையில் இருந்து வாசல் அழைப்பு மணி ஒலித்தபடியே இருக்கிறது. எங்க அப்பார்ட்மெண்ட் பசங்க, பக்கத்து அப்பார்ட்மெண்ட்களின் நண்டு சிண்டுகள், தெருக்கோடி வீட்டுக் குழந்தைகள் என்று மழலைப் பட்டாளங்கள் உரிமையோடு வீட்டுக்கு வந்து சின்னஞ்சிறிய மூவர்ணக் கொடியை அன்போடு கொடுக்கிறார்கள். சட்டை முழுக்க கொடிதான் என்று ஆகி விடும் போல் இருக்கிறது.

பத்து நிமிஷம் முன் மறுபடி அழைப்பு மணி. சலித்துக் கொண்டு போய்க் கதவைத் திறக்க (எழுதும் போது இடைஞ்சல் என்றால் இது வாடிக்கை) மிரள மிரள விழித்தபடி ஒரு ஏழெட்டு வயது சிறுமி.

என்னம்மா வேணும்?

அங்கிள், கொடி.

நான் சிரித்தேன்.

காசெல்லாம் தர வேணாம் அங்கிள்.

அவள் அவசரமாகச் சொன்னாள்.

கொடியைக் கையில் வாங்கிக் கொண்டேன்.

ஆமா, குண்டூசி எங்கே பாப்பா? எப்படி சட்டையிலே குத்திக்கறதாம்?

குண்டூசி தீர்ந்து போச்சு அங்கிள்.

அவள் ஓட்டைப் பல் தெரிய மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சிரித்ததும் அழகாகத் தான் இருந்தது.

சரிம்மா, தாங்க்ஸ். பேர் என்ன?

மெஹருன்னிசா.

மெஹருன்னிசா போய்விட்டாள். நான் குண்டூசி தேடிக் கொண்டிருக்கிறேன்.
————————————————————-

சுதந்திர தினத்தன்று நல்ல செய்தி. வெங்காய விலை குறையும்.

http://www.thehindu.com/news/national/karnataka/onion-prices-decrease-after-recording-a-high/article5020062.ece?homepage=true

(வெங்காயமும் உருளைக் கிழங்கும் இல்லாமல் நம் முன்னோர் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? ஆயிரம் வருடத்துக்கு முன்பே இவை இங்கே அறிமுகமாகி இருந்தால் நம் கலை,.இலக்கியத்தில் இவற்றின் தாக்கம் எப்படியாக இருக்கும்?

—————————————————————————
Young, better educated militants – this is the face of global terrorism.

I am not for the state to infringe on human rights to curb terrorism.

However, I cannot but agree to an extent with Obama, “You can’t have 100 percent security and also then have 100 percent privacy and zero inconvenience …we’re going to have to make some choices as a society. … There are trade-offs involved.”

http://www.theguardian.com/world/2013/aug/11/kashmir-conflict-new-wave-militants

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன